வாடிக்கையாளர் யார் பக்கம்?
வாடிக்கையாளர் யார் பக்கம்?
முன்பெல்லாம் நமது வீட்டுக்கு அருகே மளிகை கடைக்குச் சென்று பொருள் வாங்கினால் அதற்கான தொகை அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடன் சொல்லிவிட்டுத்தான் வருவோம். எந்தக் கடையிலும் முன்பணம் கொடுத்து பொருள் வாங்குவதில்லை. மாறாக நாம் கொடுக்க வேண்டிய கடன் தொகைதான் கடைகளில் நிலுவையில் இருக்கும். ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. மாறாக ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் முன்பணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து சில சலுகைகளுடன் பொருட்களை வாங்குவதோ அல்லது சேவைகளையோ பெறும் காலம் தற்போது அதிகரித்துவிட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளை கணக்கில் எடுத்து பார்த்தால் இணையத் தொழில்நுட்பம் சார்ந்த அல்லது ஆன்லைன் நிறுவனங்கள் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளன. குறிப்பிட்ட துறையில் மட்டும் இல்லாமல் தொழில்நுட்பம் மூலம் எப்படி சேவையை வழங்கமுடியும் என்று யோசித்ததன் விளைவாகவே உபெர், ஓலா, பிளிப்கார்ட், அமேசான், ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், ஸொமேட்டோ போன்ற இணையச் சேவை நிறுவனங்கள் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றன.
ஓலா, உபெர் போன்ற நிறுவனங்கள் வாகன போக்குவரத்து சேவையை எளிமைப்படுத்தியிருக்கிறது. பிளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா ஆகிய நிறுவனங்கள் நாம் கடைக்குச் சென்று பொருள் வாங்கும் பழக்கத்தை குறைத்திருக்கின்றன. திரையில் சென்று சினிமா பார்க்கும் பழக்கத்தையே இன்னும் கொஞ்சம் நாளில் மறக்கடிப்பதற்கு ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் வந்துவிட்டன. ஸொமோட்டோ, ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் ஹோட்டல் தொடர்பான தகவல்களை வழங்குவதிலும் வீட்டுக்கே உணவை கொண்டுவந்து தரும் சேவையிலும் முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது.
இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இவை அனைத்தும் நேரடி சேவைகளை வழங்குவதில்லை. மாறாக வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதற்கான தகவல்களை சேகரித்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனால் செயலி மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ தங்களது தொழிலை நடத்தி வரும் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. புதிய தொழில்நுட்பங்களுடன் வருவதால் வாடிக்கையாளரை தக்க வைப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
இதற்காக சில சலுகைகளை நிறுவனங்கள் அவ்வப்போது வழங்கினாலும் வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதிலிருந்து மீள இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாக்கும் உத்தியை தற்போது அமல்படுத்த ஆரம்பித்துள்ளன.
ஹோட்டல் தொடர்பான தகவல்களையும் மற்றும் அதன் சேவைகளையும் வழங்கி வரும் நிறுவனமான ஸொமோட்டா நிறுவனம் சமீபத்தில் `கோல்டு’ உறுப்பினர் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்த திட்டத்தை முதலில் துபாயில் அறிமுகப்படுத்தி சோதனை முயற்சி செய்து பார்த்தது. அதன் பிறகு தற்போது இந்தியாவில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் இணையும் 10,000 உறுப்பினர்களுக்குக் கட்டணம் ரூ.299 என்ற அளவிலேயே நிர்ணயித்திருந்தது. ஒரே நாளில் 10,000 உறுப்பினர்கள் இணைந்துவிட்டனர். மேலும் இந்த திட்டத்தில் இணையும் உறுப்பினர்களுக்கு பல்வேறு ஆபர்களை வழங்கியுள்ளது. உதாரணமாக பிரபல ஹோட்டல்களில் சலுகைகள், குளிர்பானங்களை இலவசமாக வழங்குவது, சில உணவு வகைகளில் தள்ளுபடி போன்றவற்றையும் ஸொமோட்டோ வழங்கியிருக்கிறது.
கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து சில சேவைகளை பெறுவது இந்திய வாடிக்கையாளர்களுக்கு புதிதாக இருந்தாலும் அதற்கு பழகத் தொடங்கிவிட்டனர். புள்ளிவிவரங்களும் நமக்கு அதைத்தான் காட்டுகிறது. ஓலா நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக உள்ளனர். அதிலும் வாடிக்கையாளருக்கு ஏற்ப திட்டங்களை ஓலா நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது. சுற்றுலா சேவை நிறுவனமான மேக் மை டிரிப் நிறுவனத்துக்கு 73,000 வாடிக்கையாளர்கள் கட்டண உறுப்பினர்களாகி உள்ளனர். மற்றொரு சுற்றுலா சேவை நிறுவனமான யாத்ரா நிறுவனத்துக்கு 15,000க்கும் மேற்பட்டோர் கட்டண வாடிக்கையாளராகி உள்ளனர்.
அமேசான் நிறுவனமும் வாடிக்கையாளரை தக்கவைப்பதற்கு பிரைம் என்ற திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. அதாவது இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்துவிட்டால் இலவசமாக திரைப்படங்கள் பார்ப்பது, சில பொருட்களை தள்ளுபடி விலையில் வழங்குவது, பொருட்களை இலவசமாக டெலிவரி செய்வது போன்ற சேவைகளைப் பெற முடியும். இந்த திட்டத்தில் உறுப்பினராவதற்கு கடந்த ஆண்டு ரூ.499 கட்டணமாக பெறப்பட்டது. உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கட்டணம் தற்போது ரூ.999க்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. கட்டணங்கள் உயர்த்தப்பட்டாலும் நாளுக்கு நாள் உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கிறது.
நிறுவனங்களுக்கு என்ன நன்மை?
ஆன்லைன் சேவை அல்லது விற்பனை நிறுவனங்களுக்கு வாடிக்கையாளரை தக்க வைக்க வேண்டும். அதுதான் பிரதான நோக்கம். ஆனால் தற்போது இந்த கட்டண வாடிக்கையாளர் திட்டம் மூலம் ஒரு பெரும் தொகை இந்த நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. மேலும் வாடிக்கையாளரை வெறுமனே தக்கவைப்பதுடன் இல்லாமல் தங்கள் நிறுவனத்தின் விசுவாசமான வாடிக்கையாளரை இதன் மூலம் கண்டறிய முடிகிறது. அவர்களுக்கு முக்கியமாக பல்வேறு சலுகைகளை வழங்க முடியும் என்கின்றனர் நிறுவனர்கள்.
அடுத்து என்ன?
ஒரு பக்கம் தொழில்நுட்பம் மூலம் இந்த நிறுவனங்கள் நம்மை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றாலும் ரீடெய்ல் கடைகள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த நிலை தற்போது ஆன்லைன் நிறுவனங்களுக்கு வந்துவிடுமோ என்ற ஐயமும் எழுகிறது. கட்டண வாடிக்கையாளர் திட்டங்கள் சரியான உத்திதான் என்று சொல்லமுடியாது. இந்த உத்தியில் சில குறைபாடுகளும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக கட்டண வாடிக்கையாளர் திட்டத்தில் இணைபவர்களுக்கு தொடர்ந்து சலுகைகளை வழங்க வேண்டிய தேவையுள்ளது. சலுகைகளை வைத்துக் கொண்டே நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடியுமா? நிறுவனத்தின் முதலீட்டாளர்களின் அழுத்தங்களை எப்படி சமாளிக்கப் போகின்றன என்ற கேள்வியும் எழுகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் கட்டண வாடிக்கையாளர்களை நிர்வகிப்பதும் கடினம். ஏனெனில் உறுப்பினர்கள் அதிகமாக அதிகமாக கட்டணங்களை உயர்த்திக் கொண்டே நிறுவனங்கள் சென்றால் வாடிக்கையாளர்கள் வெளியேறும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.
ஒருபுறம் ஆன்லைன் நிறுவனங்களால் விற்பனை பாதிப்பில் இருக்கும் சில்லரை கடைகள், மறுபுறம் தங்களை எப்படியாவது தற்காத்துக் கொள்ள உத்திகளைக் கடைபிடிக்கும் ஆன்லைன் நிறுவனங்கள். முடிவு வாடிக்கையாளர் யார் பக்கம் என்பதில்தான்....
Comments
Post a Comment