15-வது நிதி ஆணையத்தின் முன் உள்ள சவால்கள்


மா
நில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் நிதி சார்ந்த உறவுகளை நிர்வகிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் நிதிக்குழு ஆணையம். வரி வருவாயை மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தில் நிதி நிலைத்தன்மையை கொண்டுவருவதற்கும் இந்த ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆணையம் மாற்றியமைக்கப்பட்டு புதிய தலைவர் நியமனம் செய்யப்படுவார். அந்த வகையில் 14-வது நிதிக்குழு ஆணையத்தின் பதவிக்காலம் 2019-20-ம் ஆண்டில் முடிவடைய இருக்கிறது. ஏற்கெனவே இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளித்திருந்தது. குறிப்பாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாயை 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தும் பரிந்துரையை இந்தக் குழு செய்திருந்தது.
இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் 15-வது நிதிக் குழுவை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் குழு 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்பட உள்ளது. தலைவராக என்.கே.சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும். ஆனால் தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த வரி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதால் இந்தக் குழுவுக்கு பல்வேறு சவால்கள் காத்துக் கிடக்கின்றன.
கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இதை சரிசெய்வதற்கு 2022-ம் ஆண்டுவரை மாநிலங்களுக்கு இழப்பீடு நிதியை மத்திய அரசு வழங்க இருக்கிறது. ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் அதிக வரி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கும். இதை சரியான விகிதத்தில் மாநிலங்களுக்கு பிரித்து அளிக்க வேண்டிய பொறுப்பு நிதிக்குழு ஆணையத்துக்கு உள்ளது. இதில் பிரச்சினை என்னவென்றால் ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் அதிக வருவாய் இழப்பு மாநிலம் மற்றும் குறைந்த வருவாய் இழப்பு மாநிலம் எனத் தனித் தனியாக பிரிக்க வேண்டும். இரண்டு பிரிவு மாநிலங்களுக்கும் இடைவெளியை குறைப்பதற்கான செயல்பாடுகளை நிதிக்குழு ஆணையம் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை பெரிய இடைவெளி ஏற்பட்டால் அது மாநிலங்களின் சமூக மற்றும் மூலதன செலவுகளை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் நிதிப் பற்றாக்குறையின் அளவு உயர்ந்து வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. அதனால் மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டிய நிதியில் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாது மாநிலங்களின் கடன் வாங்கும் திறனின் அளவு, பொது நிதியின் மதிப்பு, மாநிலங்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கான நிதி என அனைத்தையும் கருத்தில் கொண்டே நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை கணக்கில் எடுத்துக் கொண்டே நிதிக்குழு ஆணையம் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
14-வது நிதிக்குழு ஆணையம் பரிந்துரைகள் நிதி கூட்டாட்சி முறையை வலுப்படுத்தும் வகையிலே பரிந்துரைகளை அளித்துள்ளது. அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் 15-வது நிதிக்குழு ஆணையம் செயல்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்