குழப்பலாமா குமார்..?
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு (குறள்: 634)
|
வங்கிகளில் ஒரு முக்கியமான வேலை கடன் கொடுப்பது. வீட்டுக்கடன், கார் கடன் மட்டுமில்லைங்க. ரூ.10 கோடி, ரூ.20 கோடி என வர்த்தக நிறுவனங்களுக்குக்கொடுப்பார்களே, அதைச் சொல்கிறேனுங்க.
இந்த மாதிரியான பெரிய கடன்களுக்கு ஒப்புதல் கொடுக்கும் அதிகாரம் கோட்ட மேலாளர் போன்ற மேலதிகாரிகளிடம் இருக்கும். எனவே வங்கிக் கிளையிலிருந்து இதற்கான பரிந்துரை அனுப்பப்படும். அதுவே ரூ.50 கோடி, ரூ.100 கோடி போன்ற பெரிய தொகைகளுக்கான கடன் என்றால், விண்ணப்பம் வங்கியின் தலைமையகத்திற்கு அனுப்பப்படுமில்லையா?
பெரிய கடன்களுக்கான பரிந்துரைகளைத் தயார் செய்வது ஒரு தனிக்கலை! வங்கிகளின் கடன் பிரிவுகளில் உள்ள சிலர் இதில் அனுபவமும் தேர்ச்சியும் பெற்று இருப்பார்கள். அவர்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள், தங்கள் வங்கியின் சட்ட திட்டங்கள் நன்கு தெரிந்திருக்கும்... தெரிந்திருக்க வேண்டும்! இல்லைங்களா பின்னே? நடந்ததை வைத்து, நடக்கப் போவதைச் சொல்லி, கடன் அளவை, அதற்கான விதிகளை, நிர்ணயிக்கும் விஞ்ஞானமும் ஆயிற்றே!
அண்ணே, எந்த ஒரு கடன் விண்ணப்பத்திலும் நல்லது கெட்டது இரண்டும் தானே இருக்கும்? விற்பனை அதிகமாகியது, ஆனால் லாபம் குறைந்து விட்டது என்றால் அதற்கான காரணங்களைச் சொல்லி, இருந்தும் ஏன் கடன் கொடுக்கலாம் என்பதை ஆவணப்படுத்த வேண்டுமில்லையா?
இந்த மாதிரி பரிந்துரைகளைப் படிக்கப் படிக்கப் பிடிக்குங்க! ஏதோ கையைப் பிடித்துக் கூட்டிப் போவதைப் போல இருக்கும்!
வாடிக்கையாளரின் சரித்திரத்தைச் சொல்லி, அவர் கணக்கின் சாதக பாதகங்களைக் குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை விளக்கி, இனிமேல் அத்தவறுகள் ஏன் நடக்காது எனவிளக்கியிருப்பார்கள். இறுதியாக அதன் நன்மைகளைப் பட்டியலிடுவார்கள். கிட்டத்தட்டப் புகழ்வார்கள்! அப்புறம் என்ன? ஒப்புதல் கையெழுத்தை மகிழ்ச்சியாகப் போடலாம்!
ஆனால் நம்ம குமார் போன்றவர்களின் பரிந்துரைகளைப் படித்தால் மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுதான்!
தன்னைப் பாதுகாத்துக் கொள்வதாக நினைத்துக் கொண்டு விண்ணப்பதாரரின் தீமைகளை வரிசையாகப் பட்டியலிடுவார் அவர்! ஆனால் அவைகளை மீறி ஏன் கடன் கொடுக்க வேண்டும் என எழுத மாட்டார்! அதை விட வேடிக்கை, மேற்கூறிய காரணங்களால் கடனைப் பரிந்துரை செய்கிறேன் என முடிப்பார்! தமது மேதாவிலாசத்தைக் காண்பிப்பதற்காகப் பல புள்ளி விபரங்களை இணைத்து மேலும் குழப்புவார்!
`புள்ளி விபரங்கள் தகவல்கள் ஆகாது. தகவல்கள் அறிவாகாது. அறிவு புரிதலாகாது. புரிதல் மதிநுட்பம் ஆகாது’ என கிளிபர்ட் ஸ்டோல் சொல்வது உண்மை தானே! ஒரு முறை குமார் 102 பக்கங்களில் ஒரு பரிந்துரைஅனுப்பியதைப் பார்த்த மேலதிகாரி அதன் சுருக்கத்தை அனுப்புமாறு கேட்டார். குமாரும் அனுப்பினார்.. 54 பக்கங்களில்!
ஐயா, எதை எவ்வளவு சொன்னாலும், அத்துடன் ஒரு தெளிவான முடிவையும் சொல்லணுமில்லையா? செயலை ஆராய்ந்து தெளிதலிலும், அதைச் செய்து முடித்தலிலும், செய்யத் தகுந்ததை உறுதியாய்ச் சொல்வதிலும் வல்லவர் அமைச்சர் என்கிறது குறள்!
Comments
Post a Comment