பாதகமாகும் தற்செயல் நிகழ்வு

பாதகமாகும் தற்செயல் நிகழ்வு

சி
ல தற்செயல் நிகழ்வுகள் சிலருக்கு சாதகமாக இருக்கும். அதுபோல பிரதமர் மோடி பொறுப்பேற்ற போது கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கியது. இது பல வகைகளில் மத்திய அரசுக்கு சாதகமாக இருந்தது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி செய்கிறோம். இதனால் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் இறக்குமதிக்கு ஆகும் செலவும் குறைந்தது. மேலும் வருமானத்தை உயர்த்த பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை தொடர்ந்து மத்திய அரசு உயர்த்தி கூடுதல் வருமானத்தையும் ஈட்டியது.
இந்த நிலைமையில் கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. சர்வதேச அளவில் நிகழ்ந்த தற்செயல் நிகழ்வு எப்படி அரசுக்கு சாதகமாக இருந்ததோ, அதேபோல, அதே தற்செயல் நிகழ்வு தற்போது பாதகமாகி இருக்கிறது. இதுநாள் வரையில் மாதத்துக்கு இருமுறை பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்த எண்ணெய் நிறுவனங்கள், சில மாதங்களுக்கு முன்பு விலையில் தினசரி மாற்றத்தை கொண்டு வந்தன. இந்த மாற்றத்துக்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை உயரவே, உற்பத்தி வரியை சிறிதளவு குறைக்கும் நிலைமை மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இந்த நிலைமையில் இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 64 டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

உயர்வுக்கு என்ன காரணம்?

கச்சா எண்ணெய் உயர்வுக்கு முக்கியமான காரணம் சவுதி அரேபியாவில் நிலவும் அரசியல் ஸ்திரமற்ற சூழல். சவுதி அரேபியாவில் 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரை ஊழல் புகார் காரணமாக சவுதி மன்னர் கைது செய்திருக்கிறார். பதவி போட்டி காரணமாக பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக எண்ணெய் உற்பத்தியை குறைக்க, எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக்) மற்றும் ஒபெக் அமைப்பில் இல்லாத பத்து நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. பிறகு மேலும் 9 மாதங்களுக்கு இந்த உற்பத்தி குறைப்பு நீட்டிக்கப்பட்டது. இந்த முடிவு வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது.
இந்த நிலையில் வரும் 30-ம் தேதி இந்த நாடுகளின் கூட்டம் நடக்க இருக்கிறது. உற்பத்தி குறைப்பு மேலும் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது.
இன்னும் சில டாலர்கள் உயர்வதற்கான சூழல் இருப்பதாகவே தெரிகிறது. தற்போது நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்திருப்பதால் ரூபாய் மதிப்பு உயரலாம். இதனால் இரட்டை பாதிப்புகள் ஏற்பட கூடும். நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்தவேண்டும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என கொள்கை வகுப்பாளர்களுக்கு நிறைய வேலை காத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்