அலசல்: அனைவரும் சமமா?

அலசல்: அனைவரும் சமமா?


ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் கடந்த வாரம் ஒரு முக்கியமான மாற்றத்தை செய்தது. நிறுவனத்தில் அதிகாரிகளுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைய, அவர்களின் பதவிகளை டாடா மோட்டார்ஸ் நீக்கியது. பொதுமேலாளர், துணைப்பொது மேலாளர், துணைத் தலைவர் என அனைத்து பதவிகளும் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் 10,000 பணியாளர்களின் பதவிகள் நீக்கப்பட்டிருக்கின்றன.


ஒரு குழுத்தலைவரின் விசிட்டிங் கார்டில், பெயர், தலைவர், பணிபுரியும் பிரிவு ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். குழு உறுப்பினர்களுக்கு பெயர், பணிபுரியும் பிரிவு மட்டுமே அச்சிடப்பட்டிருக்கும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட முக்கிய 10 அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி இருக்கும்.


இதன் மூலம் பணியாளர்கள் தங்களது பதவிகளில் கவனம் செலுத்தாமல் வேலைகளில் கவனம் செலுத்துவார்கள், குழு மனப்பான்மை மற்றும் புதுமைகள் நடக்கும் என நிறுவனம் கருதுகிறது. தவிர இனி பதவி உயர்வுகளும் முற்றிலும் நிறுத்தப்படும், எப்போது உயர் பதவிகள், காலியாகிறதோ அப்போதுதான் நிரப்பப்படும் என என மனித வளப்பிரிவின் தலைவர் கஜேந்திரா எஸ் சந்தேல் தெரிவித்திருக்கிறார்.


மேலோட்டமாக பார்த்தால் மிகவும் சிறப்பான யோசனையாகத் தோன்றும். ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. அனைவரும் சமம் என்பதுதான், நிறுவனம் சொல்ல வரும் சேதி. ஆனால் அனைவரும் சமம் என்னும் போது செய்யும் வேலையை எப்படி மதிப்பிடமுடியும், அதைவிட அனைவரும் சமம் என்னும் பட்சத்தில் எதற்காக ஒருவரின் வேலையை மதிப்பிட வேண்டும்.? ஊதிய உயர்வுக்கு என கூறலாம். ஆனால் இந்தியாவில் சம்பளத்தைவிட பொறுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிறதே?


பதவி உயர்வுகள், உயர் பதவிகளை நோக்கியோ அனைவரின் கவனமும் இருக்கும்போது பதவிகளே இல்லை என்னும் பட்சத்தில் ஊழியர்களுக்கு ஊக்கம் அளிக்ககூடிய விஷயம் எதுவாக இருக்க முடியும்? இதைத் தவிர பதவிகளே இல்லை என்னும் பட்சத்தில் வேறு நிறுவனத்தில் இருந்து புதிதாக ஒருவர் எப்படி வருவார்? தகுதி வாய்ந்த பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்னும் கேள்வி எழுந்தாலும், இது சாத்தியம் என கூறியிருக்கிறார் டாடா மோட்டார்ஸ் மனித வளப்பிரிவு தலைவர் .


வழக்கமான ஊதிய உயர்வு, பணி நீக்கம் ஆகிய சமயங்களில் மட்டும் மனித வள பிரிவினர் மீது விமர்சனங்கள் வருவதுண்டு. ஆனால் இப்போது நிறுவனங்களை மாற்றி அமைக்கும் பணியில் இத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். அனைவரும் சமம் என்பதை இளம் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அனுபவம் மிக்கவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? பதவிகளை நீக்கியது தவறான முன் உதாரணமா? சரியான தொடக்கமா என்பதற்கு காலமே பதில் சொல்லும்

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்

பழச்சாறு தயாரிப்பு!