பணியாளர்களை.. மனிதர்களாகவும் பார்க்கணும்..!


வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு (குறள்: 632)
‘X கோட்பாடு, Y கோட்பாடு’ கேள்விப்பட்ட துண்டா? `சும்மா மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது. தொழிலாளர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால்தான் வேலை நடக்கும்.’ எனும் அணுகுமுறை தான் மக்ரெகர் கூறிய `X கோட்பாடு!’
`பணியாளர்களும் நல்ல மனிதர்கள்தான். பாராட்டிற்கு ஏங்குபவர்கள். தட்டிக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்’ என்பது அந்த அமெரிக்கப் பேராசிரியரின் `Y கோட்பாடு’. தங்கள் பணியாளர்களை இவ்வாறு இருவேறுவிதங்களாகப் பார்க்கும் மேலாளர்கள் என்றும் உண்டு, எங்கும் உண்டு!
கோவையில் ஒரு வங்கியின் கோட்ட மேலாளர். பெயரா, இவங்க பெண்மணி ஆயிற்றே. உமா என்று வைத்துக் கொள்வோமா? சென்னையையும் அதன் சுற்றுப்புறங்களையும் தவிர தெற்கில் கன்னியாகுமரி வரையிலும், கிழக்கில் கடலூர் வரையிலும் உள்ள 65 கிளைகளுக்குப் பணியாளர்களை, முதல்நிலை அதிகாரிகளை இடம் மாற்றும் அதிகாரம் அவரிடம்!
ஒரு முறை சென்னை கோட்டத்திலிருந்து சுமார் 20 பணியாளர்கள் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்று இவரது கோட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாதாரணமாக என்ன நடக்கும்? எங்கெங்கே இடம் காலியாக உள்ளது எனப் பார்த்து ஆட்களை அங்கே போகச் சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள் இல்லையா? ஆனால் இவரோ அவர்கள் 20 பேருக்கும் ஓர் நல்வருகைக் கடிதம் அனுப்பினார்! அதில் அவர்களது பதவி உயர்வு அவர்களது உழைப்புக்குக் கிடைத்த பரிசு என்றும், இங்கே வாங்க, திறமையைக் காட்டுங்க என்றும் எழுதினார்!
எல்லோரையும் கோவையில் உள்ள ஒரு நல்ல ஓட்டலில் கூப்பிட்டு அவர்கள் இதுவரை சாதித்தது என்ன, இனி எத்துறையில் பணிசெய்ய விருப்பம் எனக் கேட்டார். அத்துடன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், மனைவி அல்லது கணவன் வேலையில் இருக்கிறார்களா எனவும் கேட்டறிந்தார்! ஒவ்வொருவரிடமும் பணியிடங்கள் காலியாக இருந்த கிளைகளும் அங்கிருந்த வர்த்தக வாய்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரும்பும் 3 இடங்கள் எதுவென்று கேட்கப்பட்டது!
நம்புங்க அண்ணே! இதனால் 10 பேர்களுக்கு அவர்கள் கேட்ட முதலிடமே கிடைத்துவிட்டது! 6 பேருக்கு இரண்டாவது விருப்பமும் 4 பேருக்கு மூன்றாவது விருப்பமும் கிடைத்தன! இதென்ன புதுப் பழக்கம் என யாரும் தடை சொன்னால் அஞ்ச மாட்டார்! தனது அதிகாரத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கவே மாட்டார். ஏதேனும் தலைமை அலுவலக அனுமதி வேண்டுமென்றாலும் தொடர்ந்து மன்றாடி வாங்கி விடுவார்!
அத்துடன் யாரும் தவறு செய்தால், திருத்தப் பார்ப்பார். சரிப்படவில்லை யென்றால் தண்டிக்கத் தயங்குவதேயில்லை! அவரது வெளிப்படையான அணுகுமுறை எல்லோரையும் கவர்ந்தது. நல்ல பலன் தந்தது! `ஒரு நிறுவனத்தை அதன் பணியாளர்கள் நேசித்தால்தான் அதன் வாடிக்கையாளர்களும் நேசிப்பார்கள்' என்கிறார் சைமன் சைனிக்! அறிவு, துணிவு, கருணை, விடாமுயற்சியுடன் குடிகளைக் காப்பவர் அமைச்சர் எனும் குறள் பணியாளர்களைக் காக்கும் மேலாளர்களுக்கும் பொருந்தும்!

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்