உன்னால் முடியும்: காலத்துக்கேற்ற தொழில்...
திருமணம் உள்ளிட்ட மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் உறவினர் கள், நண்பர்களுக்கு திரும்பிச் செல்கையில் தாம்பூல பை கொடுப்பது மரபு. அதில் இனிப்புகள் அல்லது தேங்காய் கொடுப்பதுதான் பொதுவான பழக்கம். கால மாற்றத்திற்கு ஏற்ப இந்த தாம்பூல பைகளில் கொடுக்கப்படும் பொருட் களும் மாறுகின்றன. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்குவதும் நடக்கிறது. அதில் வித்தியாசமாக மரபு ரக காய்கறி விதைகள் கொண்ட தாம்பூல பை என்கிற முயற்சியை எடுத்து அதை பரவலாக்கி வெற்றிபெற்றவர் பரமேஸ்வரன். இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.
பி.இ. ஏரோநாட்டிகல் இன்ஜினீயரிங் படித்தேன். ஆனால் வேலைக்குச் செல்வது ஏனோ பிடிக்கவில்லை. அப்பா வுடன் வீட்டு விவசாய வேலைகளில் இறங்கினேன். நான் விவசாய வேலை களில் ஈடுபட்டது அவருக்குப் பிடிக்க வில்லை என்றாலும் வேறு வழியில் லாமல் சகித்துக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் அவருடன் விவசாய வேலைகளைக் கவனித்ததில் நஷ்டம் எதனால் ஏற்படுகிறது என்பதைக் கணிக்க முடிந்தது. இதனால் விவசாய முறையை மாற்றுவதற்கான தேடலில் இறங்கினேன். இயற்கை விவசாய பயிற்சி வகுப்பு களுக்குச் சென்றதன் மூலம் தெளிவு கிடைத்ததுடன், விவசாயம் சார்ந்த தொழிலை உருவாக்கிக் கொள்வதற்கான அனுபவ அறிவும் கிடைத்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் எங்களது விவசாய நிலத்தில் லாபத்தைக் கண்டோம். தவிர வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது உள்ளிட்ட வேலைகளையும் கற்றுக் கொண்டு பிறருக்கு அமைத்து கொடுக்கத் தொடங்கினேன். நான் வேலைக்கு போய் சம்பாதித்தால் என்ன வருமானம் கிடைத்திருக்குமோ அதே அளவு வருமானம் இந்த வேலைகளிலிருந்தும் கிடைக்கத் தொடங்கியது. இதனால் எனது குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கத் தொடங்கியதுடன், எனது வேலைகளிலும் பங்கெடுக்கத் தொடங்கினர்.
எனது அடுத்த முயற்சியாக பாரம்பரிய விதைகளைச் சேகரிப்பது, பாதுகாப்பது, பிறருக்கு கொடுப்பது என்கிற நோக்கில் விதைகள் வங்கி உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஏனென்றால் மக்களுக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும் அளவுக்கு அதைச் செயல்படுத்திப் பார்ப்பதற்கான வாய்ப்புகளும் உருவாக வேண்டும். இதற்காக ஆர்வம் உள்ளவர்களுக்கு விதைகளைக் கொடுப்பது, விளைவித்த பிறகு அவர்களிடமிருந்தே விதைகளை வாங்கி பாதுகாப்பது இதுதான் விதை வங்கியின் நோக்கம். இதை சமூக வலைதளங்கள் மூலம் இயற்கை விவசாய ஆர்வம் கொண்டவர்களுக்கு கொண்டு சென்றேன்.
தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கு பயணம் செய்து நேரிலும் இயற்கை விவசாய ஆர்வலர்களைச் சந்தித்தேன். சிலரது வீடுகளில் தரமான நாட்டு ரகங்கள் விளைந்தால், விதைகளை வாங்கிச் செல்லவும் அழைப்பார்கள். அந்த சமயத்தில்தான் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் ஒரு நிகழ்ச்சிக்காக தாம்பூல பைகளில் விதைகளைத் தாருங்கள் என கேட்டார். அங்கு வாங்கிச் சென்ற பலரும், அடுத்தடுத்து தங்களது இல்ல நிகழ்ச்சிகளுக்கும் கேட்கத் தொடங்கினர்.
விதைகள் சேகரிப்பில் முக்கியமான விஷயம் அதை முளைப்புதிறனோடுப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நமது பாரம்பரிய விவசாய தொழில்நுட்பங் களைத் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நான் பல விவசாயிகளுடனும் தொடர்பில் இருக்கிறேன். தற்போது தொடர்ச்சியாக வீட்டில் பயன்படுத்தும் 10 காய்கறிகளுக்கான விதைகள் பை 25 ரூபாய் என்கிற விலையில் கொடுக் கிறோம். விதைகளுக்கான செலவு இருக் காது என்றாலும், அதை உபரியாக உள்ளவர்களிடமிருந்து பணம் கொடுத்து வாங்குகிறேன். என் குடும்பத்தினரும் இப்போது இதற்கான விதைகள் விளை வித்து தருகின்றனர். வேலைகளுக்கு ஏற்ப 10 நபர்களுக்கு வேலை வாய்ப்பு களையும் உருவாக்கியுள்ளேன்.
வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அதிகரித்து வரும் இந்த நாட்களில் எனது புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நம் மரபு ரக விதைகளை கொடுப்பதன் மூலம் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும் நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களுக்கு எளிய வழியில் நாட்டு ரக விதைகள் சென்று சேர்கின்றன. முக்கியமாக மங்கள நிகழ்வுகளில் கொடுப்பதன் மூலம் ஒரே சமயத்தில் அதிகப்படியான மக்களுக்கு விதைகள் சென்று சேர்கின்றன என்றார். நல்ல நோக்கம், அதிலிருந்து வருமானமும் வருகிறது என்றால் மகிழ்ச்சிதானே.
Comments
Post a Comment