வீட்டுக்கடன் கூடுதலாக சில சலுகைகள்
வீட்டுக்கடன் வாங்குபவர்களுக்கு இது கொண்டாட்ட காலம். கடந்த ஓரிரு ஆண்டுகளில் 1 சதவீதம் முதல் 1.20 சதவீதம் வரை வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைத்திருக்கின்றன. இதனால் வீட்டுக்கடன் வாங்கி யவர்களுக்கு மாத இஎம்ஐ தொகை கணிசமான அளவு குறைந்திருக்கிறது. மத்திய அரசின் வட்டி மானிய திட்டம் (சிஎல்எஸ்எஸ்) மேலும் சில சலுகை களை அறிவித்திருக்கிறது. கடந்த ஜன வரியில் இருந்து இவை அமலுக்கு வந்துள்ளன. தகுதியுள்ள வாடிக்கை யாளர்களுக்கு அதிகபட்சம் ரூ.2.30 லட்ச ரூபாய் வரை வட்டி மானியம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
சலுகை என்ன?
நடுத்தர மக்கள் வீடு கட்டுவதற்காக இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதில் இரு பிரிவுகள் இருக்கின்றன. முதல் பிரிவில் 9 லட்ச ரூபாய்க்குள் வாங்கப்படும் கடனுக்காக 4 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. 12 லட்ச ரூபாய்க்குள் வாங்கப்படும் வீட்டுக்கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிகபட்சம் 2.35 லட்ச ரூபாய் வரை வட்டி மானியம் கிடைக்கும். 12 லட்ச ரூபாய்க்கு மேல் வாங்கும் கடனுக்கு வட்டி மானியம் கிடையாது.
எப்படி கிடைக்கும்
வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் கிடைத்த பிறகு, சலுகைக்கு ஒப்புதல் வழங்குவதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள ஹட்கோ மற்றும் தேசிய வீட்டு வங்கிக்கு (என்ஹெச்பி) விண்ணப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில் சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டு வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த தொகை அசல் தொகையில் இருந்து கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகைக்கு மட்டும் வட்டி செலுத்தினால் போதுமானது.
உதாரணத்துக்கு 12 லட்ச ரூபாய் வீட்டுக்கடன் வாங்குகிறீர்கள். பெரும்பாலான வங்கிகள் 8.65 சதவீதத்துக்கு கடன் கொடுக்கின்றன. அப்படியானால் மாதத் தவணை தொகை ரூ.10,528 ஆக இருக்கும். சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் சலுகை கிடைக்கும் பட்சத்தில் வீட்டுக்கடன் அசலில் 2.30 லட்ச ரூபாய் தள்ளுபடியாகும். அதனால் மாத தவணைத் தொகையில் ரூ.2,000 குறைந்து 8,508 ரூபாயாக இஎம்ஐ இருக்கும். கடன் வாங்கிய பிறகு வட்டி மானியம் கிடைக்க குறைந்தபட்சம் இரண்டு மூன்று மாதங்கள் ஆகலாம்.
சில நிபந்தனைகள்
இந்த சலுகையை பெற சில நிபந்தனைகள் இருக்கின்றன. சலுகையை பெறுவதற்கு, வாங்கும் கடன் தொகை மற்றும் வீட்டின் சுற்றளவுக்கு எல்லைகள் இருக்கின்றன. முதல் பிரிவில் சலுகை கிடைக்க வேண்டும் என்றால் 90 சதுர மீட்டர் சுற்றளவும், இரண்டாம் பாதியில் சலுகை கிடைக்க வேண்டும் என்றால் 110 சதுர மீட்டர் சுற்றளவுக்குள் வீடு இருக்க வேண்டும். அதேபோல கடன் அளவும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கடன் தொகை அளவுக்கு மட்டுமே சலுகை கிடைக்கும் அதற்கு மேல் உள்ள தொகைக்கு சலுகை கிடையாது.
உதாரணத்துக்கு 20 லட்ச ரூபாய் கடன் வாங்கினால் அதிகபட்சம் 2.30 லட்ச ரூபாய் மட்டுமே சலுகை கிடைக்கும். 20 லட்ச ரூபாய் கடனுக்கு 17,547 ரூபாய் மாதத்தவணை செலுத்த வேண்டி இருக்கும். சலுகை போக மாதம் ரூ.15,527 செலுத்த வேண்டும்.
இப்போதைக்கு இந்த திட்டம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். அதாவது நீங்கள் கட்டத் தொடங்கும் வீடு இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்பட வேண்டும். இல்லை யெனில் இந்த திட்டத்தின் கீழ் மானியம் கிடைக்காது. இந்த திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இந்த நிச்சயமற்ற நிலையை தவிர்ப்பதற்காக, ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டிருக்கும் வீடுகளை வாங்கும் பட்சத்தில் இந்த சலுகையைப் பெற முடியும்.
வரி சலுகைகள்
இந்த திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் வரிச்சலுகைகள் உண்டு. 80 சி பிரிவின் கீழ் அசல் தொகையில் அதிகபட்சம் 1.50 லட்ச ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்கும். அதேபோல பிரிவு 24-ன் கீழ் செலுத்தும் வட்டியில் ரூ.2 லட்சத்துக்கு விலக்கு பெற முடியும். ஆனால் வட்டித்தொகை மீதான வரிவிலக்கு என்பது, நிகரமாக செலுத்தும் வட்டித் தொகைக்கு மட்டுமே கிடைக்கும். வட்டி மானிய தொகைக்கு வரி விலக்கு கிடையாது என்பதை மறக்க வேண்டாம். சிஎல்எஸ்எஸ் திட்டத்தின் கீழ் சலுகை கிடைக்கும் பட்சத்தில் வீட்டுக்கடன் அசலில் 2.30 லட்ச ரூபாய் தள்ளுபடியாகும்.
Comments
Post a Comment