கதை: பசியும் ருசியும்
ப
ரணி ஆற்றங்கரையில் நின்றிருந்த ஓர் ஆலமரத்தின் பொந்தில் தாய்க் கிளியும் குஞ்சுக் கிளியும் வசித்துவந்தன.
கிளிக்குஞ்சு தானே இரை தேடும் அளவுக்கு வளர்ந்தாலும் இரை தேடுவதற்குத் தாய்க் கிளி இன்னும் அனுமதிக்கவில்லை.
ஆலமரத்தில் சிவப்பு வண்ணப் பழங்கள் அழகாகக் காய்த்துக் குலுங்கின. அதனால் தாய்க் கிளியும் நீண்ட தூரம் சென்று உணவு தேடாமல், தன் குஞ்சுடன் நேரத்தைச் செலவிட்டது.
”அம்மா, எனக்கு இந்த ஆலம் பழங்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு, சலிப்பாகிவிட்டது. கொய்யா, நாவல், சீதா, மிளகாய்ப் பழம் போன்றவற்றைச் சாப்பிடுவதற்கு ஆசையாக இருக்கிறது” என்றது குஞ்சுக் கிளி.
”இப்போது எங்கும் வறட்சி. பழங்களே கண்ணில் தட்டுப்படவில்லை. நல்லவேளை, ஆல மரத்திலாவது பழங்கள் இருக்கின்றன. அதனால்தான் இரை தேடிச் செல்லாமல் உன்னுடனே இருக்கிறேன்” என்றது தாய்க் கிளி.
“நேற்று என் அணில் நண்பன் வீட்டுக்கு ஒரு விருந்தினர் அணில், கூடை நிறைய கொய்யாப் பழங்களுடன் வந்திருந்தார். எனக்கும் ஒரு கொய்யா கிடைத்தது. அத்தனை சுவையாக இருந்தது. அதனால் நான் இன்று ஆலம் பழங்களைச் சாப்பிட மாட்டேன். எனக்குச் சுவையான பழங்கள் வேண்டும்” என்று அடம்பிடித்தது குஞ்சுக் கிளி.
”அவர் வெளியூர்க்காரராக இருப்பார். இங்கே கொய்யாப் பழங்களே இல்லை” என்ற தாயின் பேச்சைக் கொஞ்சமும் நம்பவில்லை குஞ்சுக் கிளி.
“சரி, நீயும் என்னுடன் வா. இருவரும் உணவு தேடலாம்” என்றதும் மகிழ்ச்சியுடன் கிளம்பியது குஞ்சுக் கிளி.
இரண்டும் பறக்கத் தொடங்கின. சிறிது நேரத்தில் முதல் முறை பறந்ததால் சோர்வுற்ற குஞ்சுக் கிளி, சற்று ஓய்வெடுக்க வேண்டும் என்றது. தாயும் குஞ்சும் ஒரு மரத்தில் ஓய்வெடுத்துவிட்டு, மீண்டும் பறந்தன. நீண்ட நேரம் அலைந்தும் ஒரு பழம் கூடக் கிடைக்கவில்லை. இரண்டு கிளிகளும் மிகவும் களைப்புற்றன.
”அம்மா, இனிமேல் என்னால் பறக்க முடியாது. பொந்துக்குத் திரும்பலாம்” என்றது குஞ்சுக் கிளி.
குஞ்சுக் கிளியை அழைத்துக் கொண்டு ஆலமரத்தை நோக்கித் திரும்பிவந்தது தாய்க் கிளி. பொந்தில் ஏற்கெனவே பறித்து வைத்திருந்த ஆலம் பழங்கள் இருந்தன. பசியோடு இருந்த குஞ்சிடம் நீட்டியது தாய்க் கிளி.
உடனே வேக வேகமாகத் தின்று முடித்தது குஞ்சுக் கிளி.
"கண்ணே, பசி தீர்ந்ததா? பழங்கள் எப்படி இருந்தன?"
"பசி தீர்ந்தது அம்மா. அது எப்படி இப்போது மட்டும் பழங்கள் அத்தனை சுவையாக மாறின?" என்றது குஞ்சுக் கிளி.
"சற்று முன்பு நான் இந்த ஆலம் பழங்களைத் தந்தபோது வேறு சுவையான உணவு வேண்டும் என்றாய். ஆனால் இப்போது இந்தக் கனிகளே சுவையாக இருக்கிறது என்கிறாய். பசி இருந்தால் எந்த உணவும் ருசியாக இருக்கும். இந்தப் பசியை நீ உணர்வதற்காகவே நான் உன்னை வெகுதூரம் அழைத்துப் போனேன். களைத்துப் பசித்த உனக்கு ருசியும் தெரிந்துவிட்டது!" என்று சிரித்தது தாய்க் கிளி.
Comments
Post a Comment