அச்சம் என்பது....
அச்சம் என்பது...
`இமாலய சித்தர்கள் ' (The Himalayan Masters) என்று ஒரு புத்தகமுங்க.பண்டிட் ராஜாமணி எழுதியது. சுமார் 5000 ஆண்டுகளாக இமய மலையில் தொடரும் சித்தர்களின் வாழ்க்கை அற்புதங்களை விவரிக்கும் நூல்.அதில் தொடர்புடைய இந்த நிகழ்வைப் பாருங்கள். `மெய் உணர' வேண்டுமென்பதற்காக இமய மலைக்குச் சென்றார் ஓர் இளம் துறவி. காடு மலையெல்லாம் அலைந்து களைத்து விட்டார். தங்க இடம் தேடினார். இருட்டு இறங்கும் நேரம். நிலவு இல்லாத இரவு.அருகில் ஒரு சிறிய குகை மறைவைப் பார்த்தார்.உள்ளே மெதுவாய்ச் சென்றார்.அசதியில் அயர்ந்து படுத்தவர் நன்றாகத் தூங்கியும் விட்டார்!
காலையில் கதிரவனின் கதிர்கள் கண்ணில் விழ விழித்தார். மகிழ்ச்சியில் எழுந்தவர் அருகில் கண்டது இரு சிங்கக் குட்டிகள்! அப்பாடா தப்பித்தோம், பிழைத்தோம் என வெளியில் ஓட நினைத்தால், வாசலை அடைத்துக் கொண்டு நின்றது அக்குட்டிகளின் அப்பா சிங்கம்! அது பிடரியை சிலிர்த்ததும் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது நம்ம துறவிக்கு! அது பார்த்த பார்வையில் அரண்டு போனார்! என்ன செய்வது? எங்கே ஓடுவது?கை கால்கள் நடுங்கின. குப்பென வியர்த்து உடம்பெல்லாம் நனைந்தது. பயம், பதற்றம், பீதி!
அவர் தான் ஞானியாகிக்கொண்டிருந்த துறவி ஆயிற்றே! பயப்படுவதால் ஒரு பயனுமில்லையே என தன்னைத் தானே ஆசுவாசப் படுத்திக் கொண்டார்! பதறிய காரியம் சிதறி விடும் என மனதை அமைதிப் படுத்திக் கொண்டார்! மெதுவாக குகை வாசலை நோக்கி நடந்தார்.சிங்கத்தை விட்டு விலகி மெதுவாக குகையின் சுவரைப் பிடித்துக் கொண்டு வெளியிலும் வந்து விட்டார்! சிங்கம் குகையுனுள் தம் குட்டிகளைப் பார்த்துக் கொஞ்ச சென்று விட்டது!
அண்ணே, துறவிக்கு சிங்கத்தின் மீது பயம் என்றால், சிங்கத்திற்கு அதன் குட்டிகள் பத்திரமாக இருக்கணுமென்ற எண்ணம், கவலை, பயம் இருந்திருக்குமோ?
ஐயா, மனித உணர்ச்சிகளில், அந்த நவபாவங்களில், மிகவும் ஆபத்தானது இந்த பயம் தானே? பின்னே என்னங்க? அச்சம் வந்து விட்டால், அறிவு வேலை செய்யாமல் போய் விடுமே! அப்புறம் குழப்பம் தானே? `இன்றையப் பதற்றம் நாளைய சோகங்களைத் தீர்க்கப் போவதில்லை, ஆனால் அப்பதற்றம் வரப்போகும் கஷ்டங்களை எதிர்கொள்ளும் நமது ஆற்றலை அழித்து விடும் என்பது மட்டும் நிச்சயம்’ என்கிறார் மதபோதகர் சார்லஸ்!
`Live and Let die ' என்று ஒரு ரோஜர் மூரின் ஜேம்ஸ் பாண்ட் படமுங்க. அதில் வில்லன், கதாநாயகனான 007ஐ முதலைகள் சூழ்ந்த ஒரு குளத்தின் நடுவிலுள்ள மணல் திட்டில் விட்டுவிடுவான் ! முதலைகள் ஒவ்வொன்றாய் அவரை நெருங்கும். பாண்ட் பதறாமல், சமயோசிதமாக அந்த முதலைகளின் முதுகின் மேலேயே கால்களை வைத்துத்தாவி ஓடி , தப்பித்தும் விடுவார்!
`பயந்துட்டானா, அப்ப செத்துட்டான்! ' என்று இந்தியில் சொல்வதுண்டு. (ஜோ டர் கயா,வோ மர் கயா!) ஆபத்தான, இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கணுமென்றால், முதலில் அந்தப் பயம் குறித்த எண்ணத்தை விட வேண்டும். அப்பத்தானே அடுத்து என்ன செய்யலாமென்ற யோசனைக்கு வழிவகுக்க முடியும்?
சற்றே சிந்தித்துப் பாருங்கள். பயம் இருவகைப் படும். மேலே கூறிய கதைகளில் வரும் திடீர் பயம் ஒரு வகை. தெருவில் துரத்தும் நாயைப் பார்த்தால், வீட்டினுள் திருடன் இருப்பது தெரிந்தால், மின்னலுடன் கூடிய இடியைக் கேட்டால், தரை வழுக்கினால், இத்யாதி. இவ்வகை பயம் ஓர் ஆபத்தான நிகழ்வு நடந்துவிட்டதன் காரணமாக வருவது! அது, அந்தத் தருணத்தில் திடீரெனத் தோன்றுவது,ஒருவரை முழுவதுமாக வியாபிப்பது, ஆட்கொள்வது! இரண்டாவது வகைப்பயம் ஏதோ கெட்டது நடக்கப் போகிறது, அல்லது நடந்து விடப் போகிறது என்கின்ற எதிர்பார்ப்பில், பதற்றத்தில் வருவது.
தேர்வில் தேற மாட்டோமோ, படித்து முடித்த பின் நல்ல வேலை கிடைக்காதோ, சுகப் பிரசவம் ஆகாதோ, பங்குச் சந்தை இறங்கி நட்டம் வந்துவிடுமோ போன்ற கவலைகளினால் வருவது! இக்கவலைகளில் பல தேவையற்றவை. ஏனெனில் அவை பெரும்பாலும் கற்பனையானவை!
டோரோத்தி எனும் புகழ்பெற்ற மனநல ஆலோசகர் சொல்வதைக் கேளுங்கள். `வாழ்க்கையில் உங்களுக்கு இயற்கையாக நடப்பவை என்பவை 10% தான்! அந்நிகழ்வுகளை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றீர்கள் என்பதில் தான் உங்கள் வாழ்க்கையின் 90% அமைகிறது! ' எவ்வளவு ஆழமான உண்மை இது!
`நாம் வரவிருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் இரு விதமாகக் கையாளலாம். ஒன்று பதற்றப் படலாம். அல்லது தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளலாம்’ என்கிறார் அமெரிக்கச் சிந்தனையாளர் ஹென்றி! மறுக்க முடியுமா? இதனால் தான் சாணக்கியர் `பயம் உன்னை நெருங்கு முன்பே நீ அதை அழித்து விடு' என்று சொல்லி இருக்கிறார்.
Comments
Post a Comment