பணமதிப்பு நீக்கம் யாருக்காக?
பணமதிப்பு நீக்கம் யாருக்காக?
``எனது அன்பான குடிமக்களே, தீபாவளி மற்றும் பண்டிகை நாட்கள் மகிழ்ச்சியாக கடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். மத்திய அரசின் சில முக்கிய முடிவுகளை பற்றி உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். கடந்த சில பத்தாண்டுகளாக நாட்டில் ஊழலும் கறுப்புப் பண பதுக்கலும் அதீத வளர்ச்சி பெற்று வருகிறது. ஏழ்மையை ஒழிப்பதில் தடையாக இருப்பவை இரண்டு மட்டுமே. அது மட்டுமல்ல, கள்ள நோட்டு புழக்கமும் தீவிரவாதத்துக்கு நிதியுதவியும் அச்சுறுத்துக்கின்றன. அதனால் சில கடினமான முடிவுகளை எடுக்க இருக்கிறேன்.
எனதருமை நண்பர்களே, இன்று இரவு முதல் புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் சாமானியர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்கவேண்டி வரும். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதற்கு சாமானியர்கள் இந்த கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளவேண்டும். குடிமக்கள் எப்போதும் நாட்டுக்காக தியாகங்களை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். நாட்டை சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். விரைவில் இதன் பயனை குடிமக்கள் அடைவார்கள்’’
- 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இரவு நாட்டு மக்களுக்கு மோடி ஆற்றிய உரையிலிருந்து.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு 9 மாத காலத்துக்கு மேல் ஆகிவிட்டது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொல்லப்பட்ட அந்த இரவிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மாத காலம் சாமானிய மக்கள் படாத துன்பமில்லை. சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டது, வணிகம் பாதிக்கப்பட்டது, காதுகுத்து கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளை வைத்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
பணத்தை மாற்ற மக்கள் வரிசையில் நின்று அடைந்த துன்பம் சொல்லி மாளாது. ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டார்கள். எந்த வன்முறையும் இல்லை. இவ்வளவும் எதற்காக என்று ஆராயும் பொழுது கறுப்புப் பணம் ஒழிப்பு என்று மோடி சொன்ன காரணம்தான் மக்களை இவ்வளவு அமைதியாக அந்த கஷ்டத்தை கடக்கவைத்தது.
500 மற்றும் 1,000 என்ற இரு உயர்மதிப்பு கொண்ட நோட்டுகளை பண அமைப்பிலிருந்து விலக்கி கொள்வதற்கு மோடி நான்கு முக்கிய காரணங்களை முன்வைத்தார். ஊழல் ஒழிப்பு, கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளநோட்டுகளை ஒழிப்பது, தீவிரவாதத்துக்கு வரும் நிதியை ஒழிப்பது என காரணங்களை முன்வைத்து அறிவித்தார். 9 மாத காலத்துக்குப் பிறகு இந்தக் இலக்குகள் நிறைவேறியதா? யார் இதன் மூலம் லாபம் அடைந்தார்கள்? இந்திய பொருளாதாரத்தில் இதன் மூலம் நிகழ்ந்த மாற்றம் என்ன? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கறுப்புப் பணம் ஒழிந்ததா?
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15.44 லட்சம் கோடி. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 4 முதல் 5 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்ப வராது என்று தெரிவித்தார். இந்த தொகைதான் கறுப்புப் பணம் என்று நினைத்திருக்கக்கூடும்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை வெளியிட்டது. அதில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் 99 சதவீதம் திரும்ப வந்துவிட்டதாகவும் 1 சதவீத நோட்டுகள் திரும்ப வரவில்லை என்றும் கூறியிருக்கிறது. அதாவது 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிக்கு திரும்ப வரவில்லை. அப்படியென்றால் பெருவாரியான கறுப்புப் பணம் அனைத்து வெள்ளையாக மாற்றப்பட்டு திரும்பவும் இந்த அமைப்புக்குள்தான் இயங்கி வருகிறது என்றுதானே அர்த்தம்.
கள்ள நோட்டுகள் ஒழிந்ததா?
பணமதிப்பு நீக்கத்தின் முக்கியமான இலக்கு கள்ளநோட்டு புழக்கத்தை ஒழிப்பது. 2015-ம் ஆண்டு தேசிய விசாரணை நிறுவனம் (என்ஐஏ) வழங்கிய தகவல்படி, இந்தியாவில் மொத்தம் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்தது. அதாவது மொத்த ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் 0.028 சதவீதம் கள்ளநோட்டுகளாக உள்ளன. அதிலும் குறிப்பாக உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளே அதிகம் கள்ளநோட்டுகளாக உள்ளன என்று என்ஐஏ கூறியது.
