இது கையகப்படுத்தல் காலமா...

இது கையகப்படுத்தல் காலமா...

இண்ட்ஸ் இந்த் வங்கி- பாரத் பைனான்ஸ், லுபின்- சிம்பியோமிஸ், ஐடியா - வோடபோன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - டென் நெட்வொர்க்ஸ், ஐடிஎப்சி - ஸ்ரீராம் சிட்டியூனியன் பைனான்ஸ், ரோஸ்நெப்ட்- எஸ்ஸார் ஆயில் இவையெல்லாம் கடந்த சில மாதங்களில் தொழில்துறையில் நிகழ்ந்து வரும் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள். இது தவிர கோடக், விப்ரோ, இன்ஃபோசிஸ் என பல நிறுவனங்களும் தங்களின் தொழில் விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கை முயற்சிகளில் உள்ளன.
இதற்கு முன்னர் இல்லாத வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் இணைப்பு மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்துள்ளன. 2016-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 6,400 கோடி டாலர் மதிப்புக்கு நிறுவனங்களின் கையகப்படுத்தல் நடந்துள்ளது. 2001-க்கு பின்னர் இதுவரை இல்லாத அளவில் இணைப்பு கையகப்படுத்தல் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளன. ஆசிய பசிபிக் பிராந்திய அளவில் கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளில் இந்தியா 9 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் கையகப்படுத்துவதன் மூலம் சந்தையில் போட்டிச் சூழல் குறைந்துவருகிறது என்கிற கருத்து நிலவுகிறது. பெரு நிறுவனங்கள் மட்டுமே இனி நிலைக்க முடியும் என்கிற சூழல் உருவாகி வருகிறது. இது தொழில்துறை வளர்ச்சிக்கு சாதகமானதா என்கிற கேள்வி எழுகிறது.
ஆனால் நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் மூலம் அவற்றின் சேவைகள் விரிவடைகின்றன. மேம்பட்ட பல புதிய சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. இது சந்தைக்கு ஆரோக்கியமானதுதான் என்கிறார் மெர்ஜர்ஸ் அல்லையன்ஸ் நிறுவனத்தின் பில் சீபிரைட்.
இணைப்பு மற்றும் வெளியேறுதல் நடவடிக்கைகள் மூலம் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்பு உருவாகிறது. பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா இந்த விஷயத்தில் மிக வேகமாக உள்ளது. சர்வதேச முதலீட்டு வங்கிகளும், நிறுவனங்களும் இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்வதற்கு விரும்புகின்றன என்கிறது இந்த நிறுவனத்தின் ஆய்வு. பெரும்பாலான இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்வதேச அளவில் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளன. அதேபோல பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் கையகப்படுத்தும் வாய்ப்புகளை நோக்கி இருக்கின்றன என்கிறார் சீபிரைட்.

சர்வதேச முதலீடுகள்

கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் முலம் அந்நிய முதலீடுகளின் வருகை இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது என்கின்றன சர்வதேச முதலீட்டு ஆய்வுகள். 2016-ம் ஆண்டில் மட்டும் இந்த வகையில் 4,400 கோடி டாலர் முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின், 2017-உலக முதலீட்டு அறிக்கைபடி, நாடுகளுக்கிடையிலான நிறுவனங்கள் கையகப்படுத்துதலில் இந்தியாதான் அதிக அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.
2016-ம் ஆண்டில் தெற்காசிய அளவில் கையகப்படுத்தல் வழியான அந்நிய நேரடி முதலீடுகள் 6 சதவீதம் உயர்ந்து 5,400 கோடி டாலராக உள்ளது. இதில் இந்தியா மட்டும் 4,400 கோடி டாலரை ஈர்த்துள்ளது. இந்திய சந்தையில் நாடு கடந்த கையகப்படுத்தல் அதிகரித்துள்ளது என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது.
நாடுகளுக்கிடையிலான நிறுவன கையகப்படுத்தலில் இந்த ஆண்டில் இந்தியாவில் நடந்த மிக முக்கியமான பரிவர்த்தனை எஸ்ஸார் ஆயில். சுமார் 1,300 கோடி டாலருக்கு ரஷ்ய ஆயில் நிறுவனம் எஸ்ஸாரை கையகப்படுத்தியது.

