டிங்குவிடம் கேளுங்கள்: வலி தெரியாவிட்டால் என்ன ஆகும்?



வலி தெரியாவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! வலி தெரிய வேண்டியது அவசியமா, டிங்கு?
சாதாரணமாகப் பார்த்தால் வலி தெரியாவிட்டால் நன்றாகத்தான் இருக்கும்! ஆனால், வலி தெரியாவிட்டால் நன்றாக இருக்காது. காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. வலி தெரியாவிட்டால் ரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கும். ரத்தம் வருவதைக் கவனித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்.
வலி தெரிவதால்தான் உடனே அந்தப் பகுதியில் பிரச்சினை என்று, அதை நிறுத்துவதற்கான முயற்சியில் இறங்குவீர்கள். உடலில் எந்த உறுப்பில் பிரச்சினை என்றாலும் உடனே மூளை நரம்புகளுக்குக் கட்டளையிட்டு, வலி மூலம் நமக்குத் தெரிய வைக்கிறது. நாமும் தலைவலி, வயிற்றுவலி, மூட்டு வலி என்று வந்தவுடன் அதற்கு ஏற்ற மாதிரி சிகிச்சை எடுத்துக்கொள்கிறோம். இப்போது சொல்லுங்கள் ஹரிஹரசுதன், வலி தெரியாவிட்டால் நல்லதா?
நான் பேச்சுப் போட்டியில் ஐன்ஸ்டைன் பற்றிப் பேச இருக்கிறேன். விஞ்ஞானி என்ற அளவில் பல விஷயங்கள் தெரியும். அவரைப் பற்றி அதிகம் அறியாத சில தகவல்களைக் கூற முடியுமா, டிங்கு?
ஐன்ஸ்டைன் நான்கு வயது வரை சரியாகப் பேச முடியாமல் இருந்தார். அதனால் சரியாகப் பேச முடியாதவர்களை ‘ஐன்ஸ்டைன் சிண்ட்ரோம்’ என்று அழைத்தனர். பள்ளியில் படிக்கும்போது கணிதத்தைச் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. கணிதப் பாடத்தில் நன்றாகத் தேர்ச்சியடைந்தவராகவே இருந்தார். நேர்த்தியாக ஆடை அணிவதில் ஆர்வம் இல்லை. சாக்ஸ் அணிவதை வெறுத்தார். பெரும்பாலான விஞ்ஞானிகள் இசை மீது ஆர்வம்கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஐன்ஸ்டைனும் இசை மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தார்.
வயலின் நன்றாக வாசிப்பார். ஹிட்லரின் ஆட்சியில் சொந்த நாடான ஜெர்மனியை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார். சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப்படும் அகதிகளுக்கு உதவும் விதத்தில் ஓர் அமைப்பை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதன் அடிப்படையில் ’The International Rescue Committee’ என்ற அரசு சார்பற்ற அமைப்பு 1933-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
நாடற்ற அகதிகள், போரில் பாதிக்கப்பட்டவர்கள், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கல்வி, பொருளாதாரம், ஆரோக்கியம், பாதுகாப்பு போன்றவற்றை வழங்கிவருகிறது. இன்று 40 நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது, சந்தியா ராணி.
நான் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தீர்மானம் என்று ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வேன். ஆனால், அதைச் சரியாகக் கடைப்பிடிக்க மாட்டேன். உனக்கு அந்தப் பழக்கம் இருக்கிறதா டிங்கு? இந்தப் புத்தாண்டு தீர்மானம் என்ன?
நானும் உங்களைப் போல் முன்பெல்லாம் புத்தாண்டு தீர்மானம் எடுத்திருக்கிறேன், அவற்றைச் செய்ய முடியாமல் கைவிட்டும் இருக்கிறேன். இப்போதெல்லாம் அப்படி ஒரு தீர்மானம் புத்தாண்டு அன்று எடுப்பதில்லை. எப்பொழுதெல்லாம் ஏதாவது செய்ய வேண்டும் அல்லது எதையாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கிறேனோ, அப்போது தீர்மானம் எடுத்துக்கொள்கிறேன்.
இப்படித் தீர்மானம் எடுப்பது நல்ல விஷயம்தான். அதனால் இந்த ஆண்டு உங்களது புத்தாண்டு தீர்மானத்தை நிச்சயம் கடைப்பிடிப்பேன் என்று கூடுதலாக ஒரு தீர்மானம் எடுத்துக்கொண்டு செயல்படுங்கள், தென்றல்!


Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்

பழச்சாறு தயாரிப்பு!