ஆனால் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிக்கு திரும்பிய 1,000 ரூபாய் நோட்டுகளில் 0.0007 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். 500 ரூபாய் நோட்டுகளில் சுமார்0.002 சதவீதம் மட்டுமே கள்ளநோட்டுகள். மொத்த கள்ளநோட்டுகள் புழக்கத்தில் மிக குறைவான சதவீதமே வந்துள்ளது. மீதி என்ன ஆனது என்பது குறித்து அரசு விளக்கவும் இல்லை. எப்படி கள்ளநோட்டு ஒழிந்துவிட்டது என்று கூறமுடியும்?
பொருளாதார வகையில் லாபமா?
பணமதிப்பு நீக்கம் பொருளாதார வகையில் இந்தியாவுக்கு லாபத்தை தந்ததா? என்று பார்த்தால் கூட அதுவும் நிகழவில்லை. பணமதிப்பு நீக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 15.44 லட்சம் கோடி . இதில் ரூ. 15.28 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துவிட்டன. இதனால் ரிசர்வ் வங்கிக்கு ரூ.16,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கு ரூ.21,000 கோடி செலவாகியுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கிக்கு நஷ்டமே.
அதுமட்டுமல்லாமல் 2017-18-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் இதே காலாண்டில் கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய அளவுக்கு ஜிடிபி வளர்ச்சி விகிதத்தில் சரிவு தற்போதுதான் ஏற்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம் அறிவிப்பு வந்த பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பணமதிப்பு நீக்க முடிவால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 சதவீதம் வரை குறையும் என்று தெரிவித்தார்.
ஆனால் அதை அப்போது மோடி அரசு அலட்சியப்படுத்தியது. தற்போது மன்மோகன் சிங் கூறியது நடந்துவிட்டது. எப்படி பணமதிப்பு நீக்கம் ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணமாக இருந்தது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு உற்பத்தித் துறை வளர்ச்சி குறைந்து கொண்டே வந்தது.
பணமதிப்பு நீக்கத்தின் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலதனத்தை திரட்டமுடியவில்லை. வாங்கிய கடனை திருப்பி செலுத்தமுடியாமல் தவித்தன. இதனால் உற்பத்தி முடங்கியது.
அது மட்டுமல்லாமல் சேவைத்துறை வளர்ச்சியும் தற்போது குறைந்துள்ளது. மேலும் தனியார் துறை நுகர்வும் கணிசமாக குறைந்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது அடுத்த காலாண்டுக்கும் நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனையின் நிலை?
பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு நவம்பர் 27-ம் தேதி `மான் கி பாத்’ நிகழ்ச்சியில் 100 சதவீதம் பணமில்லா சமூகமாக இந்தியாவை மாற்ற வேண்டும் இல்லையெனில் குறைந்தபட்சம் குறைந்த பணப் பரிவர்த்தனை உள்ள சமூகமாகவாவது மாற்ற வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்தார். ஆனால் தற்போது டிஜிட்டல் பரிவர்த் தனையின் நிலை என்ன?. நவம்பர் மாதத்தில் 67 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
டிசம்பர் மாதம் மேலும் அதிகரித்து 95 கோடி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மூலமாக நடந்தன. ஆனால் பணம் மக்களிடையே புழங்க புழங்க டிஜிட்டல் பரிவர்த்தனை குறைந்து கொண்டே வந்து தற்போது 86 கோடி பரிவர்த்தனைகள் மட்டும் ஜூலை மாதத்தில் நடந்துள்ளன.
எதற்காக பணமதிப்பு நீக்கம்?
கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகப்படுத்துவது என எத்தனை இலக்குகளை பணமதிப்பு நீக்கத்துக்கு மத்திய அரசு கூறிவந்தது. ஆனால் 9 மாத காலத்துக்குப் பிறகு இந்த நடவடிக்கை மூலம் ஏதேனும் நன்மை ஏற்பட்டிருக்கிறது என்றால் ஒன்று கூட இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த இலக்குகளை ஒன்றை கூட மத்திய அரசால எட்டமுடியவில்லை. ஆனால் இந்த நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த விலை அதிகம். மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறினீர்கள் மோடி. தியாகத்துக்கு பலன் என்ன?. பொருளாதாரத்தில் என்ன மாற்றத்தை கொண்டுவந்து விட்டீர்கள். யாருக்காக பணமதிப்பு நீக்கம். வெற்று இலக்குகளை நிர்ணயித்து அதை மக்கள் மீது திணிப்பதற்காகவா பணமதிப்பு நீக்கம். மக்கள் உங்களை கவனித்து கொண்டிருக்கிறார்கள் மோடி.
Comments
Post a Comment