தங்க முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?


தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் அதன் மீதான காதல் மக்களுக்கு மீண்டும் வந்துள்ளது. வட கொரியாவில் உருவாகியுள்ள பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இருந்தாலும் ஓர் ஆண்டு காலத்தில் சொல்லிக் கொள்ளும்படியான லாபம் இல்லை.கடந்த ஓர் ஆண்டில் பங்குச்சந்தை 30 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஆனால் தங்கம் டாலர் மதிப்பில் மூன்று சதவீதமும், ரூபாய் மதிப்பில் ஒரு சதவீதமும் உயர்ந்திருக்கிறது. கடந்த 12 மாதங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்று யோசிக்க தொடங்கி இருப்பார்கள்.
சரிவுக்கு என்ன காரணம்?
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,375 டாலராக இருந்தது. ஆனால் டிசம்பர் மாதத்தில் 1,135 டாலராக சரிந்தது. ஆரம்பத்தில் ட்ரம்ப் வருகை காரணமாக தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் உயர்ந்தது, ஆனால் டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க பெடரல் 0.25 சதவீத அளவுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியதால் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 1,122 டாலராக சரிந்தது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் அமெரிக்க மத்திய வங்கி மீண்டும் 0.25 சதவீதம் வட்டியை உயர்த்தியதால் மீண்டும் தங்கம் விலை சரிந்து 1,195 டாலர் என்ற நிலையில் வர்த்தகமானது. மார்ச் 15-ம் தேதிக்கு பிறகு தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் மதிப்பு உயர்வு காரணமாக தங்கத்தில் பெரிய ஏற்றம் இல்லை. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.40-ல் இருந்து 64.28 ஆக உயர்ந்தது. அதனால் 10 கிராம் தங்கம் 28,845 ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 29,080 ரூபாயாக பத்து கிராம் தங்கம் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு சதவீதம் இழப்பு.
தங்க கடன் பத்திரங்கள்
ஒட்டு மொத்தமாக 2016-ம் ஆண்டில் தங்கத்தில் பெரிய அளவிலான முதலீடு கள் வரவில்லை. ஆனால் மத்திய அரசு வெளியிட்ட தங்க கடன் பத்திரங்களில் சில சலுகைகள் இருந்ததால், அந்த திட்டங்களில் முதலீடுகள் சொல்லிக்கொள்ளும்படி இருந்தன.
மத்திய அரசு ஏழு முறை இந்த திட்டத்தை அறிவித்தது. கடைசியாக அறிவித்த திட்டத்தின் தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்பாக ஆறு வெளியீடுகளில் ரூ.4,127 கோடி அல்லது 14 டன் தங்கம் அளவுக்கு முதலீடு வந்தது. முதல் இரண்டு வெளியீடுகளில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்த வெளியீடுகளில் முதலீடு செய்தவர்களுக்கு லாபம் இல்லை. அவர்கள் வாங்கிய தொகையை விட 5-10 சதவீதம் குறைவாக தங்கத்தின் தற்போதைய விலை இருக்கிறது. இந்த பத்திரங்கள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் வர்த்தகமாகின்றன. இந்த பத்திரங்களை விற்க நினைத்தாலும் அவ்வளவு எளிதல்ல. ஒரு நாளைக்கு 100 முதல் 200 யூனிட்கள் மட்டுமே வர்த்தகமாகின்றன. அதற்கு மேல் யூனிட்களை வைத்திருப்பவர்கள் காத்திருந்துதான் விற்கவேண்டும்.
கோல்ட் இடிஎப்
கோல்ட் இடிஎப்களின் தேவையை தங்க கடன் பத்திரங்கள் எடுத்துக் கொண்டுள்ளன. கடந்த நிதி ஆண்டில் கோல்ட் இடிஎப்களில் இருந்து 775 கோடி ரூபாய் முதலீடு வெளியேறி இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 14 கோல்ட் இடிஎப் பண்ட்களும் 20 டன்னுக்கு கீழ் தங்கத்தை வைத்திருக்கின்றன. கடந்த ஆண்டில் கோல்ட் இடிஎப் வருமானத்தில் பெரிய மாற்றம் இல்லை.
என்ன செய்யலாம்?
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தும் திட்டத்தில் இருப்பதால், நடப்பு நிதி ஆண்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். இருந்தாலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இருந்தாலும் அமெரிக்கா தற்போதுதான் வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கி இருக்கிறது. தவிர ட்ரம்ப் கொள்கைகள் மீது நிச்சயமற்ற தன்மை இருப்பதால், குறுகிய தொகையில் முதலீடு செய்வது நல்லது. பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்திருப்பவர்கள், அவர்களுடைய போர்ட்போலியோவில் 5 முதல் 10 சதவீதம் வரை வைத்திருக்கலாம். இடிஎப்களை விட தங்க கடன் பத்திரங்கள் சிறந்த முதலீடு, அதனால் கோல்ட் இடிஎப் வைத்திருப்பவர்கள், அதனை விற்றுவிட்டு தங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்