நாராயண மூர்த்திக்கு என்னதான் வேண்டும்?

நாராயண மூர்த்திக்கு என்னதான் வேண்டும்?

வ்வொரு காலாண்டிலும் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவை முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். வழக்கமாக ஒவ்வொரு காலாண்டு முடிவுகளையும் இன்ஃபோசிஸ் நிறுவனம்தான் முதலில் அறிவிக்கும். ஆனால் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் கொஞ்சம் தாமதமாக அக்டோபர் 24-ம் தேதிதான் வெளியானது. தீபாவளி சமயம் என்பதால் இயக்குநர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பதில் தாமதம் என இன்ஃபோசிஸ் முன்னதாக கூறியிருந்தது.
ஆனால், நாராயண மூர்த்தி கூறியிருந்த குற்றச் சாட்டுகளை விசாரிப்பதற்காக கொஞ்சம் கூடுதல் அவகா சம் எடுத்துக்கொண்டனர் என்னும் பேச்சும் இருந்தது. அதனால் காலாண்டு முடிவுகளை விட நாராயணமூர்த்தியின் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் குழு என்ன பதில் சொல்லப்போகிறது என்பதை அனைவரும் ஆர்வமாக கவனித்தனர்.

குற்றச்சாட்டுகள் என்ன?

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. இஸ்ரேலை சேர்ந்த பனாயா நிறுவனத்தை வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறது. எந்த அடிப்படையில் நிறுவனத்தின் முன்னாள் சிஎப்ஓ ராஜீவ் பன்சாலுக்கு வெளியேறும் தொகை வழங்கப்பட்டது என மூர்த்தி கேள்வி எழுப்பினார். இதன் அடுத்த கட்டமாக விஷால் சிக்கா, அப்போது தலைவராக இருந்த ஆர்.சேஷசாயி மற்றும் இயக்குநர் குழு உறுப்பினர்கள் இருவர் வெளியேறினார்கள். அதனை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலகேணி தலைவராக பொறுப்பேற்றார். இதனாலேயே அக்டோபர் 24-ம் தேதி எதிர்பார்ப்பு கூடியது.

எந்த தவறும் இல்லை

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சம்பந்தம் இல்லாத மூன்று வெவ்வேறு நிறுவனங்கள் இந்த ஆய்வினை நடத்தின. இவற்றின் முடிவில் எந்த தவறும் நடக்கவில்லை என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால் நிறுவனத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக நாராயண மூர்த்தி தெரிவித்திக்கிறார். மேலும் தான் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த விஷயங்களில் என்ன நடந்தது என்னும் உண்மை யாருக்கும் தெரியவில்லை என்று தெரிவித்திருகிறார். ஒருவேளை தவறு நடந்திருந்தாலும் இயக்குநர் குழுவால் பொதுவெளியில் அவற்றை வெளி யிட முடியாது. அப்படி வெளியிட்டால் நிறுவனத்தின் இமேஜ் மேலும் சரியும். இதன் காரணமாகவே இயக்குநர் குழு இதனை மூடி மறைத்துவிட்டது என்னும் பேச்சுகளும் இருக்கின்றன.
எந்த தவறும் நடக்கவில்லை என்று கூறிய பிறகு, என்ன காரணத்துக்காக விஷால் சிக்கா மற்றும் சேஷசாயி மீது பொது வெளியில் குற்றங்களை கூறவேண்டும். இதுவரை அவர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம், தற்போது தவறு இல்லை என்னும் பட்சத்தில் அவர்களுக்கு நிறுவனம் என்ன இழப்பீடு (இமேஜினை சரி செய்ய) வழங்கப்போகிறது, சர்ச்சைக்குரிய இந்த காலகட்டத்தில் புதிய சிஇஓ எப்படி சுதந்திரமாக செயல்பாடுவார் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.
இந்த நிலையில் வெளிநாட்டில் இருக்கும் மூர்த்தி இந்தியா திரும்பியவுடன் இந்த பிரச்சினையை எழுப்ப திட்டமிட்டிருக்கிறார் என்று இன்ஃபோசிஸ் முன்னாள் பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். சில அரசியல்வாதிகள் பேசத்தொடங்கினால் அந்த கட்சியின் ஓட்டு வங்கி சரியும் என்பார்கள். அதுபோல நாராயணா மூர்த்தி பேசத் தொடங்கினால் இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவது நிச்சயம். பதவி, பணம், அங்கீகாரம் எதுவும் வேண்டாம் என மூர்த்தி ஏற்கெனவே தெரிவித்து விட்டார். பிறகு அவருக்கு வேறு என்னதான் வேண்டும்?

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்