பட்ஜெட்டில் மாற்றம் நிகழுமா?
பட்ஜெட்டில் மாற்றம் நிகழுமா?
20
14-ம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைப்பு என முக்கிய மாற்றங்கள் கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரங்கேறியிருக்கின்றன. இதில் முக்கியமானது பட்ஜெட் இணைப்பு. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பல்லாண்டு கால நடைமுறை கடந்த ஆண்டில் மாற்றப்பட்டது. அதன்பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் பிப்ரவரி 1-ம் தேதிக்கு இந்த நடைமுறை மாற்றப்பட்டது. இம்முறை தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் இன்னொரு பெரிய மாற்றமும் நிகழப்போகிறது.
பொதுவாக மத்திய பட்ஜெட்டில் பிரிவு ஏ மற்றும் பிரிவு பி என்ற இரண்டு பிரிவுகள் இருக்கும். பிரிவு ஏ-வில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது பற்றியும் புதிய திட்டங்களின் அறிவிப்புகள் குறித்தும் தாக்கல் செய்யப்படும். பிரிவு பி-யில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி குறித்து அறிவிப்புகள் அறிவிக்கப்படும். வருமான வரி, கார்ப்பரேட் வரி போன்றவை நேர்முக வரிகளுக்குள் வந்துவிடும். கலால் வரி, சுங்க வரி, வாட், ஆக்ட்ராய் போன்றவை மறைமுக வரி அமைப்புக்குள் வந்துவிடும்.
அனைத்து மறைமுக வரிகளையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு ஒவ்வொரு பொருளுக்கும் வரி விகிதம் முடிவு செய்யப்பட்டன. ஜிஎஸ்டி வரி விகிதங்களை முடிவு செய்யும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு வழங்கப்பட்டது. இந்த குழுவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி தொடர்பாக எந்தவொரு மாற்றத்தையும் இந்தக் குழுவின் அனுமதியோடு மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும். நாடாளுமன்றதுக்கு அந்த அதிகாரம் இல்லை. அதனால் அடுத்த மாதத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் மறைமுக வரி தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் இருக்காது. மாறாக மறைமுக வரி விதிப்பில் உள்ள சுங்க வரி மட்டும் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் இல்லாததால் சுங்க வரி குறித்த அறிவிப்பு மட்டுமே பட்ஜெட்டில் இருக்கும். இதன் மூலம் நேரடி வரி விதிப்பில் மக்களுக்கு சாதகமான அறிவிப்புகளை அறிவிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலும் மறைமுக வரிகளில் அறிவிக்கப்படுவதை தொழில்துறையினர் விரும்புவார்கள். அதன் மூலமே பட்ஜெட்டை மதிப்பிடுவார்கள். ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாதததால் கார்ப்பரேட் வரி குறித்த அறிவிப்பை நோக்கி அவர்களது கவனம் இருக்கும்.
மக்களை கவரக்கூடிய திட்டங்கள் ஏதும் வரும் பட்ஜெட்டில் இடம்பெறாது என்பதை தொடர்ந்து மத்திய அரசின் அதிகாரிகளும் பொருளாதார நிபுணர்களும் கூறி வருகிறார்கள். பெரிய திட்டங்கள் குறித்த அறிவிப்பும் நேரடி வரிகளில் மாற்றமும் இல்லையெனில் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படக் கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. இதை எப்படி ஜேட்லி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Comments
Post a Comment