கல்யாண கடன் வாங்கலாமா?
கல்யாண கடன் வாங்கலாமா?
த
ற்போது விழாக்காலம் மட்டுமல்லாமல் கல்யாண சீசனும் தொடங்கி இருக்கிறது. திருமணத்துக்கு மண்டபங்களை முன்பதிவு செய்வது, உணவுக்கு முன்பதிவு செய்வது, உறவினர்களை அழைப்பது உள்ளிட்ட பல விஷயங்களுக்கு திட்டமிட வேண்டி இருக்கும். இந்த அனைத்து திட்டங்களும் உங்களின் பட்ஜெட்டை பொறுத்துதான் அமையும். ஒரு வேளை நீங்கள் திட்டமிட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்களுக்கு தேவையான தொகைக்கு சிறப்பு கடன் திட்டங்களை வைத்திருக்கின்றன.
தகுதி மற்றும் காலம்
21 வயது முதல் 65 வயது நபர்களுக்கு இந்த கடன் கிடைக்கும். தமக்கு திருமணம் அல்லது திருமணமாகிறவர்களின் பெற்றோர்களுக்கு இந்த வகையான கடன் கிடைக்கும். நீங்கள் பணியாற்றுபவர் என்றால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். தவிர குறைந்தபட்ச சம்பள வரம்பையும் வங்கிகள் நிர்ணயம் செய்திருக்கின்றன. உதாரணத்துக்கு ஆக்ஸிஸ் வங்கி என்றால் குறைந்தபட்சம் ரூ.15,000 சம்பளம் இருக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கியில் ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப சம்பள வரம்பு நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.
பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தில் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை திருமணத்துக்காக கடன் கிடைக்கும். தவிர ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப கடன் தொகை இருக்கும். உதாரணத்துக்கு கார்ப்பரேஷன் வங்கியை எடுத்துக்கொண்டால் மெட்ரோ நகரங்களுக்கு அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும். சிறு நகரங்களில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மட்டுமே கடன் கிடைக்கும். அதுவும் சம்பந்தபட்டவரின் கடன் தகுதிக்கு ஏற்பவே கடன் வழங்கப்படும். அதே சமயம் கடன் வரம்பை உயர்த்துவதற்கு இருவர் இணைந்து கடன் வாங்க இந்த வங்கி அனுமதிக்கிறது. இதனால் கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு இருக் கிறது. டாடா கேபிடல் நிறுவனம் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை திருமண செலவுகளுக்கு கடன் வழங்குகிறது.
கடனை திருப்பி செலுத்தும் கால அளவை பொறுத்தவரை ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனத்துக்கு ஏற்ப மாறுபடும். ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கியை எடுத்துக்கொண்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள். எஸ்பிஐ வங்கியை எடுத்துக்கொண்டால் நான்கு ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். டாடா கேபிடல் மற்றும் கார்ப்பரேஷன் வங்கியில் அதிக தொகை கடனாக வாங்கி இருக்கும் பட்சத்தில் அதிகபட்சம் முறையே 6 மற்றும் 7 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகின்றன.
வட்டி மற்றும் இதர கட்டணங்கள்
தனிநபர் கடனுக்கும், திருமண கடனுக்கும் வட்டி விகிதம் மற்றும் இதர கட்டணங்களில் பெரிய வித்தியாசம் இல்லை. கிட்டத்தட்ட அனைத்தும் ஒன்று போலதான் உள்ளன. வங்கிகளை பொறுத்தவரை 11% முதல் 22% வரை வட்டி வசூலிக்கப்படுகின்றன. டாடா கேபிடலை எடுத்துக்கொண்டால் 11.50% முதல் 19% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. கார்ப்பரேஷன் வங்கி எம்.சி.எல்.ஆர் விகிதத்தை அடிப்படையாக வைத்து வட்டி நிர்ணயம் செய்கிறது. தற்போது அந்த வங்கியின் எம்சிஎல்ஆர் விகிதம் 12.65%. இதிலிருந்து கூடுதலாக 4% வைத்து வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
பரிசீலனை கட்டணத்தை பொறுத்தவரை எஸ்பிஐ மற்றும் பஜாஜ் பின்சர்வ் ஆகியவை 3% வசூலிக்கின்றன. கார்ப்பரேஷன் வங்கி குறைந்தபட்சமாக ஒரு சதவீத வட்டி வசூலிக் கிறது. உங்களின் கடன் தகுதி சிறப்பாக இருந்தால் 1.50 சதவீதம் முதல் 2% வரை பரிசீலனை கட்டணமாக ஆக்ஸிஸ் வங்கி வசூலிக்கிறது. அதேபோல கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தினாலும் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் கார்ப்பரேஷன் வங்கியில் இந்த கட்டணம் கிடையாது.
ஆவணங்கள்
வருமான சான்றிதழ், வங்கி கணக்கு தகவல்கள், அடையாள சான்று, இருப்பிடச் சான்று ஆகியவை தேவை. தவிர திருமண அழைப்பிதழ் அல்லது மண்டபத்தை முன்பதிவு செய்ததற்கான ஆவணம் ஆகியவை வழங்கப்பட வேண்டும். ஒரு வேளை பெற்றோர்கள் இந்த கடனை வாங்குகிறார் என்றால், யாருக்கு திருமணம் அவரின் உறவுமுறை குறித்த சான்றிதழ் அளிக்க வேண்டும். சொந்த தொழில் செய்பவர் என்றால் தொழில் சம்பந்தமான தகவல்கள், வருமான சான்று, வரிசெலுத்திய தகவல் ஆகியவை ஏற்கப்படும்.
கடன் வாங்கலாமா?
தனிநபர் கடனுக்கும், இந்த கடனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதால் தனிநபர் கடன் வாங்குவதே சிறந்தது என லோன்டேப் நிறுவனத்தின் நிறுவனர் விகாஸ் குமார் தெரிவிக்கிறார். திருமணம் என வங்கிகளை அணுகினால், நீங்கள் அவசர தேவையில் இருப்பதால், வட்டியை சிறிதளவு உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. தவிர இதர கட்டணங்களும் உயர்த்தப்படலாம் என்கிறார். தவிர சில நிறுவனங்கள் மட்டுமே இந்த சிறப்பு கடனை வழங்குகின்றன. தனிநபர் கடனை அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வழங்குகின்றன. இதில் பலவகையான வாய்ப்புகளும் இருக்கின்றன என விஷ்பின் டாட் காம் நிறுவனத்தின் சிஇஓ ரிஷி மெஹ்ரா தெரிவிக்கிறார்.
Comments
Post a Comment