ரியல் எஸ்டேட் 2017- ஒரு பார்வை
ரியல் எஸ்டேட் 2017- ஒரு பார்வை
ரி
யல் எஸ்டேட் துறைக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருக்கவில்லை. இந்த ஆண்டு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டது. வீடுகளை விரைவாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வீட்டுக்கடனுக்கான வட்டி குறைந்துகொண்டே இருந்தது. ஆனாலும் அனைத்தும் சிறப்பாக இருக்கவில்லை. 2017-ம் ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் நடந்த மாற்றங்களையும், அதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித் தும் பார்ப்போம்.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் இதுவரை பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை. அமல்படுத்தப்பட்ட மாநிலங்களிலும் 11 மாநிலங்களில் மட்டுமே இதற்கென பிரத்யேக இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறது. பிரத்யேக இணையதளம் இருந்தாலும், அந்த தளத்தில் திட்டங்கள் குறித்த விரிவான தகவல் இல்லை. உதாரணத்துக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களின் இணையதளத்தில் திட்டங்கள் குறித்த முழுமையான தகவல் இல்லை.
தமிழ்நாடு, உத்தராகண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் இணைய தளத்தில் புகார்களை பதிவு செய்யும் வசதி இல்லை. மேலும் தமிழ்நாட்டின் இணையதளத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. கேரளாவில் திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இந்த ஆரம்பகால சிக்கல்கள் முடிய இன்னும் சில காலம் ஆகலாம்.இந்த சட்டம் 2016-ம் ஆண்டு மே மாதம் நிறைவேற்றப்பட்டது. 2017-ம் ஆண்டு மே மாதம் அமல்படுத்தப்பட்டது. மாநிலங்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு மேல் ஆன பிறகும் இதில் பெரிய முன்னேற்றம் இல்லை. குறைந்த அளவிலான கட்டுமான நிறுவனங்கள் மற்றும் புரோக்கர்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள். சட்டங்கள் மாறினாலும் நடைமுறை மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அதிகாரம்
இந்த ஆண்டு வீடு வாங்குபவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். வீடுகளை கட்டி முடிக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சட்ட ரீதியிலான போராட்டங்கள் செய்ய வேண்டி இருந்தது. உதாரணத்துக்கு யுனிடெக் நிறுவனத்தில் பணம் கட்டிய முதலீட்டாளர்கள் நடத்திய சட்ட போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. முதலீட்டாளர்களிடம் வாங்கிய தொகைக்கு 14 சதவீத வட்டியும் திருப்பி வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தவிர நேரடியாக தேசிய சட்ட நிறுவன தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவரை எந்த காரணங்களுக்காக காலதாமதம் ஏற்பட்டாலும் வீடு வாங்குபவர்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. கால தாமதத்துக்கான விளைவை வீடு வாங்குபவர்கள் சுமக்க வேண்டி இருந்தது. இதனால் திட்டமிட்டதை விட அவர்களின் பட்ஜெட் கூடியது. ஆனால் வழக்குகளை வென்றதன் மூலம் வாங்குபவர்களுக்கு அதிகாரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தவிர அதிகளவிலான வீடுகள் இருப்பதால் பேரம் பேசி விலைகளை குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சந்தை ரிஸ்க்
இந்த ஆண்டு வீடு வாங்குவதில் சில ரிஸ்க்குகளும் இருந்தன. பணமதிப்பு நீக்கம் மற்றும் பினாமி தடுப்பு சட்டம் காரணமாக பணப்புழக்கம் பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே ரியல் எஸ்டேட் துறை பணப்புழக்கம் குறைவான துறை என்று சொல்லப்படும் நேரத்தில் இந்த காரணங்களால் மேலும் பணப்புழக்கம் குறைந்தது. இதனால் பல நிறுவனங்கள் வீடுகளை விற்க முடியாமல் தடுமாறின.ரியல் எஸ்டேட் துறையின் போக்கு முற்றிலும் மாறியது.
குறைவான பணப்புழக்கம், அதிக விதிமுறைகள், குறைந்த வருமானம் ஆகிய காரணங்களால் ரியல் எஸ்டேட் துறைக்கு செல்லும் முதலீடு குறைந்து, நிதி சார்ந்த துறையில் முதலீடுகள் குவிகின்றன. வரும் காலத்தில் ரியல் எஸ்டேட் துறை முதலீட்டின் மீதான வருமானம், பணப்புழக்கம், ஒழுங்குமுறை சார்ந்த விஷயங்களை கவனித்து முதலீடு செய்யலாம்.
மாறும் தேவைகள்
மொத்தமாக 2017-ம் ஆண்டில் வீடு வாங்குபவர்களின் மனநிலை மாறி இருக்கிறது. வேலைவாய்ப்புகள், முதலீட்டாளர்களின் முன்னுரிமை, ஐடி துறையில் உருவாகி இருக்கும் மந்த நிலைமை ஆகியவை வீடு வாங்குவதை பாதித்திருக்கிறது. தற்போதைய நிலைமையில் மிக குறைவான வட்டி விகிதம் இருந்தாலும் கூட, வீடு வாங்கும் மனநிலை இல்லை. இனி தகுதியான நிறுவனங்களில் மட்டுமே வீடு வாங்கும் சூழல் உருவாகும்
Comments
Post a Comment