குறள் இனிது: பேச்சு... கேட்பவருக்குப் பொருந்தணுங்க..!


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்
(குறள்: 711)
உங்கள் நிறுவனத்தில் பயிற்சிக் கல்லூரி ஏதேனும் இருக்கிறதா? அல்லது உங்கள் பணித்திறனையோ உங்கள் மேலாண்மைத் திறன்களையோ வளர்த்துக் கொள்வதற்காக மற்ற பிரத்யேகப் பயிற்சிக் கல்லூரிகளுக்குச் சென்ற அனுபவம் உண்டா?
இது போன்ற பயிற்சி வகுப்புகளின் பொழுது, ‘இங்கே ஏன் வந்தோம், இவர்கள் சொல்வது எதுவும் நமக்குப் புரியவும் இல்லை, உதவப் போவதும் இல்லை' என எண்ணியதுண்டா? அல்லது, ‘இவர்கள் சொல்வது எல்லாம் நமக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான். இதற்காக இங்கு வந்தது, இவ்வளவு செலவு செய்தது எல்லாம் வீண்' என்கிற எண்ணம் வந்தது உண்டா?
எனது நண்பர் ஒருவர் வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியாளர். 5 ஆண்டுகளாக அதே வேலை. பெயரா? குமார் என்று கண்டு பிடித்து விட்டீர்களே! ‘வங்கியில் மோசடியைத் தடுப்பது' எனும் தலைப்பில் பாடம் எடுக்க வேண்டும் என்றால், குமாரிடம் அந்த ஒரே பழைய சரக்குதான். அது கடைநிலை ஊழியராக இருந்தாலும், எழுத்தராக இருந்தாலும், அதிகாரி அல்லது மேலாளராக இருந்தாலும் ஒரே கதைதான், அதே பாட்டுத்தான்!
கீறல் விழுந்த சிடி மாதிரி 5 ஆண்டுகளுக்கு முன்பு சேகரித்த தகவல்களைக் கொண்டு, பயிற்சி பெறுவோரின் பணியின் தன்மையையோ, காலப் போக்கில் நடந்த மாற்றங்களையோ கணக்கில் கொள்ளாமல் பேசுவார்! ஐயா, உயரதிகாரிகள் கூடியிருக்கும் சபையில் பேசும் பொழுது, கொச்சையாகப் பேசினாலோ, மிகச் சாதாரணமான அடிப்படையான விஷயங்களைப் பேசினாலோ எடுபடுமா?
குமாருக்கு எப்பவுமே எளியவர்களிடம் தனது மேதாவிலாசத்தைக் காண்பிப்பது பிடிக்கும். எனவே பியூன்கள் வந்தால் மிஸ்பியாசென்ஸ் (misfeasance) ஃபோர்ஃபீட்டிங் ( forfeiting) போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர்களை அசத்திவிட்டதாக நினைத்து மகிழ்ந்து போவார்! ‘உங்கள் பேச்சின் வெற்றி நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதில் இல்லை, கேட்பவர்கள் என்ன புரிந்து கொண்டார்கள் என்பதில்தான் இருக்கிறது' என்கிறார் மேடைப் பேச்சாளர்களின் வாத்தியாரம்மாவான லில்லி வால்ட்டர்ஸ்!
அரசியலோ, ஆன்மிகமோ, இலக்கியமோ எதுவாக இருந்தாலும் கேட்பவர் ‘லெவ’லுக்கு இல்லாவிட்டால் வீண்தானே? அலுவலகக் கூட்டங்களுக்கும் இது பொருந்துமல்லவா? பேசப் போவதற்கு முன்பு அப்பேச்சைக் கேட்கப் போவது யார், அவர்களது அறிவு, அனுபவங்களின் நிலை என்ன என அறிந்து அதற்குத் தக்கத் தமது பேச்சை அமைத்துக் கொள்ள வேண்டுமில்லையா? எந்த ஒரு சொற்பொழிவிலும், வாதத்திலும், வேண்டுகோளிலும், கட்டளையிலும், அந்தப் பேச்சு வெற்றி பெறுவதற்கு, அது கேட்பவருக்குப் புரிகிற வார்த்தைகளிலும், தோரணையிலும் இருக்க வேண்டுமில்லையா?
‘கிட்டத்தட்ட சரியான வார்த்தை என்பதற்கும், பொருத்தமான சொல் என்பதற்குமான வித்தியாசம், மின்மினிப் பூச்சிக்கும் மின்னலுக்கும் உள்ள வேறுபாடு போன்றது' என்பார் மார்க் ட்வைன்! பல்வேறு கருத்துகளைக் கொடுக்கக் கூடிய சொற்களின் இயல்பை உணர்ந்து, அவையினரின் தன்மை, புரிதலுக்கேற்பப் பேச வேண்டுமென்கிறது குறள்!

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்