சபாஷ் சாணக்கியா: இருக்கும்... ஆனால் பயனிருக்காது!
சபாஷ் சாணக்கியா: இருக்கும்... ஆனால் பயனிருக்காது!
பல ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிக்கிழமை மாலை வேளையில் நண்பரின் வீட்டில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு மின்விளக்குகள், விசிறிகள் யாவும் அணைந்து விட்டன! இன்வெர்ட்டர் இல்லாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. பியூஸ்தான் போயிருக்க வேண்டும் எனத் தெரிந்தது.
நண்பருக்கு இரு மகன்கள்.நல்ல பையன்கள்.மூத்தவன் மின்னணுப் பொறியியல் படித்துக் கொண்டிருந்தார். இளையவன் பத்தாவது படித்துக் கொண்டிருந்தான். தயவு செய்து இதை நம்புங்கள்.நண்பர் என்ன வேலை சொன்னாலும், இருவருமே மறுப்புச் சொல்லாமல், போக்குக் காட்டாமல், உடனே செய்து விடுவார்கள்!
நண்பர் பியூஸை சரி செய்யும்படி தனது மூத்த மகனிடம் கூறினார். அவரோ, `எனக்கு அதில் பழக்கமில்லை, ஆனாலும் பார்க்கிறேன்' என்று பியூஸ் வயரையும் ஸ்க்ரூ டிரைவரையும் தேடத் தொடங்கினார். பின் னது கிடைக்கவேயில்லை! மீட்டர் பெட்டி இருக்குமிடம் சென்றவர் பதினைந்து நிமிடங்களாகியும் திரும்ப வில்லை!
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளைய மகன் அடுக்களைக்குள் சென்று ஒரு தேநீர்க் கரண்டியை எடுத்து ஸ்க்ரூ டிரைவாக பயன்படுத்தினார். மின் தொடர்பு கிடைத்து வீடு பிரகாசமானது! ஐயா, நூல் அறிவு வேண்டியதுதான்.ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத படிப்பினால் என்ன பயன்? இந்த வக்கீல் குமாஸ்தாக்கள், ஆவணங்கள் எழுதுபவர்கள் (document writers) பட்டங்கள் வாங்காமலேயே பாராட்டும்படி பணி செய்யக் காரணம் அவர்களுக்கு நடைமுறை நெளிவுசுளிவுகள் தெரிந்திருப்பது தானே?
கைக் குழந்தை ஏன் அழுகிறது, அதற்குப் பசியா, வலியா என்பதை பாட்டிமார்கள் சரியாகக் சொல்வதெப்படி? வலியென்றால் அதற்குக் காரணம் குழந்தையின் காதில் எறும்பு நுழைந்ததா, முதுகில் பூச்சி கடித்ததா, அல்லது பால் கொடுக்கும் அன்னை முந்தைய தினம் மாம்பழம் சாப்பிட்டதா என்று சரியாகக் கணிப்பதையும் நீங்கள் பார்த் திருப்பீர்கள்!
விஞ்ஞானக் கோட்பாடுகள் (Theory) தெரிந்திருக்க வேண்டியது நல்லதே, அவசியமே. ஆனால் அவற்றின் நடைமுறை உபயோகங்கள் ( practice ) தெரியாவிட்டால் பலனில்லை! மருத்துவம்பார்க்கும் வைத்தியருக்கு நோயும், நோய்முதலும் தெரிந்தால் மட்டும் போதாது.அதைத் தணிக்கும் நடைமுறையும் தெரிந்திருக்க வேண்டும்.
காரின் வெவ்வேறு பாகங்களைப் பற்றி வெகுவாகப் படித்தவரை விட, கார் ஸ்டார்ட் ஆகவில்லையென்றால் உடனே சரிசெய்யும் மெக்கானிக்கைத் தானேங்க பாராட்டுவோம்? இந்த ஏட்டுச் சுரைக்காயை வைத்துக் கொண்டு சமைக்க முடியாமல் இருப்பவங்களைப் போலவே தானுங்க கோடிக்கணக்கில் சொத்தை வைத்துக் கொண்டு ஐயாயிரம் பத்தாயிரத்திற்கு அலைகிறவர்கள் நிலைமையும்!
எனக்குப் பரிச்சயமான செல்வந்தர் ஒருவர். சொத்துகளைத் தகுந்த நேரம் பார்த்து குறைந்த விலைக்கு வாங்கி விடுவதில் பலே கில்லாடி! அல்லது அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து விடுவார். பெண்டாட்டி என்ன மன்றாடினாலும், தங்கம் வைரம் எல்லாம் வாங்க மாட்டார்! ' கவரிங் போட்டுக்கோ, நாம போட்டால் யாருக்கும் சந்தேகம் வராது' என்பார்!
நல்ல உடை கூடக் கிடையாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவருக்குச் சொத்து நிறைய சேர்ந்தது. வட்டி வருமானமும் ஏறியது. ஆனால் என்ன பயன்? ஒரு நாள் இரவு 11 மணிக்கு அவர் மனைவிக்கு இதய வலி. மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல வேண்டியதாயிற்று. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றார்.
மருத்துவக் காப்பீடு இல்லை. வீட் டில் இருந்தது ஏழாயிரம் ரூபாய் தான். அதுவும் மனைவி மறைத்து வைத்திருந்தது! பல கோடிக்கு அதிபதியானவர் 5 லட்ச ரூபாய் திரட்டப் பட்ட பாடு இருக்கிறதே, அப்பப்பா! அவர் மருத்துவமனைக்குப் போனதும், அவசரத்திற்கு மூவாயிரம் தேவைப்பட்டதால் தனது வாகன ஓட்டுனரிடமே வெட்கத்தை விட்டுக் கேட்க வேண்டியதாயிற்று! `ரொக்கம்தான் ராஜா' (Cash is King) என்று சும்மாவா சொன்னார்கள்!
வங்கிகளில் கடன் கேட்கும் நிறுவனங்களின் Current Ratio 1.33: 1 இருக்க வேண்டும் என்பது பொதுநியதி. அதாவது மூலதனம் அதிகமாக இருந் தால் மட்டும் போதாது.நிறுவனம் பணம் கையாள்வதில் திரவத்தன்மை (liquidity) இருக்கிறதா என்பது முக்கியம். ஒரு வருடத்திற்குள் பணமாகக் கூடிய stock, debtors முதலியவை current assets எனப்படும். ஓர் ஆண்டிற்குள் நிறுவனம் பணமாகக் கொடுக்க வேண் டிய creditors, expenses, போன்றவை current liabilities எனப்படும். முன்னது, பின்னதை விட அதிகமாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 1.33 மடங்கு!
`உடனே காசாக்கக் கூடிய தன்மை தான் நிதியமைப்பிற்கான பிராணவாயு ஆகும்' என்பார் ஆல்பபெட் நிறுவனத்தின் நிதி அதிகாரி ரூத் பெரோட்! ரொக்கம் இல்லையென்றால் எவ்வளவு பெரிய நிறுவனத்திற்கும் திண்டாட்டம் தானேங்க!
சாணக்கியர் இதை எப்படிச் சொல்கிறார் பாருங்கள். `வெறும் புத்தக அறிவையும், மற்றவர்களிடம் கொடுக்கப்பட்ட பணத்தையும், தேவை ஏற்படும் பொழுது உபயோகப் படுத்திக்கொள்ள முடியாது '.
Comments
Post a Comment