நாணயத்துக்கு மதிப்பு உண்டா?
நாணயத்துக்கு மதிப்பு உண்டா?
நூ
று காசுகள் சேர்ந்தது ஒரு ரூபாய். ஒரு காசு, இரண்டு காசு, மூன்றுகாசு, ஐந்து காசு, பத்து காசு, 20 காசு, 25 காசு, 50 காசு, ஒரு ரூபாய் என நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது ஒரு காலம். இப்போது 25 காசு, 50 காசுகளை எவருமே வாங்குவதில்லை. அதற்கு மதிப்பில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிக்கை ஏதும் கிடையாது.
சரி ஒரு ரூபாய் நாணயம், 2 ரூபாய் நாணயம், 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு திடீரென ஒரு புரளி கிளம்பியது. அதாவது 10 ரூபாய் நாணயங்களும் செல்லாது என பரவலாகப் பேசப்பட்டது. அவ்வளவுதான் 500 ரூபாயைக் கொடுத்து 50ரூபாய்க்கு பொருள் வாங்கினால் மீதி 45 பத்து ரூபாய் நாணயங்களை கொஞ்சம் கூட யோசிக்காமல் தள்ளிவிட நினைத்த வர்த்தகர்கள் ஒருபுறம். அதேபோல தங்கள் வீட்டு உண்டியலில் ஆசையாக சேர்த்த 10 ரூபாய் நாணயங்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விடுமோ என அவசர கதியில் அதை பணமாக்க ஆளாய் பறந்தவர்கள் மறுபுறம்.
பொதுவாக சில்லரை பிரச்சினை எங்கெல்லாம் எழும் என்றால் அன்றாடம் பேருந்து பயணத்தில் நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையேதான் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும். பஸ்ஸில் ஏறும்போதே உரிய சில்லரை இல்லாதவர்கள் இறங்கிவிடலாம் என கறாராய் கத்தும் நடத்துநர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஏறிய பயணியை இறக்கிவிடும் அதிகாரம் இல்லை எனக் கூறி விடாக் கண்டனுக்கு கொடாக் கண்டனாய் பஸ்ஸில் ஏறி நடத்துநரை கதற வைக்கும் பயணிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்போது கொல்கத்தாவில் மிகச் சிறந்த பிசினஸ் எது என்றால் சில்லரை காசுகளை அளிப்பதுதான். 500 ரூபாய் கொடுத்தால் 575 ரூபாய்க்கு ஒரு ரூபாய் மற்றும் 2 ரூபாய் நாணயங்களை அளிக்கும் வர்த்தகர்கள் பெருகிவிட்டனர். 500 ரூபாய்க்கு 75 ரூபாய் லாபம் எனில் அது வங்கி அளிக்கும் வட்டியை விட அதிகமே. ஆனால் உண்மையில் நாணயங்களை எவரும் வாங்குவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
9ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் கொடுத்தால் நடத்துநர் 1 ரூபாய் சில்லரை இல்லை என்றால் அதை பொருட்படுத்தாமல் செல்ல பயணிகள் பழகிவிட்டனர். சில அடாவடி பயணிகள் இதற்கு விதி விலக்கு. அதேபோல முன்பு 8 ரூபாய் விற்ற டீ, சில்லரை 2 ரூபாய் மிச்சம் தர வேண்டும் என்பதாலேயே 10 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஜிஎஸ்டி.
சரி உண்மையிலேயே நாணயத்துக்கு மதிப்பு இருக்கிறதா. வங்கிகளில் நாணயங்களை டெபாசிட்டாக ஏற்பது கிடையாது. ஆனாலும் நாணயங்கள் தேவையாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவில் இன்னமும் ஒரு பென்னி (ஒரு சென்ட்) புழக்கத்தில் உள்ளது.
ஆனால் அங்கு இதுபோன்ற பிரச்சினை கிடையாது. இங்குதான் நாணயங்களுக்கு மதிப்பு உண்டு. ஆனால் அதை எவரும் விரும்புவது கிடையாது. சில்லரை அளித்தால் உண்டியலை உடைத்தாயா என்ற ஏளனப் பேச்சு இன்னமும் பல இடங்களில் கேட்கத்தான் செய்கிறது.
பொருளாதாரத்தின் சீரற்ற வளர்ச்சியின் மற்றொரு வெளிப்பாடுதான் இது.
Comments
Post a Comment