புதிய இலக்கில் பயணிக்கும் முன்னாள் நண்பர்கள்!
புதிய இலக்கில் பயணிக்கும் முன்னாள் நண்பர்கள்!
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. இது இனி ஆட்டோமொபைல் துறைக்கும் பொருந்தும். கடந்த வாரம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனமும் கைகோர்த்துள்ள சம்பவம் இதைத்தான் உணர்த்துகிறது.
இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்தபோது, அந்நிறுவனம் கூட்டாளியாக தேர்வு செய்தது மஹிந்திரா அண்ட் மஹிந்திராவைத்தான். 1995-ம் ஆண்டு சமபாதி மூலதனத்தோடு ஃபோர்டு மஹிந்திரா நிறுவனம் உருவானது. ஆனால் இந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை. மூன்று ஆண்டுகளில் இரு நிறுவனங்களும் பிரிந்தன.
இதையடுத்து ஸ்கார்பியோ மாடலை தயாரிக்கத் தொடங்கியது மஹிந்திரா. பிரிந்துபோன ஃபோர்டு நிறுவனம் சென்னையை அடுத்த மறைமலை நகரில் தனியாக ஆலை அமைத்து கார் உற்பத்தியைத் தொடங்கியது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரு நிறுவனங்களும் இணைய முடிவு செய்துள்ளன.
போக்குவரத்து, அதற்கு தேவையான வாகனங்களைத் தயாரிப்பது, பேட்டரி வாகன தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகியவற்றை இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும் மேற்கொள்வதற்கு உத்தி சார் அடிப்படையில் இரு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.
முதல் கட்டமாக இந்த கூட்டணியை மூன்றாண்டு காலத்துக்குத் தொடர்வதெனவும் அதன் பிறகு தேவைக்கேற்ப நீட்டிப்பதெனவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. இதன் மூலம் இரு நிறுவனங்களும் பரஸ்பரம் வலுவான தளங்களை பகிர்ந்துகொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் பிரதான அம்சமாகும்.
அதாவது சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஃபோர்டு நிறுவனத்தின் உத்திகளை மஹிந்திரா நிறுவனமும், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா கடைப்பிடிக்கும் உத்திகளை ஃபோர்டு நிறுவனமும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும்.
சர்வதேச அளவில் ஆட்டோமொபைல் துறையில் மாறிவரும் தொழில்நுட்ப மாற்றத்தில் ஸ்திரமான வளர்ச்சியை எட்ட இதுபோன்ற கூட்டணி தேவை என்று மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா குறிப்பிட்டுள்ளார்.
இணைவதும் பிரிவதும்
வெளிநாட்டு நிறுவனங்களுடனான கூட்டணி ஏற்படுவதும், அது முறிந்து போவதும் மஹிந்திரா நிறுவனத்துக்கு புதிதல்ல. ஃபோர்டு நிறுவனத்துடன் 1998-ம் ஆண்டு கூட்டணி முறிந்த பிறது தனது முயற்சியில் எஸ்யுவி ரக கார்களை அறிமுகப்படுத்தி இந்தப் பிரிவில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டது.
2005-ம் ஆண்டில் செடான் கார்களைத் தயாரிப்பதற்காக பிரான்ஸின் ரெனால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. ரெனால்ட், மஹிந்திரா, நிசான் ஆகிய மூன்று நிறுவனங்களும் அப்போது கைகோர்த்தன. ஆனால் லோகன் கார்களை தயாரித்ததோடு சரி. பின்னர் ரெனால்டுடனான உறவு முறிந்து போனது. இதேபோல வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் நிசானுடனான உறவும் முறிந்துபோனது.
இதையடுத்து 2010-ம் ஆண்டில் தென் கொரியாவின் சாங்யோங் மோட்டார் நிறுவனத்தை வாங்கி எஸ்யுவி பிரிவில் தனது இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது மஹிந்திரா.
பெங்களூரைச் சேர்ந்த மொய்னி சகோதரர்கள் தயாரித்து வந்த பேட்டரி கார் நிறுவனத்தை வாங்கி சூழல் பாதிப்பில்லா பேட்டரி கார் தயாரிப்பிலும் தற்போது மஹிந்திரா தடம் பதித்துள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த மஹிந்திரா அடுத்து நஷ்டத்தில் இயங்கி வந்த கைனடிக் நிறுவனத்தை வாங்கி இருசக்கர வாகன உற்பத்தியில் கால் பதித்தது.
ஃபோர்டுடனான ஒப்பந்தம் இரு நிறுவனங்களுக்குமே வலுவான அடித்தளத்தை அமைக்கும். பிரிந்த இரு நிறுவனங்களுமே ஒன்றையொன்று நன்கு அறிந்தவை. இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் மூலம் வாகன போக்குவரத்தில் புதிய அத்தியாயம் பிறக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
Comments
Post a Comment