சீன முதலீட்டு நிறுவனங்கள்

இந்திய சந்தையில் இந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்றாலும் பாகிஸ்தானும் இந்த விஷயத்தில் இந்தியாவுடன் போட்டி போடுகிறது. பாகிஸ்தானில் சீன நிறுவனங்கள் அதிக அளவில் இணைப்பு பணிகளை மேற்கொள்கின்றன. அவர்களுக்கு ஒரே பிராந்தியம், ஒரே சாலை வர்த்தகத்துக்கான இந்த முதலீடுகள் தேவையாக உள்ளது.
உலக அளவில் அதிக அந்நிய முதலீடுகளை மேற்கொள்ளும் நாடாக கடந்த சில ஆண்டுகளில் சீனா வளர்ந்துள்ளது. 18,300 கோடி டாலர் முதலீடுகளை சீனா கொண்டு சென்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளிலும் சீன நிறுவனங்களின் கையகப்படுத்தல்கள் நிகழ்ந்து வருகின்றன.

பிரிக்ஸ் நாடுகள்

சர்வதேச ஜிடிபியில் 22 சதவீதத்தை அளிக்கும் பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்க ஆகியவற்றுக்கு அந்நிய முதலீடுகளின் வருகை 11 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்த ஐந்து நாடுகளுக்கும் அந்நிய முதலீடு 7 சதவீதம் அதிகரித்து 27,700 கோடி டாலர்களாக உள்ளது. இதில் பிரேசில் சீனாவைத் தவிர இதர மூன்று நாடுகளும் அதிக முதலீட்டை ஈர்த்துள்ளன.

நிறுவனங்கள் சட்ட திருத்தம்

கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணம் அரசின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுதான். இந்திய தொழில்துறை மற்றும் ஒழுங்குமுறை சட்டங்களில் அரசு பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக அந்நிய முதலீட்டுக் கொள்கைகளிலும் கொண்டு வந்த தளர்வுதான் இவற்றுக்கான அடிப்படை. 2015-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த அந்நிய முதலீட்டை விட 2016-ம் ஆண்டில் சுமார் 62 சதவீதம் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது.
2013-ம் ஆண்டில் நிறுவனங்கள் சட்ட திருத்தத்தை கொண்டுவர அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டில் நிறுவனங்கள் விவகார அமைச்சகம் சுமார் 283 பிரிவுகளில் மிக எளிதாக மாற்றங்களைக் கொண்டு வந்துவிட்டது. தற்போதைய நிலையில் நிறுவனங்கள் சட்டம் 1956-ல் உள்ள அனைத்து பிரிவுகளிலும் கிட்டத்தட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல 2016 ம் ஆண்டு மத்தியில் தேசிய நிறுவன தீர்ப்பாயம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாய நடவடிக்கைகளை கொண்டு வந்ததும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்தன. நிறுவனங்களின் வழக்குகள் இதன் மூலம் உடனுக்குடன் தீர்க்கப்படுகின்றன. இதனால் கார்ப்பரேட் விவகாரங்கள் நீதிமன்றங்களில் தேங்குவதில்லை.
நிறுவனங்கள் சட்ட திருத்தம் 2013-ன்படி இணைப்புகள் மற்றும் கூட்டுசேர்வது, நிறுவனங்கள் பிரிவது, ஒப்பந்தங்களில் சமரசம் போன்றவை எளிதாகியுள்ளன. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதும், வெளியேறுவதும் எளிதாகியுள்ளது. இணைப்பு மற்றும் பிரிதல் நடவடிக்கைகளை குறுகிய காலத்துக்குள் முடிக்கும் விதமாக சட்டத்திருத்தம் கொண்டு வந்ததும் இதற்கு காரணமாக உள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாகத்தான் இந்தியாவில் கையகப்படுத்தல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதி தீவிரமாக உள்ளது. சந்தை போட்டியில் நிறுவனங்களிடையே நிகழும் இந்த போக்கு தவிர்க்க முடியாதது. இது சிறு நிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமா அல்லது பெரு நிறுவனங்களின் ஏகபோகமா என்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்