இதயம் காக்க இரண்டு முறை!
ப
ற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் மட்டுமே புத்துணர்வாக இருப்பதில்லை. நலமான பற்கள், நலமான இதயத்துக்கும் உதவுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
பல் ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள பாக்டீரியா ரத்தத்தில் கலந்து ரத்த நாளங்களில் ரத்த உறைவை ஏற்படுத்துகிறது. இது பல்வேறு இதய நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.
“பல் ஈறு நோய்களால் ஏற்படும் வீக்கமும் இதயத்தில் ரத்த உறைவு உருவாகக் காரணமாக இருக்கின்றன. இந்த ரத்த உறைவு, இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது. அதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து, மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்” என்கிறார் டெல்லியில் உள்ள பி.எல்.கே. பல்நோக்கு மருத்துவமனையின் இதய நலத் துறைத் தலைவர் மருத்துவர் சுபாஷ் சந்திரா.
வாயால் வால்வில் தொற்று
இதய வால்வுப் பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படும் ‘எண்டோகார்டிட்டிஸ்’ எனும் நோயால் பாதிக்கப்பட்ட நீலம் என்கிற 18 வயதுப் பெண்ணுக்குச் சமீபத்தில் இவர் சிகிச்சை அளித்துள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு வாயில் உள்ள பாக்டீரியாவால் இதய வால்வில் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதய வால்வுகளில் ஏற்படும் தொற்றுகள் பொதுவாக பாக்டீரியாவால் ஏற்பட்டாலும், மிக அரிதாக பூஞ்சைகளாலும் உருவாவதற்கான சாத்தியமும் உண்டு. பல் துலக்காமல் போனால், வாயில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவை இதய வால்வுகளுக்குச் சென்று, தொற்றுகளை ஏற்படுத்தும்.
ஊறு செய்யும் ஈறு
புகையிலைப் பயன்பாடு, சரியான ஊட்டச்சத்து இல்லாமை, நீரிழிவு போன்ற காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுவதுபோலவே ஈறு நோய்களாலும் இதயம் பாதிக்கப்படலாம். ரத்தக் குழாய் சார்ந்த இதய நோய்களுக்கு, முறையாகப் பல் துலக்காமையே காரணம்.
“முறையாகப் பற்களை சுத்தம் செய்யாமல் இருப்பதால் இரண்டு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று பல் ஈறுகளின் வீக்கத்தில் உள்ள கிருமிகளால் பல் தாடை எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. இன்னொன்று, ஈறுகளில் உண்டாகும் ரத்தக் கசிவை விழுங்குவதால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது” என்கிறார் குருகிராமில் உள்ள பாரஸ் மருத்துவமனையின் இதய அறிவியல் துறைத் தலைவர் மருத்துவர் தபன் கோஷ்.
அடுத்த முறை, பல் துலக்க வேண்டுமா என்று சலிப்பு ஏற்படும்போது, உங்கள் இதயத்தையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்!
Comments
Post a Comment