அலசல்: தலையெழுத்தை நிர்ணயிக்கும் மூன்றெழுத்து!

அலசல்: தலையெழுத்தை நிர்ணயிக்கும் மூன்றெழுத்து!

மீபகாலமாக அன்றாடம் வாங்கும் பொருள்களின் விலையேற்றத்தால் திக்குமுக்காடிப் போவது நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள்தான். சாதாரண டீ கடையில் 8 ரூபாய்க்கு விற்ற டீ திடீரென 10 ரூபாயானது. கேட்டால் முதலாளியின் ஒரே பதில் ஜிஎஸ்டி.
சம்பளம் வாங்கி குடும்பத்துடன் சென்று ஹோட்டலில் சாப்பிடலாம் என்றால் மூன்று பேர் சாப்பிட்டதற்கு நான்கு பேருக்கான தொகையை செலுத்த வேண்டியுள்ளது. சர்வரிடம் கேட்டால் ஜிஎஸ்டி என்கிறார். தாங்கள் விற்கும் பொருளுக்குத் தொடர்பிருக்கிறதோ இல்லையோ, விலையைக் கூசாமல் உயர்த்திவிட்டு பெரும்பாலான வியாபாரிகள் கூறும் ஒரே பதில் ஜிஎஸ்டி.
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தால் நாட்டில் ஒருமுனை வரி விதிப்பாக இருக்கும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொருள்களின் விலை ஒன்றாக இருக்கும் என அரசு கூறியது பொய்த்துவிட்டதோ என்ற அவநம்பிக்கை மக்களிடையே ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான்.
பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதை உணர்ந்த அரசு அதற்குக் காரணம் 28 சதவீத உயர்ந்த பட்ச வரிவிதிப்பே என்பதை கண்டு, அதை உடனடியாக 18 சதவீதமாகக் குறைத்துவிட்டது.
ஜிஎஸ்டி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்திருந்தாலும் அரசு படிப்படியாக குறைகளைக் களைந்து வருகிறது. இதன்படி சமீபத்தில் 173 பொருள்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு விட்டது.
விலையைக் குறைத்தது மட்டுமின்றி அதன் பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கெனவே கையிருப்பில் உள்ள பொருள்கள் மீதும் திருத்தப்பட்ட அதாவது குறைக்கப்பட்ட வரி விதிப்பு அடிப்படையில் அதிகபட்ச சில்லரை விலையை (எம்ஆர்பி) அச்சிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
முன்னணி நிறுவனங்களான ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்), ஐடிசி, டாபர், கோத்ரெஜ், மாரிகோ போன்றவை தங்களது தயாரிப்புகளின் விலையை 9 சதவீதம் வரை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றின் பலன் வரும் வாரங்களில் வாடிக்கையாளர்கள் உணரும் வகையில் இருக்கும் என்று நம்பலாம்.
ஜிஎஸ்டி அமைப்பின் மிகப் பெரிய சாதக அம்சமே எந்த ஒரு மாநில அரசும் தன்னிச்சையாக வரியை விதிக்க முடியாது என்பதாகும். அனைத்து மாநில அரசுகளின் நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் மட்டுமே வரி விதிப்பைத் தீர்மானிக்க முடியும். இது கூட்டாட்சி தத்துவத்தின் மிகப் பெரிய ஒற்றுமையாகவே பெருமைபட கூறிக் கொள்ளலாம்.
ஆனால் அருணாசலப் பிரதேசத்தில் ஒரு சிமெண்ட் மூட்டை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதை என்னவென்று சொல்வது. அருணாசலப் பிரதேசம் இந்தியாவில் இல்லையா? அல்லது அங்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தில் இல்லையா. அரசுதான் பதில் கூற வேண்டும்.
பணமதிப்பு நீக்கத்தால் நொந்து போன மக்களை ஜிஎஸ்டி வாட்டி வதைக்கிறது. இவற்றுக்கு நிவாரணம் அரசின் கண்காணிப்பு மூலம் மட்டுமே கிடைக்கும். நினைத்த மாத்திரத்தில் விலையை ஏற்றும் வணிகர்களையும் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்