பில்டரை தேர்ந்தெடுப்பது எப்படி?
பில்டரை தேர்ந்தெடுப்பது எப்படி?
நம்மில் பலர் வாழ்நாளின் மொத்த சேமிப்பையும் வீடு வாங்குவதற்கு செலவிடத் தயாராக இருக்கிறோம். ஆனால் போன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கும் போது செய்யப்படும் முன்னேற்பாடுகளைக் கூட வீடு வாங்கும் போது நாம் செய்யவில்லை. விலை, இடம், சட்டப்பூர்வமான விஷயங்கள் முக்கியமானவை என்றாலும், கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதும் முக்கியம். அதிக லாபம் மற்றும் இந்த தொழிலில் நுழைவதற்கு அதிக சிரமங்கள் இல்லை என்பதால் பல பில்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் சூழ்நிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் நிலைமையை சரியாக கையாள முடியாது. அதனால் சில கேள்விகளுக்கு சரியான பதில் கிடைத்த பிறகு பில்டரை தேர்வு செய்யலாம்.
கட்டுமான நிறுவன தகவல்கள்
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற்றிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் அரசு அமைப்பின் {Real Estate Regulatory Authority (RERA)}.இணையதளத்தில் பில்டரின் தகவல்கள் மற்றும் சம்பந்தப்பட்ட புராஜக்ட் குறித்த தகவல் கிடைக்கும். உதாரணத்துக்கு இதற்கு முன்பு அந்த நிறுவனம் கட்டிமுடித்த திட்டம் என்ன என்பது குறித்த தகவல் இருக்கும்.
தவிர ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் பல தனியார் நிறுவனங்கள் இதற்கென பிரத்யேக இணையதளங்கள் வைத்துள்ளன. உதாரணத்துக்கு புராப்டைகர் உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதளத்தில் ஒரு டெவலப்பர் எவ்வளவு திட்டங்களை முடித்திருக்கிறார், எத்தனை ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறார் என்பன உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள முடியும். மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்தை பார்க்கும் போதும் கூடுதல் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். கிரிசில், இக்ரா உள்ளிட்ட தரமதிப்பீட்டு நிறுவனங்களின் அறிக்கையையும் பார்க்கலாம். இவற்றின் மூலம் கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடு, திட்டத்தை எவ்வளவு காலத்துக்குள் முடிப்பார்கள் என்பது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.
வாடிக்கையாளர் கருத்து
கட்டுமான நிறுவனம் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு சென்று பார்வையிடலாம். அப்போது அந்த கட்டிடத்தின் தன்மை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். கட்டத்தின் அமைப்பு எப்படி இருக்கிறது, ஏதேனும் விரிசல் உருவாகி இருக்கிறதா, அங்கு குடியிருப்பவர்களின் (வீடு வாங்கியவர்களின்) அனுபவம் எப்படி என்பது குறித்து கேட்டறியலாம். சரியான நேரத்துக்கு கட்டிடம் வழங்கப்பட்டதா, பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்தார்களா உள்ளிட்ட விவரத்தை அறிவதன் மூலம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி பில்டரை தேர்வு செய்யலாம்.
இதே நிறுவனத்திடம் இன்னொரு வீடு வாங்குவீர்களா என்று கேட்பதன் மூலம் இன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியும். ஆம் என்றால் அடுத்த கட்டத்தை குறித்து யோசிக்கலாம். இல்லை என்றால் என்ன காரணம் என்று கண்டறிந்து அந்த காரணம் இல்லாத பில்டரை தேர்வு செய்யலாம்.
நிதி நிலைமை
கட்டுமான நிறுவனத்திடம் போதுமான நிதி வசதி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். போதுமான நிதி இருந்தால் மட்டுமே சரியான நேரத்தில் கட்டி முடிக்க முடியும். வங்கியில் கடன் வாங்கும் தகுதி இருக்கும் நிறுவனங்கள் அல்லது பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டை பெறும் நிறுவனங்களுக்கு இது போன்ற பணப்புழக்க பிரச்சினைகள் இருக்காது. அதேபோல எந்த நிறுவனத்திடம் வீடு வாங்கும் போது வீட்டு கடன் எளிதாக கிடைக்கிறது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
அனைத்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் கம்பெனி விவகாரத்துறையிடம் தங்களது நிதி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு சிறிய தொகையை அமைச்சகத்துக்கு செலுத்தும்பட்சத்தில் நிறுவனத்தின் நிதி நிலை குறித்த தகவல்களை எளிதாக பெற முடியும். ஒரு திட்டம் ஏற்கெனவே தொடங்கி கட்டப்பட்டு வரும்பட்சத்தில், அந்த திட்டத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை எனில், அது போன்ற கட்டுமானத்திட்டங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இதர விஷயங்கள்
இதுவரை அனுபவம் இல்லாத நிறுவனத்திடம் வீடு வாங்குவதாக இருந்தால், அந்த திட்டம் கட்டி முடிக்கப்படும் வரைக்கும் காத்திருத்தல் நல்லது. பிரபலமான நிறுவனமாக இருந்தால் கூட எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் ஒரு ஊரில் வெற்றிகரமாக செயல்பட்ட நிறுவனம் மற்ற ஊரில் சிறப்பாக செயல்பட முடியும் என்று சொல்ல முடியாது. உள்ளூரில் நடக்கும் விஷயங்களை சமாளிக்கும் திறன் அந்த நிறுவனத்துக்கும் இல்லாமல் இருக்கலாம். அதனால் முதல் கட்ட கட்டுமான பணிகள் முடித்த பிறகு வெளியூரில் பிரபலமாக செயல்பட்ட நிறுவனத்தை பரிசீலிக்கலாம்.
அதேபோல தனி வீடு கட்டிக்கொடுக்கும் நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகளை சரியாக கையாளாமல் போகலாம். இதனால் கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் காலதாமதம் ஏற்படும்.
Comments
Post a Comment