தாஜ்மகாலுக்கு வந்த சோதனை

தாஜ்மகாலுக்கு வந்த சோதனை

லகச் சுற்றுலாத் தலங்களில் தாஜ்மகாலுக்கு என்று தனி இடம் உள்ளது. உலக அதிசயமாகவும், அன்பின் அடையாளமாகவும் இருப்பதால் இந்தியா முழுவதிலிருந்தும், உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்தியா வரும் உலக பிரபலங்கள் தாஜ்மகால் செல்ல விரும்புவதும் அங்கு புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவதும் வழக்கமான நிகழ்ச்சி. உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் அமைந்துள்ளது. ஆனால் இந்த புகழ்பெற்ற சுற்றுலா தலம் அந்த மாநில அரசின் சுற்றுலா தல பட்டியலில் இப்போது இல்லை.
ஆம்.! சமீபத்தில் உத்தரபிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி அம்மாநில அரசு நடத்திய உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில சுற்றுலா துறை அமைச்சர் ரீட்டா பகுகுனா ஜோஷி 36 பக்க சுற்றுலா கையேட்டை வெளியிட்டார். இந்த கையேட்டில் உபியின் முக்கிய சுற்றுலா மையமாக காசி நகரம் முதலிடத்தில் உள்ளது. கிருஷ்ணரின் பிறப்பிடமான மதுராவுக்கு இரண்டாவது இடமும், உத்திரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் கோரக்பூர் மடத்திற்கு நான்காவது இடமும் அளிக்கப்பட்டுள்ளது. ராமாயண கதையில் குறிப்பிடப்படும் விந்திய மலைதொடர் இடங்களும் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. புத்த மத தலங்கள், ஜெயின் தலங்கள் ஆகியனவும் புதிதாக இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒரு இடத்தில்கூட தாஜ்மகால் இடம்பெறவில்லை.
இது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் ரீட்டாவிடம் செய்தியாளர்கள் கேட்கையில், தாஜ்மகால் உபியின் அங்கம்தான். அதற்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஆனால் உபி சுற்றுலா துறை அதிகாரிகளோ திட்டமிட்டேதான் தாஜ்மகால் தவிர்க்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.
உபி சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.154 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தாஜ்மகாலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்கிறார் உபி சுற்றுலா துறை இயக்குநர் அவிநேஷ் அவஸ்தி. ஆனால் கையேட்டில் ஆக்ரா, லக்னோ, வாரணாசி என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. தாஜ்மகால் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
கடந்த ஜூன் மாதத்தில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்திய கலாசாரத்தை ராமாயணமும், மகாபாரதமும்தான் பிரதிபலிக்கின்றன. தாஜ்மகால் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அது இந்திய கலாசாரத்தை சேர்ந்தது அல்ல, அமங்கலமானது என்று பேசியுள்ளார். மாநிலத்தின் முதலமைச்சரே இந்த கருத்தைக் கொண்டிருக்கும்போது, திட்டமிட்டே நீக்கப்பட்டிருக்கலாம் என்று பலரும் கருத்து சொல்கின்றனர்.
அப்படி திட்டமிட்டே நீக்கப்பட்டிருந்தால் அது இந்திய சுற்றுலா துறை வளர்ச்சியில் பாதகமான விளைவுகளையே உருவாக்கும். இந்திய சுற்றுலா வருமானத்தையும் பாதிக்கும். தாஜ்மகால் டிக்கெட் விற்பனை மூலம் 2013-14 முதல் 2015-16 வரை ரூ. 75 கோடி வருமானம் அரசுக்கு கிடைத்துள்ளது. உபியின் சுற்றுலா கையேட்டை வழிகாட்டியாகக் கொண்டால் தாஜ்மகாலை புறக்கணிக்கும் நிலைமை உருவாகும்.
இந்தியாவின் பன்மைத்துவம்தான் அதன் கலாசாரம் என்பதை பல வரலாற்று அறிஞர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநில அரசே ஒரு மதம் சார்ந்த தலங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது பன்மைத்துவம் அல்ல. அதிக அளவிலான சுற்றுலா வருமானத்தை ஈட்டித் தரும் தாஜ்மகால் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்தியாவுக்கு தலைகுனிவாக அமையும்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்