paytm இலக்கு 1 லட்சம் ஏடிஎம்!
paytm இலக்கு 1 லட்சம் ஏடிஎம்!
க
டந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாமல் தவித்தனர். அரசும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கத்தை மாற்றியது. அனைவரையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதும் முறைசார்ந்த பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்துவதே பிரதான நோக்கம் என்று அறிவித்தது. இந்த சூழ்நிலையை நிதித் துறை தொழில் நிறுவனங்களான பேடிஎம், மொபிக்விக் போன்றவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன.
குறிப்பாக பேடிஎம் நிறுவனம் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டது. பணமதிப்பு நீக்கம் அறிவித்த அடுத்த நாளே பிரதமர் மோடியை வாழ்த்தி அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரத்தை கொடுத்தது. ரொக்க பரிவர்த்தனை குறைந்ததால் அடுத்த 15 நாட்களில் பேடிஎம் நிறுவனத்தின் பரிவர்த்தனை எண்ணிக்கை 70 லட்சமாக உயர்ந்தது. பணமதிப்பு நீக்கத்துக்கு முன்னரே 15 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருந்த பேடிஎம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதன் பிறகு இன்னும் அதிகரித்தது. அப்போதிலிருந்து நிதி தொழில்நுட்பத்துறையில் பேடிஎம் நிறுவனம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு இந்தியர்கள் டிஜிட்டலுக்கு மாறும் போக்கை சரியாக கணித்து அதற்கேற்றார்போல் உத்திகளை பேடிஎம் வகுத்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் பேடிஎம் பேமென்ட் வங்கியை தொடங்கியது. இந்தியாவில் மிகப் பெரிய தொழில்நுட்பங்ளுடன் கூடிய தொழில்நுட்ப வங்கியாக உருவாக வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த பேமென்ட் வங்கியை பேடிஎம் நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
மேலும் இந்த பேமென்ட் வங்கியை தொடர்ந்து இந்தியா முழுவதும் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்கு இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஏற்கெனவே இ-காமர்ஸ் துறையில் சுமார் 16,340 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்திருந்த பேடிஎம் நிறுவனம் 1 லட்சம் ஏடிஎம் மையங்களை அமைப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 3,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.
பணமதிப்பு நீக்கத்தின் போது குறைவான ஏடிஎம் மையங்கள் இருந்ததால் மக்கள் பணத்தை எடுப்பதற்கு அதிக சிரமப்பட்டனர். நாள் முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஏடிஎம் மையங்களை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளால் முடியவில்லை. தற்போதைய தகவல் படி, இந்தியாவில் மொத்தமே 2 லட்சம் ஏடிஎம் மையங்கள் உள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கிதான் அதிகமான ஏடிஎம் மையங்களை வைத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட 58,000 ஏடிஎம் மையங்கள் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சொந்தமாக உள்ளன. பேடிஎம் நிறுவனத்துக்கு மொத்தம் 3,000 ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பெரும்பாலும் டெல்லி, வாராணசி, லக்னோ, கான்பூர், அலகாபாத் போன்ற முக்கிய நகரங்களிலேயே உள்ளன. தற்போது மொத்தமாக 1 லட்சம் ஏடிஎம் மையங்கள் அமைக்கத் திட்டமிட்டிருப்பதன் மூலம் இந்தியாவில் கிராமங்களில் கூட ஏடிஎம் மையங்கள் சென்றடைவதற்கான சாத்தியம் அதிகரித்துள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் ஏடிஎம் மையங்கள் வரும்பொழுது மக்கள் வங்கி நடவடிக்கையில் அதிகம் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் அனைத்து மக்களையும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அழைத்துச் செல்வதற்கான முக்கிய வழியாக இது அமையும்.
Comments
Post a Comment