சபாஷ் சாணக்கியா: சொல்லாதே யாரும் கேட்டால்...!
சபாஷ் சாணக்கியா: சொல்லாதே யாரும் கேட்டால்...
ஓர் ஞாயிறு மாலை. குழந்தைகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.3 முதல் 6 வயது சிறுவர் சிறுமியர். நாங்கள் நண்பர்கள் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.
சோபாவிற்குப் பின்னால் சென்று உட்கார்ந்து கொண்டது ஒரு வாண்டு.கதவிற்குப் பின்னால் நின்று கொண்டு எட்டிஎட்டிப் பார்த்தது இன்னுமொரு வாண்டு. திரைச்சீலையால் முகத்தை மூடிக் கொண்டதால் தன்னை யாரும் கண்டு பிடிக்க முடியாதென்ற நினைப்பில் மற்றுமொன்று!
அவர்களைக் கண்டுபிடிக்கும் (!) பங்கு அவர்களுள் மிகக் குட்டியாய் இருந்த சிறுமிக்கு! அவள் கண் கட்டவிழ்க்கப் பட்ட பின் அங்குமிங்கும் நோட்டம் விட்டாள். சின்ன அறைதான்.எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்தான்.ஆனால் அவள் மிகச் சிறுமி ஆயிற்றே! கொஞ்சம் தடுமாறினாள்.அதற்குள் அங்கிருந்த நண்பர்கள் மற்ற குழந்தைகள் ஒளிந்திருந்த இடங்களை சைகையால் காண்பிக்க ஆரம்பித்தார்கள்! அந்தச் சிறுமி ஒவ்வொருவராய்த் தொட, பெரும் ஆரவாரத்துடன் விளையாட்டு முடிந்தது!
அது சரி, அச்சிறுமிக்கு மற்ற குழந்தைகள் ஒளிந்திருந்த இடங்களை ஏன் மற்றவர்கள் காட்டிக் கொடுத்தார்கள்? சிறுமியே சிறிது நேரத்தில் கண்டு பிடித்திருப்பாளே? நம்முள் பலருக்கும், `எனக்குத் தெரியும், ஆனால் உனக்குத் தெரியாது' எனக் காண்பித்துக் கொள்வதில் ஓர் அலாதி மகிழ்ச்சி கிடைப்பது தான் காரணமோ?
எனவே எங்கெங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அதைக் காட்டிக் கொள்கிறோமோ?
எனக்குத் தெரிந்தவர் ஒருவர்.நல்லவர் தான். ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி இல்லை.நிறைய நண்பிகள்.நல்ல வேளையாக, கல்யாணம் ஆனபின் கிருஷ்ண லீலைகள் குறைந்துவிட்டன!
இந்த விஷயத்தில் அவரது அம்மாவின் அணுகுமுறை எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. முதலில் பையனைக் கண்டித்துக்கொண்டிருந்தவர் தனக்கு மருமகள் வந்த பின் மாறி விட்டார். மகனின்அத்தகைய நடவடிக்கைகளை தவறாக நினைக்கவில்லை,
அதிகம் கண்டு கொள்வதும் இல்லை!
ஒரு நாள் வேறு ஏதோ விஷயத்தில் மாமியார் மருமகளிடையே வாக்குவாதம் முற்றியது.
'இப்படியே போனால், நான் விவாகரத்து வாங்கிக் கொண்டு போய் விடுவேன்' என்றாள் மருமகள் !
மாமியாரோ ' என்னம்மா, நீ என்ன பாக்தாத் பேரழிகியா? என் மகனை உன்னை விட அதிகச் சிவப்பான,உயரமான,
எத்தனை பெண்கள் சுற்றிச்சுற்றி வந்தார்கள் தெரியுமா?' என்று ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் விலாவாரியாக
பெயருடன் எப்படித் தொடர்பு, எவ்வளவு நாட்கள் தெரியும், என பணிபுரியும் இடம், முகவரியுடன் கர்வமாக விளக்கினார்!
பாவம், கணவரின் கடந்த வாழ்க்கை ரகசியங்களை அந்த நல்ல உள்ளத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!
அப்புறம் என்ன, நல்லவனாக மாறியிருந்தும், அன்பரின் இல்வாழ்க்கை இல்லாத வாழ்க்கையாய் முடிந்தது!
மருமகளுக்குத் தெரியாத பல விஷயங்களை நாமே சொல்லிக் கெடுத்தோமே என அவர் பின்னர் வருந்தி என்ன பயன்?
'இதோ பார், இந்த ரகசியத்தைப் போட்டு உடைக்கிறேன்,இப்பவாவது இதை நீயும் தெரிந்து கொள்' எனும் படியான ஒரு அணுகுமுறையும் தானே இதற்கெல்லாம் காரணம்?
அந்த சிறு கர்வத்தால் அதன் பின் விளைவுகளை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை!
ரகசியம் காப்பது பல இடங்களில் மிகவும் அத்தியாவசியம் அல்லவா?
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிப்பதற்கு முன்பு எவ்வளவு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்?
பொக்ரானில் 1974-ல் இந்தியா அணுகுண்டு வெடித்த பொழுதும் அப்படித் தானே?புன்னகைக்கும் புத்தர் என ரகசியப் பெயரிடப்பட்ட அந்த திட்டத்திற்கு எவ்வளவு நாட்கள் உழைத்திருப்பார்கள்? உலக வல்லரசுகளின் கண்களில் மண்ணைத் தூவி சாதனை படைத்தோம் இல்லையா?
வருடாவருடம் நமது மத்திய அரசின் பட்ஜெட்டும் அப்படித் தானே ரகசியம் காக்கப்பட்டு வெளியிடப்படுகிறது?
வர்த்தகத்திலும் இது அவசியம் அல்லவா? நாம் புதிதாய் என்ன செய்யப்போகிறோம் என்பது போட்டியாளருக்கு, எதிராளிக்குத் தெரியாத வரைதான் நமக்கு வெற்றி!
எதிரி எதிர்பார்க்காததை,எதிர்பார்க்காத நேரத்தில் செய்வதில் தானேங்க வெற்றி?( Taking the enemy unawares)
பதவி உயர்வு, இடமாற்றம், ஆட்குறைப்பு என எதுவாக இருந்தாலும் அதற்கு தேவை கட்டுப்பாடு,ரகசியம் காக்கும் கட்டுப்பாடு!
'ஒரு ரகசியத்தை மூன்று பேர்களால் காப்பாற்ற முடியும். ஆனால் அதற்கு இருவர் இறந்திருக்க வேண்டும்' என்றார் பெஞ்சமின் பிராங்க்ளின்!
'உன்னிடம் மட்டும் சொல்கிறேன்.நீ யாரிடமும் சொல்லாதே' எனும் அணுகுமுறை எங்கேணும் வெற்றி பெற்றதுண்டா? இதே வசனத்துடன் அது தொடர் பயணமல்லவா மேற்கொள்ளும்? 'உங்களுடைய ரகசியங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.இல்லையென்றால் அது உங்களை அழித்து விடும்!' எனும் சாணக்கிய மந்திரம் சிந்திக்க வேண்டியது!
Comments
Post a Comment