சாதித்த நண்பர்கள்
சாதித்த நண்பர்கள்
நீரஜ் சோக்ஷி, ஜிக்னேஷ் தேசாய்
மி
யூச்சுவல் பண்ட் திட்டங்களில் சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் அங்கம் வகிப்பவர்கள் மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தர்கள். இவர்கள்தான் பண்ட் திட்டங்கள் குறித்த புரிதலை சிறு முதலீட்டாளர்களிடம் உருவாக்குகின்றனர். இதில் சாதனை புரிந்துள்ளனர் இரண்டு நண்பர்கள்.
சூரத் நகரில் இயங்கி வரும் என் ஜே இந்தியா இன்வெஸ்ட் என்கிற நிறுவனம். ஜிக்னேஷ் தேசாய், நீரஜ் சோக்ஷி என்கிற இரண்டு நண்பர்கள் இணைந்து 1994-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை தொடங்கினர். இவர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள மியூச்சுவல் பண்ட் முதலீடு தற்போது ரூ.30,959 கோடியாக உள்ளது.
மியூச்சுவல் பண்ட் விநியோகத்தின் மூலம் 2016-17 நிதியாண்டில் ரூ.443 கோடி கமிஷன் பெற்றுள்ளனர். அதிக கமிஷன் பெற்றவர்களில் 2016-17 நிதியாண்டில் இவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்து ரூ.397 கோடி கமிஷன் பெற்று ஹெச்டிஎப்சி வங்கி இரண்டாவதாகவும், ரூ.280 கோடி கமிஷன் பெற்று ஐசிஐசிஐ வங்கி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
கடந்த நிதியாண்டிலும் என் ஜே இந்தியா இன்வெஸ்ட் நிறுவனம்தான் முதலிடத்தில் இருந்தது. தவிர கடந்த ஏழு ஆண்டுகளாக அதிக கமிஷன் பெற்றவர்களில் முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றனர். இந்த விவரங்களை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (ஆம்ஃபி) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் கல்லூரி காலத்தில் ஒரே அறையில் வசித்துள்ளனர். கல்லூரி முடித்ததும் நிதி சார்ந்த திட்டங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து 3000 சதுர அடி இடத்தில் சப் புரோக்கராக வேலைகளை தொடங்கியுள்ளனர். வாடிக்கையாளர்களுக்காக பங்குகளை வாங்குவது, பிக்ஸட் டெபாசிட், கார் லோன் என ஆரம்பத்தில் பல பணிகள்.
1995-ம் ஆண்டு இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் 11 நிறுவனங்கள் புதிதாக இறங்கியது நண்பர்களுக்கு புதிய வாசலை திறந்து விட்டுள்ளது. இவர்கள் தெளிவாக ரிலையன்ஸ் விஷன் பண்ட் 1995, பிர்லா சன் லைப் 95 பண்ட் விற்பனையில் மட்டும் கவனம் செலுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் இவர்களை நம்பி யாரும் முதலீடு செய்ய தயாராக இல்லை. ஆனால் இன்றோ 18,56,491 எஸ்ஐபி திட்டங்களை மியூச்சுவல் பண்ட் துறைக்கு அளித்துள்ளனர்.
இவர்களிடம் தற்போது 26,849 துணை முகவர்கள் உள்ளனர். இவர்களது ஐந்து மாடி அலுவலகத்தில் மட்டும் 15 லட்சம் வாடிக்கையாளர்களின் முதலீட்டு தகவல்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி என மிகப் பெரிய பண்ட் விநியோக நிறுவனங்களுக்கு மத்தியில் சாதாரணமாக நுழைந்து இந்த சாதனையை என் ஜே இந்தியா இன்வெஸ்ட் நிகழ்த்தியுள்ளது. காலத்தை சரியாகக் கணித்தால் நிதித் துறையில் சாதிக்க முடியும் என உணர்த்தியுள்ளனர் இந்த நண்பர்கள் என்றால் மிகையில்லை.
Comments
Post a Comment