குறைகளைத் தீர்க்காட்டா... கதை தீர்ந்திடும்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும் (குறள்: 548)
|
விளம்பரத்தைப் பார்த்து மயங்கி, காரோ ஸ்கூட்டரோ வாங்கி, அதைப் பெருமையாய் ஓட்டிய கொஞ்ச நாட்களிலேயே அது ரிப்பேராகி, கனத்த மனத்துடன் அதை ரிப்பேருக்கு விட்ட அனுபவம் உண்டா உங்களுக்கு?
வாங்கிய பொருளை சரி செய்வதற்காகச் சேவை மையத்திற்குச் சென்றால், அங்கிருப் பவர்களின் அணுகுமுறை பல சமயங்களில் அணுசரணையாய் இருக்காது! ஆனால் எனது கோவை நண்பர் ஒருவருக்கு இதில் ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது, இனிமையானது! அவர் ஒரு கார் வாங்கியிருந்தார். சும்மா ஜம்முன்னு ஒரு பிரச்சினையும் இல்லாமல் குறிப்பிட்ட காலம் ஓட்டிய பின் முதல் சர்வீசுக்கு காரை எடுத்துச் சென்றுள்ளார். அங்கே எழுதப்பட்டிருந்த வாசகங்களின் சுருக்கத்தைப் பாருங்கள் 1) Listen Carefully 2) Understand accurately 3) Record Correctly
அதாவது குறை சொல்ல வருபவரிடம் முதலில் காட்ட வேண்டியது சிதறாத, ஒருமித்த கவனம்! மருத்துவரோ, வக்கீலோ, ஆசிரியரோ, மெக்கானிக்கோ பிரச்சினையை பொறுமையாய் கேட்காவிட்டால் எப்படி? பெரும்பாலான சமயங்களில் பலர், நாம் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்ல விடாமல் இடைமறித்து குழப்பியும் விடுவார்கள். அப்புறம் எப்படி கோளாறு என்னவென்று சரியாய்த் தெரிந்து கொள்வார்கள்? ‘வண்டி ஓடும் பொழுது சத்தம் வருகிறது' என்பதைத் தம் பணியில் கருத்தாய் இருப்பவர்களிடம் சொல்லிப்பாருங்கள்.
‘திருப்பும் பொழுதா, கியர் மாற்றும் சமயங்களிலா..' என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு பிரச்சினை இதுதான் என முடிவு செய்வார்கள் இல்லையா?
அடுத்த கடமை, வந்தவரின் கவலையைப் புரிந்து கொள்வது, பகிர்ந்து கொள்வது! ஏனோ தானோ என்று இருக்காமல் உண்மையான அக்கறை காட்டுவது! `கார் என்றால் சத்தம் வரத்தான் செய்யும்' என்று சொன்னால் வாடிக்கையாளரின் எரிச்சலும் கவலையும் பன்மடங்காகும்!
`அடாடா, சத்தமா வருது? கூடாதே, இவ்வளவு பார்த்துப் பார்த்து வாங்கி இருக்கீங்க. கவலைப் படாதீங்க. சரி பண்ணிடலாம்' என்பதைக் கேட்கும் பொழுதே வாடிக்கையாளரின் பாதிக் கோபம் குறைந்து விடுமில்லையா? வண்டியில் உள்ள தவறுகளை முறையாகப் பதிவிட வேண்டும் என்பது மூன்றாவது விதி. ஏனெனில் குறை கேட்பவர் ஒருவர். அதை நிவர்த்தி செய்ய வேண்டியவர் வேறொருவர். தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் தவறு வண்டியின் சேவையிலும் பிரதிபலிக்குமே!
அங்கு பணிபுரியும் அனைவரும் இம்மூன்று அறிவுரைகளையும் தலை மேற்கொண்டு செய்கிறார்களாம். அதனால் வாடிக்கையாளர்கள் சொல்லும் குறைகள் முழுவதுமாகக் களையப்படுகின்றனவாம். இந்த நல்ல அணுகுமுறை செவி வழிச் செய்தியாகப் பரவுவதும் அதனால் அந்த காரின் சந்தை மதிப்பு கூடுவதும் நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும்!
வந்தவர் தம் குறை சொல்லுதற்கு எளியனாய் உடனே செவிமடுத்து, பின் ஆலோசித்து விரைந்து முறைசெய்யாத மன்னவன், கெடுப்பாரின்றியும் தானே கெட்டுப் போவான் என்கிறது குறள். விற்பனைக்குப் பின் வாடிக்கையாளர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டிய நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.
Comments
Post a Comment