சபாஷ் சாணக்கியா: வளைந்து கொடுக்கணுங்க...!
சபாஷ் சாணக்கியா: வளைந்து கொடுக்கணுங்க...!
1980களில் வங்கியில் அதிகாரியாக நான் பணிபுரிந்த பொழுது எங்கள் கிளையில் ஒரு காசாளர்.அதிகம் படிக்காதவர்தான். ஆனால் மிகத் திறமைசாலி. கண்ணை மூடிக் கொண்டே நோட்டுக்களை அதிவேகமாக எண்ணுவார்.அப்பவெல்லாம் நோட்டு எண்ணும் எந்திரமெல்லாம் அதிகம் கிடையாது.
நாம் ஒரு கட்டு எண்ணுவதற்குள் இரண்டு கட்டுக்களை முடித்திருப்பார்!அத்துடன் உள்ளே ஏதேனும் கள்ள நோட்டு இருந்தால் உடனே தனியே எடுத்து விடுவார்! மனுஷன் நம்மைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவர், நோட்டைக் கண்ணால் பார்க்காமலேயே எப்படிக் கண்டுபிடித்தார்?கேட்டால், `தம்பி , எல்லாம் அனுபவம் தான் ' என்பார். `நோட்டை விரல் தொடும் பொழுதே எல்லாம் தெரிந்து விடும்' எனச் சொல்லிச் சிரிப்பார்!
வாடிக்கையாளர்கள் உணவு இடைவேளையில் வந்தால் கூட, கோபப்படாமல் பணத்தை வாங்கிக் கொள்வார்.சின்ன நோட்டு,அழுக்கு நோட்டு என்றெல்லாம் முகம் சுளிப்பதே கிடையாது! மிக முக்கியமானதைச் சொல்லணுமே! அவர் மிக நேர்மையானவர்.யாரேனும் தவறாக அதிகப் பணம் கொடுத்து விட்டால் உடனே திருப்பிக் கொடுத்து விடுவார்.அவர் பணப் பட்டுவாடா செய்தால் பலரும் அதை எண்ணிப் பார்க்காமல் வாங்கிப் போவதைப் பல முறை பார்த்து இருக்கிறேன்.
ஆனால் இவ்வளவு நல்ல பணியாளரிடம் ஒரு குறை இருந்தது.தினமும் தாமதமாக வருவார்.10 மணி அலுவலகத்திற்கு 10.10 அல்லது 10.15 க்குத் தான் வருவார்! தூரத்திலிருந்து மின்சார ரயில் பிடித்துப் பின்னர் பேருந்து பிடித்து, ஓடி வருவதற்குள், பாவம் நேரமாகிவிடும்! எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் எங்கேயாவது தாமதமாகி விடுமாம்!
அவர் வந்தவுடன் நேரே காசாளரின் தனிக்கூண்டுக்கள் நுழைந்து, சுவாமி படங்களுக்குப் பூ போட்டுவிட்டு வேலையைத் தொடங்குவார்!சில வாடிக்கையாளர்கள் முணுமுணுத்தாலும் அவரின் அதிவேக சேவையால் விரைவில் எல்லாம் அமைதியாகிவிடும்!
ஆனால் பிரச்சினை வேறு விதமாகக்கொப்பளிக்கும்! பணப் பட்டுவாடா செய்யும் காசாளருக்கென்று தனியே கூடுதல் சம்பளம் உண்டு.எனவே அவர் மூன்று முறை தாமதமாக வந்தால் அவரை பணிசெய்ய அனுமதிக்கக் கூடாதென்றும், அவர் இடத்தில் மற்றவர்க்கு வாய்ப்புத் தர வேண்டுமென்றும் குரல்கள் எழுந்தன!
தர்ம சங்கடமான நிலைமை உருவாயிற்று.விதிமுறைகள்படி பார்த்தால் பணிக்குத் தாமதமாக வரக் கூடாதுதான். காசாளரை அனுமதிக்கக் கூடாது தான்.ஆனால் அந்த 10,15 நிமிடங்களுக்கு மேலேயே காசாளர் மாலையில் பல வேலைகள் பார்த்து விடுவாரே!
கிளை மேலாளார் யோசித்தார்.அவர் ஓர் அஞ்சா நெஞ்சர்.பெயரா?அதற்குள் மறந்து விட்டீர்களா? ரெங்கநாதன்! அவரைப் பொறுத்த வரை முதலில் மனசாட்சிக்குப் பயப்படணும்.மற்றபடி சட்டதிட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்!சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விதிகளை அமல்படுத்துவதற்காகத் தான் மேலாளர்கள் இருக்கிறோம் என்பார்.
சட்டத்தோடு நடைமுறையையும் ( law and practise)பார்க்க வேண்டுமென்று அவர் சொல்வதை மறுக்க முடியுமா?
அண்ணே, அடிப்படைக் கொள்கைகளை எப்பவும் விட்டுக் கொடுக்கக் கூடாது! நேர்மை, கண்ணியம், செயல் திறமை, விசுவாசம் இவற்றில் குறை இருந்தால் கண்டிப்பும் தண்டிப்பும் வேண்டியது தான்! ஆனால் சின்ன விஷயத்தில் விட்டுக் கொடுத்தால் தப்பா என்ன?
`ஒருவரின் கெட்டிக்காரத்தனம் அவர் எவ்வளவு வளைந்து கொடுக்கின்றார் என்பதை வைத்தே அளவிடப்படும்' என்றார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்!நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? சும்மா சட்டம் பேசிக் கொண்டு இருக்காமல் , அந்தக் காசாளரின் சேவையை வங்கியின் வளர்ச்சிக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரங்கநாதன் செய்தது சரியா, தவறா?
எனது உறவினர் ஒருவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனிதவள மேலாண்மை இயக்குநராகப் பணிபுரிகிறார்.அங்கெல்லாம் விதிமுறைகளே இதை அனுமதிக்கின்றனவாம்! அதாவது பணிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.நினைத்த பொழுது வீட்டிற்குப் போய் விடலாம்.ஆனால் கொடுத்த வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்து விட வேண்டும்!
அதுமட்டுமில்லைங்க.அவரவர்கள் விரும்பின உடையில் பணிக்கு வரலாமாம்.இந்த மாதிரி பல சுதந்திரங்கள் இருப்பதால் பல நல்ல பணியாளர்கள் , முக்கியமாகப் பெண்கள், வேறு இடங்களில் அதிக சம்பளம் கிடைத்தாலும் அந்த நிறுவனத்தை விட்டு அவர்கள் போவதே இல்லையாம்!
வாடிக்கையாளர் சேவை சார்ந்த பணிகளில் வேண்டுமானால், இது சாத்தியமில்லாது இருக்கலாம். ஆனால் மற்ற இடங்களில்? பணி செவ்வனே நடக்க வேண்டும் என்பதுதானே அடிப்படைக் குறிக்கோள்? அதற்கு உதவாத ,தேவையற்ற விதிமுறைகளை முடிந்த வரை மாற்றினால் தெய்வக்குற்றமா என்ன?
`எல்லாக் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்கள்.வளைந்து நெளிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன' என்கிறார் சாணக்கியர்!
Comments
Post a Comment