விளையாட்டல்ல... வியாபாரம்

விளையாட்டல்ல... வியாபாரம்

ந்தியன் பிரீமியர் லீக் ( IPL) வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய தொகையை கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றியுள்ளது ஸ்டார் இந்தியா. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் ஐபிஎல் போட்டிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்ப ரூ.16,347 கோடிக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. உலக அளவிலான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு போன்ற அனைத்து வடிவங்களுக்கும் இந்த உரிமத்தை பெற்றுள்ளது. அதுபோல இரண்டு மாதங்களுக்கு முன்பு சீனாவை சேர்ந்த விவோ மொபைல் நிறுவனம் ரூ.2,199 கோடி கொடுத்து டைட்டில் ஸ்பான்சராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பெற்றுள்ளது.
ஒளிபரப்பு உரிமை மற்றும் பிராண்ட் விரிவாக்கத்துக்காக இந்த தொகையை நிறுவனங்கள் அளிக்கலாம். ஆனால் விவோவுக்கு முன்னர் டைட்டில் ஸ்பான்சராக இருந்த பெப்சிகோ நிறுவனம் ரூ. 400 கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் 2015-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதற்கிடையே கடந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தை ரூ.440 கோடி அளித்து விவோ பெற்றது. இதைப்போலவே ஒளிபரப்புக்கான உரிமமும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இதில் பாதிதொகை கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முக்கிய விளம்பர மற்றும் சந்தை நிறுவனங்களும் ஸ்டார் இந்தியா இவ்வளவு தொகையை முதலீடு செய்யும் சாத்தியமில்லை என்று கூறின. ஆனால் ஸ்டார் இந்தியா நிறுவனம் சர்வதேச நிறுவனத்தின் துணை குழுமம் என்பதால் இது பிரச்சினையாகவே இல்லை.
ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனம் ரூ. 3,000 கோடிக்கும் அதிகமாக பிசிசிஐக்கு அளிக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. ஏனென்றால் நிறுவனம் முதல் ஆண்டிலிருந்தே தங்களது முதலீட்டை திரும்ப எடுக்க வேண்டும். ஆனால் இது சாத்தியம்தான் என்கின்றனர் சந்தை நோக்கர்கள். ஐபிஎல் கிரிக்கெட் விளம்பரம் மூலம் சோனி நிறுவனம் 2017-ம் ஆண்டில் ரூ.1,300 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எனவே இது சாத்தியம்தான். ஆனால் விளம்பரங்களின் விலையை அதிகரிப்பதுதான் இதற்கு வழியாக இருக்கும் என்கின்றனர்.
ஏனென்றால் 2016-ம் ஆண்டில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் ஐபிஎல் விளையாட்டில் விளம்பரம் செய்ய தனியாக கட்டணங்களை நிர்ணயித்தத்து. தவிர ஸ்டாண்டர்டு, ஹெச்டி என இரண்டு வகைகளுக்கு தனியாக கட்டணங்களை நிர்ணயம் செய்தது. எனவே இதுபோன்ற வழியை ஸ்டார் இந்தியா கையாளும் என்று பல்வேறு விளம்பர நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடுகின்றனர். அதேநேரத்தில் இவ்வளவு தொகை கொடுத்து பெற்றுள்ள உரிமத்தைக் கொண்டு தங்களது நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்கான வேலைகளையும் ஸ்டார் இந்தியா மேற்கொள்ளும். நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற் காகவும் இந்த உரிமம் உதவும் என்கிற இன்னொரு கருத்தும் உள்ளது. தங்களது அனைத்து சேனல்களின் மூலம் இந்த வருமானத்தை ஸ்டார் இந்தியா எடுத்துவிடும். ஏனென்றால் ஒளிபரப்பு தவிர ஆன்லைன் விளம்பரம் மூலமும் வருமானத்தை ஈட்டும் சாத்தியம் உள்ளது. ஏர்டெல், ஆர் ஜியோ, பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் ஒளிபரப்பு சேவையை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது ஒப்பந்த தொகை அதிகமாக இருந்தாலும் இதை துணிச்சலாக கைப்பற்றியதற்கு பின்னால் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி உதய் சங்கர் உள்ளார். இந்த ஒப்பந்தம் குறுகிய காலத்தில் நடந்த ஒன்றல்ல, ஆனால் இது அதிகமான செலவும் அல்ல என்று ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தாய் நிறுவனமான 20 செஞ்சுரி பாக்ஸ் கூறியிருக்கிறது. விளையாட்டல்ல வியாபாரம் என்பதையே ஸ்டார் இந்தியா ஒப்பந்தம் சொல்லியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்