அலசல்: வங்கி வாரிய குழு தேவையா?
அலசல்: வங்கி வாரிய குழு தேவையா?
ஜிஎஸ்டி களேபரத்தில் கடந்த சில மாதங்களாக நடந்த பல விஷயங்கள் எதுவும் நம் நினைவில் இல்லை. ஜிஎஸ்டி காரணமாக வங்கி வாரிய குழுவில் (பிபிபி) நடக்கும் அக்கப்போர்கள் எதுவும் நம் கண்களுக்கு புலப்படவில்லை.
பிஜே நாயக் குழுவின் பரிந்துரைகளின் பெயரில் வங்கி வாரிய குழுவை மோடி தலைமையிலான அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைத்தது. ஆனால் இந்த குழுவுக்கு அதிகாரம் இருக்கிறதா, இந்த குழு தேவையா? என்னும் விவாதங்களை வங்கித்துறையில் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
நாயக் கமிட்டியின் பரிந்துரைகளில் மத்திய அரசுக்கும் வங்கி வாரியக்குழுவுக்கும் எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. தனிப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் எதுவும் இந்த குழுவால் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த குழுவின் கவனத்துக்கு செல்லாமல் குழுவின் பணிகளில் மத்திய அரசால் தலையிடவும் முடியும்.
வங்கிகளின் தலைவர்களை நியமனம் செய்வது, வங்கிகளுக்கு உத்திகள் வழங்குவது நிதி திரட்டும் பணிகளில் உதவுவது உள்ளிட்ட பணிகளை இந்த குழு செய்யும். ஆனால் இது எதனையும் இந்த குழுவால் தன்னிச்சையாக செய்ய முடியாது. இந்த குழுவால் செய்ய முடிந்தது பரிந்துரைகள் மட்டுமே.
கடந்த ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை பதவிக்கு மகேஷ் குமார் ஜெயினை வங்கி வாரியக்குழு பரிந்துரை செய்தது. சில மாதங்களுக்கு பிறகு வேறு வங்கிக்கு அவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் மற்றும் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர்களை பிபிபி அனுமதி இல்லாமலேயே மத்திய அரசு மாற்றியது. தவிர இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக நியமனம் செய்தது. உதாரணத்துக்கு டிபி மொஹாபாத்திராவை சிண்டிகேட் வங்கிக்கும், சுனில் மேத்தாவை அலாகாபாத் வங்கிக்கும் நிர்வாக இயக்குநராக பிபிபி பரிந்துரை செய்தது. ஆனால் பரிந்துரைக்கு மாற்றாக இருவரையும் மாற்றி மத்திய அரசு நியமித்தது.
இந்த குளறுபடிகளால் பிபிபி உறுப்பினர் ஹெச்.என்.சினார் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அடுத்த 10 நாட்களிலேயே மீண்டும் இந்த குழுவில் இணைவதாக அறிவித்தார். தவிர நிதி நிறுவனங்களுக்கு தலைவர் பதவியை நியமிக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துவிட்டது.
பேராசிரியர்கள், நிதித்துறை அனுபவம் இருக்கும் பலரும் இந்த அமைப்பு தேவையா? என்னும் கேள்வியை கேட்கத்தொடங்கி இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்தக் குழுவுக்கு மேலும் இரு உறுப்பினர்களை மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. அடுத்த எஸ்பிஐ தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் இந்த குழு இறங்கி இருக்கிறது. இந்த பரிந்துரையாவது ஏற்கப்படுமா என்பது மத்திய அரசுக்கே வெளிச்சம்.இந்த குழுவுக்கு அதிகாரம் வழங்கலாம். இல்லை இந்த குழுவை கலைத்துவிடலாம். எந்தவிதமான அதிகாரங்களும் இல்லாமல் பத்தோடு பதினொன்றாக இருப்பதற்கு இந்த குழு எதற்கு?
Comments
Post a Comment