ஏலத்துக்கு வருகிறது ஹிட்லரின் மெர்சிடஸ் பென்ஸ்
ஏலத்துக்கு வருகிறது ஹிட்லரின் மெர்சிடஸ் பென்ஸ்
ஜெ
ர்மனியின் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய மெர்சிடஸ் பென்ஸ் கார் ஏலத்துக்கு வருகிறது. 1939-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த மாடல் கார் அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாகாணத்தில் ஏலம் விடப்பட உள்ளது. இந்த கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட 4 அரிய வகை கார்களில் இதுவும் ஒன்றாகும். இது 7.7 லிட்டர் சூப்பர் சார்ஜ்டு இன்ஜினை கொண்டது. இதில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். சூப்பர் மெர்சிடஸ் என்ற சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கார் ஜனவரி 17-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இதே நாளில்தான் ஆண்டுதோறும் புராதன கார்களின் அணி வகுப்பு நடத்தப்படுமாம்.
இந்த காரின் நெம்பர் பிளேட் 1 ஏ 148461 என்ற எண்ணைக் கொண்டுள்ளது. பிரான்ஸை வீழ்த்திய பிறகு நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் இந்த காரில்தான் நகரை வலம் வந்தாராம் ஹிட்லர். இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்ட போது இந்தக் காரைத்தான் பயன்படுத்தினாராம்.
இந்த கார் சிறிது காலம் பெல்ஜியத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்ததாம். பின்னர் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த வெளிநாட்டு போர்களில் வெற்றி பெற்ற மூத்த ராணுவ வீரர்களின் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு அணி வகுப்பில் பயன்படுத்தப்பட்டது. பிறகு பலரது கை மாறி ஐரோப்பாவைச் சேர்ந்த பழைய கார்களை சேகரிப்பவரிடம் 2002-ம் ஆண்டு வந்து சேர்ந்தது. பிறகு அவரிடமிருந்து ரஷியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் 2009-ம் ஆண்டில் வாங்கினார்.
இந்த கார் அதிக விலைக்கு ஏலம் போகும் என மதிப்பீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஏலத்தில் பங்கேற்குமாறு உலகெங்கிலும் உள்ள ஏல நிறுவனங்களுக்கும்,பெரும் செல்வந்தர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment