உன்னால் முடியும்: மக்கள் மனத்தடையில் இருந்து வெளியே வர வேண்டும்
மாற்று எரிசக்தி பயன்பாட்டை வீடுகளுக்கு அமைத்துக் கொடுப் பதைவிடவும், பள்ளிகள், கல்லூரிகள் அளவில் கொண்டு சேர்க்கும் பணியில் இருக்கிறார் கரூரைச் சேர்ந்த ரமேஷ். பலரும் பயோகேஸ் தயாரிக்கும் சாதனங்களை அமைத்து கொடுத்தாலும், இவர் தயாரிக்கும் கலன்கள் நவீன வடிவில் உள்ளன. மிகச் சிறிய அளவில் டேபிளில் வைக்கும் அளவுக்கு கலன் தயாரித்து கவனத்தைப் பெற்றுள்ள இவரது தொழில் அனுபவம் இந்த வாரம் ‘வணிக வீதி’யில் இடம்பெறுகிறது.
“படித்தது பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். படித்து முடித்ததும் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பைபர் மோல்டிங் முறை யில் உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் அது. சில ஆண்டுகளில் அந்த வேலையிலிருந்து விலகியதுடன், அவர்களுக்கே ஜாப் ஒர்க் முறையில் அதைச் செய்து கொடுத்தேன். பைபர் மோல்டிங் முறையில் நீண்ட காலத்துக்கு உழைக்கும் பொருட்களை உருவாக்கலாம். தண்ணீர்த்தொட்டி போன்ற தயாரிப்புகளை வீட்டுக்கு செய்து வைத்தேன். வீட்டில் பயோகேஸ் அமைக்க முடிவு செய்தபோது பைபர் மோல்டிங் முறையில் கலன் செய்தேன். இதைத் தனியாக தொழிலாக செய்தால் என்ன என்கிற யோசனையில்தான் முதலில் இறங்கினேன். ஆனால் பலரும் எனது வடிவமைப்பு முறை நன்றாக இருப்பதாக கூறியதுடன், அவர்களுக்கும் செய்து வாங்கினர்.
பயோகேஸ் தயாரிப்பு தொழில் நுட்பத்தை தேவைகளுக்கு ஏற்ப அமைத்து கொடுப்பததை ஏற்கெனவே தொழிலாக பலரும் செய்து வருகின்றனர். மாற்று முயற்சி என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கலன்களைச் செய்கின்றனர். சிமெண்ட் தொட்டி, பிளாஸ்டிக் பீப்பாய், இரும்பு கலன்கள் என்கிற வகையில்தான் தயாரிக்கின்றனர். இவை எல்லாம் ஒரே அளவில்தான் இருக்கும். வாடிக்கையாளரின் தேவை எவ்வளவு என்பதற்கு ஏற்ப இருப்ப தில்லை. தவிர நீண்ட நாட்கள் நீடித்து உழைக்காது. ஆனால் நான் தயாரிக்கும் பைபர் மெட்டீரியல் நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும்.
தவிர ஒவ்வொரு வீட்டுக்கும் எந்த அளவுக்கு தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப பிரத்யேகமாக தயாரிக்க முடியும். முக்கியமாக நவீன வடிவில் ஸ்டைலாகவும் இதை தயாரிக்கிறோம். கசிவுகள் வராது என்பதுடன் பராமரிப்பதும் எளிது.
பயோகேஸ் தொழில்நுட்பத்தின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்வது எளிதானது. சிறிய குடும்பம் முதல் தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்கு ஏற்பவும் மாற்று எரிசக்தி எரிவாயுவை உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு இன்னும் பரவலாக செல்லவில்லை. இதனால் இதை விற்பனைக்கு கொண்டு செல்வது சவாலாகவே இருந்தது.
அதனால் இதை முழுநேரத் தொழிலாகக் செய்ய வேண்டுமெனில் ஆய்வு தேவைக்கு ஏற்ப மாணவர்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டேன். இதற்காக சிறிய அளவிலான கலன்களை வடிவமைத்துக் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் கல்லூரிகளை அணுகிவருகிறேன். இதன்மூலம் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உருவாவதுடன், புராஜெக்ட் தேவைகளுக்காகவும் வாங்குகின்றனர்.
இந்த தொழிலில் புதிய முயற்சியாக நான் நினைப்பது எனது கலன் வடி வமைப்பு. இதற்காக நான் பலரும் தயா ரிக்கும் கலன்களையும் வாங்கி சோதனை செய்கிறேன். இதற்காக கரூரில் தனியாக ஆய்வகத்தையும் நடத்தி வருகிறேன். அதற்கடுத்து மாணவர்கள் வகுப்பறைக் குள் சோதனை செய்யும் நோக்கில் கொண்டு சென்றதும் முக்கியமானதாகும். இதனால் மாற்று எரிசக்தி குறித்த அறிவை அவர்கள் வகுப்பறைக்குள்ளேயே கற்றுக் கொள்கின்றனர்.
இப்போது 6 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதுடன், பலருக்கும் மறைமுக வேலைவாய்ப்பு களை உருவாக்க முடிகிறது. அரசு தரப் பில் இவற்றுக்கு ஊக்கம் அளித்தாலும் மக்கள் தங்களது வீடுகளில் பயன்படுத்தும் அளவிற்கு பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு ஊரிலும் வேலைவாய்ப்புகளை உரு வாக்கும் தொழில் என்றே கருதுகிறேன்.
பயோகேஸ் பயன்படுத்துவது தன்னிறைவான பொருளாதார முயற்சி. மிக எளிதாக தங்களது எரிபொருள் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். ஆனால் வழக்கமான எரிபொருள் பயன்பாட்டில் இருப்பவர்கள் தங்களது மனத்தடையை உடைத்து திரும்ப வேண்டும் என்பதே என் ஆசை” என்றார்.
Comments
Post a Comment