தாதாவின் அடுத்த அதிரடி!
தாதாவின் அடுத்த அதிரடி!
இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன்களில் சவுரவ் கங்குலிக்கு தனி இடம் உண்டு. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்று 9 ஆண்டுகள் ஆன பிறகும் கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் `தாதா’ என்று அன்போடு அழைக்கப்படும் கங்குலி தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். ஆம், இந்த முறை அவரது ஆட்டம் மைதானத்துக்கு வெளியே!
கடந்த வாரம் அவரது பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனோடு தனது முதலீடு குறித்த அறிவிப்புகளையும் கங்குலி வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவனத்தில் 3 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக கங்குலி அறிவித்துள்ளார்.
மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் பிளிக்ஸ்ட்ரீ. 2014-ம் ஆண்டு சவுரப் சிங், நாகேந்தர் சிங் இருவரும் இந்த நிறுவனத்தை தொடங்கினர். யூடியூப், ஃபேஸ்புக், விமியோ போன்ற தளங்களில் உள்ள வீடியோக்களை ஒரே தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த செயலி இயங்ககூடியது. மேலும் இந்த வீடியோக்களை இலவசமாக பார்க்கமுடியும். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தில்தான் சவுரவ் கங்குலி 3 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். கங்குலியோடு இணைந்து வென்ச்சர் கேட்டலைட்ஸ், கொல்கத்தாவை மையமாக கொண்டு இயங்கும் ஆதித்யா குழுமம், மோக்ஸ் ஸ்போர்ட்ஸ் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் பிளிக்ஸ்ட்ரீ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவில் பிரபலமான நபரின் மூலம் நிறுவனத்துக்கு முதலீடு வந்திருப்பது குறித்து பிளிக்ஸ்ட்ரீ நிறுவனத்தின் நிறுவனர் சவுரப் சிங் குதூகலத்தில் உள்ளார். மேலும் நிறுவனத்தை விரிவாக்கும் யோசனைகளில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல மேற்கு இந்திய தீவுகள் அணியின் சிக்ஸர் நாயகன் கிறிஸ் கெயிலும் இந்தியாவில் ஐஓஎன்ஏ என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யப்போவதாக கடந்த வாரத்தில் அறிவித்துள்ளார். ஆனால் எவ்வளவு முதலீடு என்பது குறித்த விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. ஐஓஎன்ஏ என்டர்டெயிமெண்ட் வெர்சுவல் விளையாட்டுகள் துறையில் இயங்கிவருகிறது.
ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக சிங்கப்பூரில் இருந்து ஒரு வென்ச்சர் கேபிடல் நிறுவனம் முதலீடு செய்தது. அடுத்தகட்டமாக ரூ.200 கோடி முதலீடு திரட்ட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதலீடுகளை விரிவாக்க பணிகளுக்கு பயன்படுத்தப்போவதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. கர்நாடாகவில் விர்ஜினியா மாலில் 70,000 சதுர அடியில் விளையாட்டு அரங்கம் இந்த நிறுவனத்துக்கு உள்ளது.
யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி போன்றோர் ஏற்கெனவே பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் கங்குலி, கிறிஸ் கெயில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் துறையிலும், என்டர்டெயிமெண்ட் துறையிலும் தேர்ந்தெடுத்து முதலீடு செய்துள்ளனர். மைதானத்துக்கு வெளியே இவர்களின் ஆட்டம் எவ்வாறு பணத்தை குவிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Comments
Post a Comment