தங்கத்தை விஞ்சிய எலெக்ட்ரானிக்ஸ்

தங்கத்தை விஞ்சிய எலெக்ட்ரானிக்ஸ்

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைகளில் தங்கத்தைவிட மின்னணு பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறிப்பாக குறைந்த விலையிலான செல்போன்கள், லேப்டாப்களின் மோகம் மக்களிடம் அபரிமிதமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது அந்த அறிக்கை. இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களில் இதுவரையில் முக்கிய இடத்தில் இருந்த தங்கத்தை பின்னுக்குத் தள்ளி, மின்னணு பொருட்கள் இறக்குமதி அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதி மதிப்பு 440 கோடி டாலராக உள்ளது. ஆனால் தங்கத்தின் இறக்குமதி மதிப்போ 380 கோடி டாலர்கள்தான். 2016-17 நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் தங்க இறக்குமதி ஒப்பந்தம் 24.5 சதவீதம் அதிகரித்து 2,310 கோடி டாலராக உள்ளது. ஆனால் இதே காலத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி 3.7 சதவீதம் சரிந்துள்ள நிலையிலும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதி 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மின்னணு தொழில்நுட்பம் தொடர்பான தொழில்கள் அதிகரித்து வருவதன் காரணமாகவும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக Deloitte Touche Tohmatsu India வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-ம் ஆண்டுக்குள் இந்த துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் மதிப்பு 40,000 கோடி டாலராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் உள்நாட்டில் உள்ள மின்னணு உற்பத்தி திறனோ 10,400 கோடி டாலர் அளவுக்குத்தான் உள்ளன. மீதமுள்ள 29,600 கோடி டாலர் மதிப்பிலான திட்ட தேவைகளுக்கு இறக்குமதி மூலம்தான் தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் மின்னணு தேவைகளில் தற்போது 65 சதவீதம் வரை இறக்குமதி செய்யப்படுகிறது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள்படி இந்தியா இறக்குமதி செய்யும் மின்னணு பொருட்களின் பெரும்பான்மையானவை செல்போன்கள்தான். குறிப்பாக சீன செல்போன்கள்.
2003-04-ம் ஆண்டில் செல்போன் இறக்குமதி மதிப்பு 66 கோடி டாலர். ஆனால் கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் 1,430 கோடி டாலருக்கு செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதற் கிடையில் கடந்த ஆண்டின் 11 மாதங்களில் கம்ப்யூட்டரும், லேப்டாப் இறக்குமதியும் 6.77 சதவீதம் அளவுக்கு உள்ளன. இறக்குமதி செய்யப்பட்டுள்ள மின்னணு பொருட்களில் சோலார் பேனல்கள், பேட்டரிகளும் உள்ளன. இதே காலகட்டத்தில் இந்த பொருட்களின் இறக்குமதி 34 சதவீதம் அதிகரித்து 250 கோடி டாலராக உள்ளது. இதில் 220 கோடி டாலர் அளவுக்கு சீன இறக்குமதி. இந்தியாவின் சோலார் மின்னுற்பத்தி திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதற்கான தேவைகளும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இதனால் இறக்குமதியும் அதிகரிக்கும்.
தப்போது பெட்ரோலியம், தங்கத்துக்கு அடுத்ததாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மிக முக்கியப் பொருளாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உருவாகி யுள்ளன. தங்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக சிக்கல்கள் உருவாகும் ஒவ்வொரு முறையும் அரசு தலையிட்டு அதை முறைப்படுத்தி விடுகிறது. அதேபோல பெட்ரோலியப் பொருட்கள் தொடர்பான விவகாரங்களிலும் அரசு தலையிட்டு கட்டுப் பாட்டில் வைத்துள்ளது. ஆனால் மின்னணு இறக்குமதிக்கு என்று மேம்படுத்தப்பட்ட கொள்கைகள் உருவாக்கவில்லை என்கின்ற னர்.
மின்னணு பொருட்கள் இறக்குமதி தொடர்பாக இந்தியா புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். தவிர உள்நாட்டு தேவை களை நிவர்த்தி செய்வதற்கு ஏற்ப உற்பத்தி சார்ந்த திட்டங்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்