கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யலாமா?
வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் சூழலில், ஓய்வு பெற்றவர்கள் அதிக வருமானம் ஈட்டும் நிரந்தர திட்டங்களைத் தேடி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் ஒரு வாய்ப்பாக இருக்கும். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பண்ட்கள் 8 முதல் 12 சதவீதம் வரை வருமானத்தை கொடுத்திருக்கின்றன. கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் மூன்று ஆண்டு களுக்கு மேல் முதலீடு செய்யும் பட்சத்தில் வருமானத்தின் மீது குறை வாக வரி செலுத்தினால் போதுமானது. ஆனால் இந்த காரணத்துக்காக மட்டும் பிக்ஸட் டெபாசிட்களில் இருந்து கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களுக்கு மாற வேண்டாம். மாறுவதற்கு முன்பு நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்.
கடந்த கால வருமானம் நிலையல்ல
பங்குச் சந்தை மியூச்சுவல் பண்ட் களை போல, கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களின் கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் கிடைக்காமல் போவதற் கான வாய்ப்பு இருக்கிறது. கடன் பத்திரங்களின் விலை ஏற்றத்தை பொறுத்தே கடன் சார்ந்த பண்ட்களின் என்.ஏ.வி உயரும். பொதுவாக வட்டி விகிதம் குறையும் போது கடன் பத்திரங்களின் விலை உயரும். கடந்த மூன்று ஆண்டுகளாக வட்டி விகிதம் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரெபோ விகிதம் 8 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 6.25 சதவீதமாக உள்ளது. இதன் காரணமாக கடன் சந்தையில் ஏற்றம் உருவானது. இந்திய அரசு 10 ஆண்டு கால கடனை 9 சதவீத வட்டியில் வாங்கி வந்தது. தற்போது 6.8 சதவீதத்துக்கு வாங்குகிறது.
லிக்விட் பண்ட்கள், குறுகிய கால பண்ட்கள், மிக குறுகிய கால பண்ட்களில் ஆண்டு வருமானம் 8 முதல் 9 சதவீத அளவில் இருந்தது. நடுத்தர கால மற்றும் இன்கம் பண்ட்களின் ஆண்டு வருமானம் 10 முதல் 12 சதவீதமாக இருக்கிறது.
ஆனால் தற்போதைய நிலையில் இருந்து வட்டி விகிதம் மேலும் சரிவதற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்சம் 5.5 சதவீதம் வரை மட்டுமே ரெபோ விகிதம் இந்தியாவில் சரிந்திருக்கிறது. தவிர பணவீக்கம் உயர்ந்து வருவதால் வட்டியை குறைக்க வாய்ப்பு இல்லை என ரிசர்வ் வங்கி சூசகமாக அறிவித்திருக்கிறது.
அதனால் கடந்த மூன்று ஆண்டுகளில் வழங்கிய வருமானத்தை விட அடுத்து வரும் ஆண்டுகளில் குறைவான வருமானத்தை கொடுக்கும். ஒருவேளை வட்டி விகிதம் உயர்ந்தால் குறுகிய காலத்துக்கு நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. அதனால் கடன் சார்ந்த பண்ட்களில் வருமான எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இரட்டை இலக்க வருமானம் கிடைப்பதற்காக வாய்ப்பு குறைவு.
ஏற்ற இறக்க வருமானம்
பிக்ஸட் டெபாசிட்டில் மிகப்பெரிய சாதகம் நிலையான வட்டிதான். ஆனால் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் வருமானம் மாறிக்கொண்டு இருக்கும். ஒரு ஆண்டில் அதிகமாகவும் மறு ஆண் டில் மிக குறைவாகவும் வருமானம் கிடைக்கக்கூடும். உதாரணத்துக்கு லாங் டேர்ம் கில்ட் பண்ட்களை எடுத்துக்கொண்டால் ஒரு சில ஆண்டு களில் 11 சதவீத வருமானம் கிடைக்கும், சில ஆண்டுகளில் குறைந்தபட்சம் 4 சதவீதம் கூட கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் மூத்த குடிமக்களுக்கு கடன் சார்ந்த பண்ட்கள் நிலையான வருமானத்தை அனைத்து சமயங்களிலும் கொடுக்க இயலாது.
நஷ்டம் கூட வரலாம்!
கடன் சார்ந்த பண்ட்களில் முதல் முறையாக முதலீடு செய்பவர்கள் நஷ்டம் வருவதை அதிர்ச்சியாகப் பார்க் கக்கூடும். வட்டி விகிதம் உயர்த்தப் படும்போது கடன் பத்திரங்களின் விலை கடுமையாக சரியக்கூடும். இதன் காரண மாக என்.ஏ.வி.யில் இழப்பு ஏற்படலாம். கடன் சார்ந்த பண்ட்களில் பலவிதமான கடன் பத்திரங்கள் இருக்கும். ஏதேனும் ஒரு கடன் பத்திரம் திவால் அல்லது பிரச்சினையானால் அந்த பண்டின் என்.ஏ.வி. குறையும் வாய்ப்பு இருக் கிறது. சமீபத்தில் இந்த இரண்டு வகை யிலும் என்.ஏ.வி நஷ்டம் ஏற்பட்டது.
டாரஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் நான்கு கடன் சார்ந்த பண்ட்களில் 7 முதல் 11 சதவீதம் வரை ஒரே நாளில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் சார்ந்த பண்ட்களில் பல்லார்பூர் நிறுவனத்தின் கடன் பத்திரத்தின் மதிப்பு குறைக்கப்பட்டது. இந்த பத்திரங்களில் நான்கு பண்ட்களும் முதலீடு செய்திருந்ததால் சரிவு ஏற்பட்டது. இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில் இதுபோன்றவற்றை தவிர்க்க முடியாது. மூத்த குடிமக்கள் தங்களுடைய அவசரகால தொகையை இதுபோன்ற பண்ட்களில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.
வரிச்சலுகை மாறலாம்
கடன் சார்ந்த பண்ட்களில் வரிச் சலுகைகள் இருக்கிறது உண்மைதான். ஆனால் வரி விகிதங்கள் தொடர்ந்து மாறி வரும் சூழ்நிலையில் வரிச்சலுகைக் காக மூத்த குடிமக்கள் மாறுவது சிறப் பான யோசனையாக இருக்காது.
Comments
Post a Comment