சபாஷ் சாணக்கியா: கடலில் பெய்யும் மழை...
சபாஷ் சாணக்கியா: கடலில் பெய்யும் மழை...
நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (Corporate Social Responsiblity/CSR)’ இன்று அதிகமாகப் பேசப்படும் ஒன்று. 2014-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி ரூ.500 கோடி நிகர சொத்து மதிப்பு அல்லது ரூ.1,000 கோடி ஆண்டு பரிவர்த்தனை அல்லது ரூ.5 கோடி நிகர லாபம் ஈட்டும் கம்பெனிகள் , தமது முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி லாபத்தில் 2 சதவீதத்தை சமூகப் பொறுப்புக்குச் செலவிட வேண்டும்! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்தியாவில் இது மாதிரி பல நிறுவனங்கள் இருக்குமே! வர்த்தக நிறுவனங்கள் மக்களிடம் பொருட்களையும் சேவைகளையும் விற்று லாபம் சம்பாதிக்கின்றன. எனவே லாபத்தில் ஒரு சிறு பகுதியை சமூகப் பாதுகாப்பிற்கு, வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டுமென்பது உயரிய நோக்கம் தானே?
எந்த மாதிரி சேவைகள் நிறுவனங்கள் சமூக பொறுப்புகள் ஆகும், எவை ஆகாது என்பதற்கான விளக்கங்கள் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாகச் சொல்ல வேண்டுமெனில், பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் ஆரோக்கியம், இந்திய விளையாட்டுகளின் வளர்ச்சி, கலாசாரப் பாதுகாப்பு ஆகியவை இதில் சேரும். ஆனால் நிறுவனங்களின் ஊழியர்களுக்காகவோ, அவர்களது குடும்பங்களுக்காகவோ செய்யப்படுபவை இதில் சேராது.
2002-ம் ஆண்டிலேயே பஞ்சாப் நேஷனல் வங்கி, டெல்லியில் தொடங்கிய ஹாக்கி அகாடமி இந்த மாதிரியான சேவைக்கு ஓர் உதாரணம். ஆண்களுக்கான ஒலிம்பிக்ஸில் 1928-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை தொடர்ந்து 6 முறை தங்கப் பதக்கம் வென்ற இந்தியா, அதற்குப் பிறகு அதிகம் பிரகாசிக்கவில்லை எனப் பலரும் வருந்தினர்.
நம்மிடம் விளையாட்டைக் கற்றுக் கொண்ட ஐரோப்பியரிடம் நாம் தோற்றுப் போவது என்பது பலரால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது! மீண்டும் நம் நாடு அவ்விளையாட்டில் முந்தைய உச்ச நிலையை அடைய வேண்டுமென விரும்பினர். அதற்கு ஹாக்கி விளையாட்டில் ஆர்வமுடைய 14 முதல் 17 வயதுள்ள 25 இளைஞர்களை சிறுவயதிலேயே அடையாளம் கண்டு தீவிரப் பயிற்சி அளிக்க பிஎன்பி ஹாக்கி அகடாமி எனும் அமைப்பை அந்த வங்கி ஏற்படுத்தியது. அங்கு இலவசமாகத் தங்குவதற்கும், உணவிற்கும் ஏற்பாடு செய்தது. பின்னர் 2004 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட 25 இளைஞர்களுக்கான ஒரு அணிக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இவர்கள் வங்கியின் ஊழியர்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பளமும் அளிக்கப்படுகிறதாம்!
`எல்லாம் சரி, நிறைய செலவாகுமே, பலன் என்ன?’ என்று கேட்கத் தோன்றுகிறதில்லையா?
வியாபாரத்தில், வர்த்தகத்தில் குறிக்கோள்கள் (targets) இருப்பது போல இங்கும் இருக்க வேண்டுமில்லையா?ஆமாம், இவர்களிடம் பயின்ற பிரதீப் மோர் ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கு பெற்றார். 2017 ஜவஹர்லால் கோப்பையையும், சாஸ்திரி கோப்பையையும் வென்றுள்ளனர். ஆனால், இது எல்லா இடங்களிலும் சரியாக நடக்கிறதா என்றால், அதுதான் இல்லை!
ஐஐஎம் உதய்ப்பூர், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றும் நிறுவனங்கள் குறித்து ஓர் ஆய்வு செய்தது. அதில் பங்கு பெற்ற 115 நிறுவனங்களில் 18 சதவீத நிறுவனங்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 2 சதவீத லாபத்தை சமூக பொறுப்புக்குச் செலவிட்டிருந்தனவாம்! இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சில நிறுவனங்களின் தலைவர்கள் இதில் உள்ளன்போடு ஈடுபடுவதில்லை!
கடனே என்று ஏதோ ஒரு என்ஜிஓ அமைப்பை பிடித்து பணத்தைக் கொடுத்து விட்டு மறந்து விடுகிறார்கள்! சில நிறுவன இயக்குநர்களோ இதைப் போலி என்ஜிஓ-க்களுக்குக் கொடுக்கிற மாதிரிக் கொடுத்து, தவறான வழிகளில் பணம் பண்ணுவதும் உண்டாம்!
நிறுவனங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டுமென்பது சட்டம். ஆனால் அவை அளிக்கும் சமூக பொறுப்புக்கு பணத்தைச் செலவு செய்யும் தொண்டு நிறுவனங்களின் கணக்குகள் அவ்வாறு விரிவாகத் தணிக்கை செய்யப்பட வேண்டுமென்ற கட்டாயம் இல்லையாம்! நாட்டில் தர்மம் செய்பவர்கள் குறைவு. எனவே அதற்காகக் கிடைக்கும் பணமும் குறைவு.அந்தப் பணமாவது ஒழுங்காகச் செலவிடப்பட வேண்டுமில்லியா?
2015-ம் ஆண்டுக்கான நிறுவனங்களின் சமூக பொறுப்பு குறித்த ஆய்வின்படி மஹிந்திரா & மஹிந்திரா, டாடா பவர், டாடா ஸ்டீல், எல்&டி, டாடா கெமிக்கல்ஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் உள்ளன!
இந்நிறுவனங்கள் சமூகச் சேவைகளையும் தமது தொழிலைப் போலவே கண்ணும் கருத்துமாய்ச் செய்பவை! சிஎஸ்ஆர்-ஐ ஒழுங்காகப் பயன்படுத்தினால், அது பொதுமக்களுடான உறவுக்கும் நிறுவனங்களின் நன்மதிப்பை உயர்த்துவதற்கும் உதவுமல்லவா?
பின்னர் அதுவே மறைமுகமாக நிறுவனத்தின் விற்பனைக்கும், ஏன் லாபத்திற்கும் கூட வழி வகுக்குமல்லவா? சற்றே சிந்தியுங்கள்.
`தகுதி பார்த்துத்தான் கொடுக்கணும்’ என்பது குடும்பங்களுக்கும் பொருந்தும்! பாடுபட்டுத் தேடிய பணத்தை, நிறுவனத்தை, ஈன்ற நற்பெயரை, சரியில்லாத பிள்ளையிடம் கொடுத்தால் அவையெல்லாம் பாழ்! அவனும் பாழ்!!
சாணக்கியர் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் `உங்கள் செல்வத்தை தகுதி உடையவர்களுக்கே கொடுங்கள்.மேகத்தை அடைந்தால் தானே கடல் நீர் இனிமையாகும்? '
Comments
Post a Comment