சபாஷ் சாணக்கியா: சத்தமிடும் தவளை...
சபாஷ் சாணக்கியா: சத்தமிடும் தவளை...
செ
ன்னையில் எனது நல்ல நண்பர் ஒருவர். அவருக்கு ஒரே மகள். `மணமகன் தேவை' என்று விளம்பரம் கொடுக்கவில்லையே தவிர, அத்தகைய விளம்பரங்களில் குறிப்பிடப்படும் தகுதிகள் பலவும் அமைந்த பெண்.
ஒல்லியாக இருப்பாள், படித்திருந்தாள், அத்துடன் சமையல் தெரியும். ஆமாம், குடும்பப் பாங்கான பெண். மறந்துட்டேனே..வங்கியில் வேலைக்குப் போகிறாள். என்ன அவ்வளவு நிறமில்லை,பெரிய வசதி படைத்தவர்களும் இல்லை.
நண்பரும் அவரது மகளும் மாப்பிள்ளை விஷயத்தில் ஒரே கருத்துடையவர்களாக இருந்தனர். விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தனர். கல்யாண மாலை மோகன் சொல்கிற மாதிரி `சீக்கிரமே நல்ல மருமகன் கிடைப்பான்' என்கிறீர்களா?
ஐயா, உங்கள் கணிப்பு சரி தான். நண்பருக்கு இரு வாரங்களிலேயே அருமையான மாப்பிள்ளை கிடைத்து விட்டார்! அதுவும் சென்னையிலேயே! நல்ல குடும்பம்.பாகுபலி போல ஆஜானுபாகுவான தோற்றம். சிறப்பான உத்தியோகம்.ஆறு இலக்க சம்பளம்! நண்பருக்கு ஏக மகிழ்ச்சி. நிச்சயதார்த்தத்திற்கு நாள் பார்த்தார். இரண்டு மாதம் கழித்துத்தான் தேதி அமைந்தது. ஆனால் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. யாரைப் பார்த்தாலும் அந்த வரப்போகிற மாப்பிள்ளை புராணம் தான்! அப்படி, இப்படி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்!
இதைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் பலர்.பொறாமைப்பட்டவர்கள் சிலர். ஆனால் மாத்தி யோசித்தவர் ஒருவர்! ஆமாம் நம்ம குமார்தான். குமாருக்கும் கல்யாண வயதில் ஒரு பெண். இரு பெண்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஆனால் இந்தப் பெண் சிவப்பு.கொஞ்சம் வசதி படைத்தவர்களும் கூட. குமார் என்ன செய்தார் தெரியுமா?நம்ம நண்பர் பார்த்திருந்த மாப்பிள்ளையின் அப்பாவை கொஞ்சம் கொஞ்சமாக, ஏதேதோ சொல்லி கலைக்கத் தொடங்கினார்!
சீக்கிரமே எல்லாம் மாறி விட்டது.பாவம் நண்பர். அவர் பார்த்து வைத்திருந்த மாப்பிள்ளையை குமார் கொத்திக் கொண்டு போய்விட்டார். உண்மையைச் சொல்லணும் என்றால் மாப்பிள்ளை எப்படி, நல்லவரா, பழக்க வழக்கங்கள் சரியா, பெண்டாட்டியை நல்லா நடத்துபவரா என்று அலசி ஆராய்ந்தவர் நண்பர். அதையெல்லாம் அவர் பெருமையாகக் குமாரிடம் பகிர்ந்து கொண்டு விட்டார். அப்புறம் என்ன? குமாருக்கு வேலை எளிதாகிவிட்டது! நண்பர் ஏமாளியாகி விட்டார்!
இது பல இடங்களில் நடப்பது தான் என்கிறீர்களா? சரி, இதற்கெல்லாம் காரணம் என்ன? குமார் போன்றவர்களின் வஞ்சகம் மட்டுமல்லவே ?அந்த நண்பர் போன்றவர்கள், தம் காரியம் முடிவதற்கு முன்பே அவசரப்பட்டு ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வதும்தானே? தவளை கெடுவது தன் வாயால் தானே?
`காலம் என்பது மாயை, காலமறிதல் என்பது கலை' என்கிறார் ஸ்டீஃபன் ஈமண்ட்ஸ் எனும் சிந்தனையாளர்! பின்னே என்னங்க? இது போட்டியான உலகம்.பலதரப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். கல்யாணம் பேசும் பொழுது தேவையில்லாமல் விஷயங்களைக் கொட்டலாமா?
`என் பெண்ணிற்கு என்னவோ தெரியலை, கல்யாணம் முடியவே மாட்டேங்குது' என்று அநாவசியமாக விளம்பரப் படுத்தலாமா? அதைக் கேட்கிறவர்கள் மற்ற நான்கு பேரிடம் சொல்வார்கள்! அப்புறம் கேட்கவா வேணும்? `அந்தப் பெண்ணிற்கு என்ன குறையென்று தெரியவில்லை. பெற்றவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏதாவது குறை இருக்கும் ...' என்று கதை கட்டி விடுபவர்களும் உண்டு!
ரகசியம் காப்பது, அநாவசியமாக செய்திகளை விளம்பரப்படுத்தாமல் இருப்பது ஒரு விதமான புலனடக்கம்! ஆர்ப்பரிக்கும் மனதைக் கட்டுப்படுத்தணும்.வாயை அடக்கணும்! ஐயன் வள்ளுவர் சொல்வாரே ' கொக்கொக்க கூம்பும் பருவத்து... ' என்று!இந்த மாதிரி அவசரக் குடுக்கையாக இருப்பவர்கள் நிறைய உழைத்தாலும், புத்திசாலியாக இருந்தாலும் எடுத்த பணியை முடிக்காமல்கோட்டை விட்டு விடுவதைப் பார்த்திருப்பீர்களே?
நல்ல இடமாக விலை பேசுவார்கள். முன்பணம் கூடக் கொடுத்து விடுவார்கள்.ஆனால் பதிவு செய்வதற்கு முன்பு வாய் விடுவதால், சொத்து பதிவாகாமல் ஏமாறுவார்கள்!
`உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது முக்கியமில்லை.சரியான நேரமறிந்து பயன்படுத்திக் கொள்வது தான் முக்கியம்!இந்த இணைய உலகத்தில் யார் வேண்டுமானாலும் ஒரே இரவில் பிரபலமாகி விடலாமே!’ என்கிறார் பிரான்கி நக்கில்ஸ் எனும் இசைக் கலைஞர்!
கார் நிறுவனங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தும் முன்பு வாடிக்கையாளர் தேவைகளை , விருப்பங்களை ஆராய்வார்களாம். அதற்குப் பின் அவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து புதிதாக வடிவமைப்பார்களாம்.
நடுவில் வெளியே தெரிந்து விட்டால் போச்சு. போட்டியாளர் முந்திக் கொண்டு விடுவார்! புதிய மாடலின் பெயரைக் கூட ரகசியமாக வைத்து இருப்பார்களாம்! இந்த முறை `Code Word ' எனப்படுமாம்!
ரகசியம் காப்பது அவசியம் என்பதைச் சாணக்கியர் எவ்வளவு அழகாக வலியுறுத்துகிறார் பாருங்கள்! `ஒரு செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டுமெனில், ஒரு கொக்கைப் போலப் புலன்களை அடக்கி, ஏற்ற இடம், காலம் பார்த்து விரைந்து செயல்பட வேண்டும்'
Comments
Post a Comment