பணி பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும்
பணி பாதுகாப்பைஉறுதி செய்ய வேண்டும்
தற்போதைய வணிக சூழலில் பணி பாதுகாப்பு எங்கேயும் இல்லை என்பதுதான் நிதர்சனம். சரியாக செயல்படாத ஒருவரை நிறுவனத்தில் இருந்து நீக்குவதையோ அல்லது நிறுவனம் நிதி நெருக்கடியில் இருக்கும் பட்சத்தில் பணியாளர்களை நீக்குவதோ தவறு என்று கூற முடியாது. ஆனால் நிறுவனத்தின் உயரதிகாரிகளின் சம்பளம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் நடுநிலையில் இருக்கும் பணியாளர்களை நீக்குவது சரியா?
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பணியாளருக்கும், மனிதவளப்பிரிவு அதிகாரிக்கும் இடையேயான உரையாடல் சமூக ஊடகங்களில் வெளியானது. 6 நிமிடத்துக்கு மேல் இந்த உரையாடல் நீடித்தது. உரையாடலின் சாராம்சம் இதுதான். உங்களுக்கு நாளை காலை 10 மணி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் நீங்கள் ராஜிநாமா செய்ய வேண்டும். இல்லை எனில் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள். உங்களுக்கு முறையான விடுவிப்பு கடிதம் உள்ளிட்ட எந்த பலன்களும் கிடைக்காது என்கிறார்.
பணியாளரோ தனக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றும் இதுவரை தான் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதாகக் கூறியதை அந்த அதிகாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. செலவு குறைப்பு நடவடிக்கையின் கீழ் நீங்கள் நீக்கப்படுகிறீர்கள். உங்களுக்கு கால அவகாசம் வழங்க முடியாது. இது குறித்து பணியாளர் மேலும் முறையிடவே, உங்களை நீக்குவதற்கான உரிமை நிறுவனத்துக்கு இருக்கிறது. அதனை ஏற்றுக்கொண்டே நீங்கள் இங்கு சேர்ந்தீர்கள். நாளை காலை பத்து மணி வரை உங்களுக்கு அவகாசம் என இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் மன்னிப்பு கோரினார். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிபி குர்நானியும் ட்விட்டரில் கூறினார். ஆனால் வேலை இழப்புகள் இனி தொடராது என யாரும் உறுதியளிக்கவில்லை.
இதில் முரண்நகையாக இன்னொரு விஷயம் சிபி குர்நானியின் சம்பளம். பணியாளர்களை நீக்குவதற்கு சொல்லப்பட்ட காரணம் செலவைக் குறைக்க வேண்டும் என்பது. பணியாளர்களை நீக்கியதற்கு பதிலாக உயரதிகாரிகளின் சம்பளத்தை குறைத்திருக்கலாமே? சிபி குர்நானியின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.150.70 கோடி. (கடந்த காலங்களில் இவருக்கு கிடைத்திருக்கும் பங்குகளை விற்றதன் மூலம் கணிசமான தொகை கிடைத்திருக்கிறது)
டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் ஒட்டு மொத்த இயக்குநர் குழுவை விட கடந்த நிதி ஆண்டில் அதிகம் பெற்றிருக்கிறார் குர்நானி. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் செலவு குறைப்பு என்னும் பட்சத்தில், அந்த சுமையை உயரதிகாரிகள் எடுத்துக்கொள்வதால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால் பணியாளர்களுக்கு வேலை இல்லை என்னும் பட்சத்தில் குடும்பங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பணியாளர்களின் பணி பாதுகாப்பை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மனிதாபிமான கண்ணோட்டம் அவசியம்.
Comments
Post a Comment