முதலீடுகளை பாதிக்கும் அச்சுறுத்தல்
முதலீடுகளை பாதிக்கும் அச்சுறுத்தல்
மு
ன்னெப்போதையும்விட சமீப காலத்தில் நாட்டில் வலதுசாரிகளின் அச்சுறுத்தல் தீவிரமாகியுள்ளது. நாட்டின் பல இடங்களில் பண்பாடு கலாசாரம் என்கிற பெயரில் சட்டத்துக்கு புறம்பாக உருவாகியுள்ள குழுக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பல அச்சுறுத்தல்களை உருவாக்குகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும். இது போன்ற சம்பவங்கள் உலக நாடுகளிடையே இந்தியா மீதான நம்பிக்கையை குறைக்கும் செயல் என்றால் மிகையில்லை. இதை உணர்த்தும் விதமாக சமீபத்தில் புதுடெல்லியில் 50 நாடுகளின் தூதர்கள் ஒன்றாக சந்தித்த நிகழ்ச்சியினைப் பார்க்கலாம்.
இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ப சட்ட திட்டங்கள் மாற்றம், அனைத்து துறைகளிலும் அந்நிய முதலீடு உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசு தீவிரமாக இருந்து வருகிறது. மேலும் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள், சரக்கு மற்றும் சேவை வரி சட்ட அமலாக்கம், திவால் மசோதா என அடுத்தடுத்து பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்புடன் இருக்கும் அரசு, மக்களை அச்சுறுத்தும் இது போன்ற குழுக்களை கட்டுப்படுத்துவதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற ஒரு கருத்தும் உருவாகியுள்ளது. ஏனென்றால் இந்த குழுக்கள் மக்கள் மத்தியில் உருவாக்கும் அச்சுறுத்தல் அரசியல், பொருளாதார தளத்திலும் எதிரொலிக்கிறது. இதனால் தொழில்துறைக்கும் தேவையில்லாத இழப்புகள் உருவாகின்றன.
இந்த சந்திப்பு வழக்கமாக நடைபெறுவது அல்ல; பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலைக்கு பின்னர் பாஜக அரசு மீதும், வலதுசாரி செயல்பாடுகள் மீதும் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பின்னர் கூட்டப்பட்டுள்ளது. ஏனென்றால் அரசை விமர்சிப்பவர்கள், வலதுசாரிக்கு எதிரான மாற்று கருத்துடையவர்கள், உணவுக் கட்டுப்பாடுகளை விமர்சிப்பவர்கள் பலரும் இந்த குழுக்களால் அச்சுறுத்தப்படும் , தாக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் கருத்தியல் உள்ளது என்றும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியது பிஜேபியை சேர்ந்த ராம் மாதவ் என்பவரின் இந்தியா பவுண்டேஷன் என்கிற அமைப்பு.
கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு தூதர்களுக்கு பல உத்தரவாதங்களை அளித்துள்ளார். பாஜக அரசை ஆர்எஸ்எஸ் இயக்கவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பை பாஜகவும் இயக்கவில்லை. பாஜக எடுக்கும் முடிவுகளில் தாங்கள் தலையிடுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எவர் மீதும் வெறுப்பை காட்டவில்லை, யாரையும் தூண்டிவிடவில்லை. என்ன உணவை சாப்பிட்டாலும், எதை அணிந்திருந்தாலும் ஏற்றுக் கொள்கிறோம் என்று மோகன் பாகவத் கூறியிருக்கிறார். மத நம்பிக்கை என்கிற வகையில் உணவு மற்றும் ஆடைக் கட்டுப்பாடுகளை நாங்கள் விதிக்கவில்லை என்று பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் அவரிடத்தில் தூதர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு, ஆர்எஸ்எஸ் மற்றும் துணை அமைப்புகள் யாவும் கல்வி, சுகாதாரம் கிராமப்புற மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது என்று மோகன் பாகவத் பதிலளித்துள்ளார். ஏனென்றால் கெளரி லங்கேஷ் படுகொலை ஐநா சபை வரை எதிரொலித்துள்ளது. அமெரிக்க தூதரகம் தனது கண்டனத்தையும், இரங்கலையும் தெரிவித்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் பாதுகாப்பில்லாத நாடாக இந்தியா உலக அரங்கில் தலைகுனிய வேண்டியிருக்கும். இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது என்பதே உண்மை. உணர்ந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
Comments
Post a Comment