மோசடி திட்டங்களை கண்டுபிடிப்பது எப்படி?


பே
ன் கார் கிளப்ஸ், பேர்ல் அக்ரோடெக், அல்கெமிஸ்ட் இன்பிரா ரியால்டி இந்த நிறுவனங்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பல மடங்கு உயர்ந்த பங்குகள் அல்ல இவை. இருந்தாலும் இந்த நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாயை சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக திரட்டி இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் வரை 196 நிறுவனங்கள் மீது செபி வழக்கு தொடுத்திருக்கிறது. தேக்கு மரம் வளர்ப்பில் ஆரம்பித்து ஒவ்வொரு கால கட்டத்திலும் பல வகைகளில் மோசடி நிறுவனங்கள் உருவாகின்றன. இது போன்ற போலி நிறுவனங்களை அடையாளம் காண முடியாமல் சிறு முதலீட்டாளர்கள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர்.

மோசடிகள் என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் பல பொன்சி திட்டங்களை செபி கண்டறிந்திருக்கிறது. பேன் கார்ட் கிளப்ஸ் என்னும் நிறுவனம் கடந்த 10 ஆண்டு காலத்தில் ரூ.7,000 கோடி அளவுக்கு முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டி இருக்கிறது. விடுமுறையை கொண்டாடுவதற்கான திட்டம் என்னும் பெயரில் பல ஆயிரம் கோடியை இந்த நிறுவனம் திரட்டி இருக்கிறது. விடுமுறை திட்டத்தை திருப்பி கொடுக்கும் பட்சத்தில் அதிக வட்டி கிடைக்கும் என விளம்பரம் செய்து அதிக தொகையை திரட்டியது. கடந்த 2014-ம் ஆண்டு செபி இந்த நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுத்தது.
பிஏசிஎல் நிறுவனம் 1996-ம் ஆண்டு முதல் இது போன்ற நிதி திரட்டுவதை தொழிலாக வைத்திருக்கிறது. 5 கோடி வாடிக்கையாளர்களிடம் ரூ.49,100 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்த தொகையை நிலத்தில் முதலீடு செய்து கூடுதல் நிதியை தருவதாக வாடிக்கையாளர்களிடம் வாக்குறுதி கொடுத்தது. (சிலருக்கு பணத்தையும் கொடுத்தது). ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இந்த நிறுவனத்தால் வழங்க முடியவில்லை. முறைகேடாக நிதி திரட்டி இருப்பதை கடந்த 2014-ம் ஆண்டு செபி கண்டறிந்தது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையை செபி எடுத்து வருகிறது. சொத்துகளை விற்பதற்கான நடவடிக்கையை எடுத்தாலும், முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்த மொத்த தொகையும் கிடைப்பதில்லை. அதனால் இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து கஷ்டப்படுவதை விட, முறைகேடான திட்டங்களை கண்டறிந்து அவற்றில் முதலீடு செய்யாமல் இருப்பதே நல்லது.

கூட்டு முதலீட்டு திட்டம் என்றால்?

2014-ம் ஆண்டு செபி சட்டத்தின் படி ரூ.100 கோடிக்கு மேல் திரட்டப்படும் கூட்டு திட்டங்கள் ஏதாவது அமைப்பின் கீழ் மட்டுமே செய்யப்பட வேண்டும். கூட்டுறவு சங்கம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் டெபாசிட், இன்ஷூரன்ஸ், பென்ஷன் திட்டங்கள், கார்ப்பரேட் டெபாசிட், நிதி, மியூச்சுவல் பண்ட் மற்றும் சிட் உள்ளிட்ட பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் மட்டுமே நிதி திரட்ட முடியும். இந்த பட்டியலில் இல்லாத நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் நிதி திரட்டும் பட்சத்தில் அது மோசடி திட்டம்தான்.
இந்த அனைத்து திட்டங்களிலும் முதலீட்டாளர்கள் பணத்தை முதலீடு செய்து லாபத்துக்காக காத்திருக்கின்றனர். முதலீடு செய்த பிறகு அந்த திட்டத்தின் தினசரி நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள முடியாது. கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் வரையில் மோசடியாக திரட்டப்பட்ட கூட்டுத் திட்டங்கள் குறித்து செபியின் இணையதளத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒருவேளை இது போன்ற திட்டங்களில் நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவராக இருந்தால் என்ன செய்வது. நீங்கள் முதலீடு செய்திருக்கும் ஆவணங்களை முதலில் பத்திரப்படுத்துங்கள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த ஆவணங்கள் உதவும். பிரச்சினை உருவாகும் சமயத்தில் நிறுவனத்தின் தரப்பில் இருந்து சமரச பேச்சு வார்த்தைகள் தொடங்கும். குறைந்தபட்ச தொகையை கொடுத்து உங்களிடம் இருக்கும் உண்மையான ஆவணங்களை நிறுவனம் மீட்க முயற்சி செய்யும். செபி மற்றும் நீதிமன்றத்திடம் இருந்து முழுமையான உத்தரவு வரும் வரையில் சமரச பேச்சு வார்த்தைக்கு இணங்க வேண்டாம்.
நிறுவனத்துக்கு எதிராக தீர்ப்பு வந்த உடன், இணையதளம்,பத்திரிகை விளம்பரம் ஆகியவை வெளியிடப்படும். உதாரணத்துக்கு பிஏசிஎல் வழக்கினை எடுத்துக்கொண்டால், சொத்துகளை விற்பதற்காக நீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது. இந்த கமிட்டியில் உண்மையான ஆவணங்களை சமர்பிக்கும் பட்சத்தில் ரீபண்ட் வாங்கிக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்