மாறும் மக்களின் மனோநிலை
மாறும் மக்களின் மனோநிலை
கா
ர் வைத்திருப்பது கவுரவத்தின் அடையாளம் என்றிருந்த நிலை மாறி, அனைவரும் கார் வாங்கும் நிலை இன்று உருவாகியுள்ளது. சுலப தவணை, நடுத்தர மக்களும் வாங்கும் விலையில் சிறிய ரகக் கார்கள் என பல சாதகமான அம்சங்கள் பலரையும் கார் உரிமையாளராக்கியது.
குறைந்த விலை கார் என்ற பிராண்டில் அறிமுகமான நானோ இன்று மூடுவிழா காணும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்தால், எத்தகைய காருக்கு உரிமையாளர் என்பதை வைத்து அவரை சமூகத்தில் மதிக்கும் போக்கு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. குடும்பத்துக்கு சிறிய ரகக் கார்கள் போதுமானது என்றிருந்த நிலை மாறி இப்போது கவுரவத்தைக் காக்க பெரிய ரகக் காருக்கு மாறும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான கார்களின் விற்பனை 50% அளவுக்கு குறைந்துள்ளதே இதற்கு பிரதான சான்றாகும். 2005-ம் ஆண்டில் சிறிய ரக கார்களின் விற்பனை சந்தை 50.5% என்ற அளவுக்கு இருந்தது. இப்போது 2017-ல் இது 27.5% அளவுக்குக் குறைந்து விட்டது.
அதேசமயம் இந்த காலகட்டத்தில் ரூ. 8 லட்சத்துக்கும் அதிகமான கார்களின் விற்பனை 19 சதவீதத்திலிருந்து 26.5 சதவீதமாக உயர்ந்துவிட்டது.
இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்களின் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்ததும் இதற்குக் காரணமாகும். வாழ்க்கையை வசதியாக வாழ வேண்டும் என்ற மனோநிலை அதிகரித்ததும் இதற்குக் காரணமாகும்.
2005-ல் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சமாக இருந்தவர்களின் விகிதம் 13 சதவீதமாகும். இது தற்போது 24 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாருதி நெக்ஸா
பிரீமியம் ரகக் கார்களை விற்பனை செய்வதற்கென்று மாருதி நிறுவனம் பிரத்யேகமாக நெக்ஸா என்ற பெயரில் விற்பனையகங்களை தொடங்கியுள்ளது. எஸ்-கிராஸ், பலேனோ, இக்னிஸ், சியாஸ், விடாரா பிரீஸா ஆகிய கார்கள் இந்த விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
மாருதி நிறுவனத்தின் சிறிய ரகக் கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அடுத்தகட்டமாக நடுத்தர கார்களை வாங்க நினைக்கும்போது அவர்கள் ஏற்கெனவே தாங்கள் பயன்படுத்தும் கார் வாங்கிய விற்பனையகத்துக்கு செல்வதில்லை. மாறாக நெக்ஸா விற்பனையகங்களுக்குச் செல்கின்றனர். சமீபகாலமாக இத்தகையோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவிக்கிறது.
மாறிவரும் மனோபாவத்தை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள உயர் வகை கார்களுக்கென பிரத்யேக விற்பனையகத்தைத் திறந்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டு வருகிறது மாருதி. இதேபோன்று பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் உயர் ரகக் கார்களுக்கு பிரத்யேக விற்பனையகங்களைத் திறக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
Comments
Post a Comment