அரசு கடன் பத்திரங்கள் : பாதுகாப்பான முதலீடு
அரசு கடன் பத்திரங்கள் : பாதுகாப்பான முதலீடு
கடந்த இரு ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு நிதி நிறுவனங்கள் வெளியிட்ட கடன் பத்திரங்கள் தர மதிப்பீட்டு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் பதற்றத்தில் இருக்கின்றனர்.கடன் பத்திர முதலீட்டில் பாதுகாப்பும் அதே சமயத்தில் ஓரளவு லாபமும் அடையவேண்டுமென்றால் ரிசர்வ் வங்கி வெளியிடும் `இந்திய அரசு 8 சதவீத கடன் பத்திரங்கள்-2003ல்’ முதலீடு செய்யலாம்.
தற்போது வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் சூழ்நிலையில், அரசு வெளியிடக் கூடிய கடன் பத்திரங்களுக்கு 8 சதவீத வட்டி விகிதம் என்பது கவரக்கூடியதாக இருக்கிறது. என்எஸ்சி, கேவிபி, அஞ்சலக 5 ஆண்டு டெபாசிட் திட்டம் உட்பட அரசால் வெளியிடப்படும் மற்ற கடன் பத்திரங்கள் ஆகியவை கிட்டத்தட்ட கால வரையறை கொண்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு 8 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி வழங்கப்படுகிறது. 10 முதல் 20 சதவீதம் வரை வரி அமைப்பில் உள்ள முதலீட்டாளர்கள் ஆறு ஆண்டுகளுக்கு தங்களது பணத்தை எடுக்காமல் முதலீடு செய்ய விரும்பினால் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
நன்மைகள்
`8 சதவீத கடன் பத்திரங்கள்-2003’ என்பது மிக பாதுகாப்பான முதலீடு. இந்த பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த கடன் பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய முடியும். எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த கடன் பத்திரங்களின் முகமதிப்பு ரூ.1,000. கடன் பத்திரங்களுக்கான முதிர்வு காலம் ஆறு ஆண்டுகள். இந்த கடன்பத்திரங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கு அதிகபட்ச முதலீடு வரையறை எதுவும் இல்லை. தனிநபர்கள், பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும். இருப்பினும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய முடியாது.
முதலீட்டாளர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இந்த கடன் பத்திர முதலீட்டில் வழங்கப்படுகின்றன. அதாவது கடன் பத்திரங்களின் முதிர்வு காலத்தில் மொத்த முதலீட்டையும் முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக 1,000 ரூபாய் முதலீடு செய்தால், முதலீட்டு தொகை மற்றும் மொத்த வட்டியுடன் சேர்த்து ஆறு ஆண்டுகால முடிவில் 1,601 ரூபாயை பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் இரண்டாவது வாய்ப்பில் நீங்கள் ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும் வட்டித் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். ஆகஸ்ட் 1ம் தேதி மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி என ஆண்டுக்கு இரண்டு முறை வட்டியை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த கடன் பத்திரங்கள் மூலம் வரும் வருவாய் முதலீட்டாளர்களின் வரி அமைப்பை பொறுத்து வரி வருமானத்துக்கு உட்பட்டது. கடன் பத்திரங்கள் மூலம் வரும் வருவாய் ஒரு நிதியாண்டில் ரூ.10,000க்கு அதிகமாக இருந்தால் டிடிஎஸ்-பிடிக்கப்படும். கடந்த 2003-ம் ஆண்டு முதல் 8 சதவீத வட்டி வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி எந்த நேரத்திலும் வட்டி விகிதத்தை மாற்றிக் கொள்ளமுடியும். முதலீடு முதிர்வடைந்த பின்னர் மறுமுதலீடு செய்ய முடியாது.
முதலீட்டாளர்களுக்கு 60 வயதுக்கு மேல் இருந்தால் முதிர்வு காலத்துக்கு முன்பே முதலீட்டை திரும்ப பெற்றுக் கொள்ளமுடியும். ஆனால் இதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 60-70 வயதுள்ள முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்கு பின்பே பணத்தை எடுக்க முடியும். 70-80- வயதுள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்து 4 ஆண்டுகளுக்கு பிறகே பணத்தை எடுக்க முடியும். 80 வயதுக்கு மேல் உள்ள முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து 3 ஆண்டுகளில் பணத்தை பெற்றுக் கொள்ளமுடியும். இருப்பினும், முதிர்வு காலத்துக்கு முன்புக்கு எடுத்தால் ஒரு கடன் பத்திரத்துக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை அபராதம் விதிக்கப்படும்.
எப்படி வாங்குவது?
ரிசர்வ் வங்கி வெளியிடும் கடன் பத்திரங்களை வங்கிகள் மற்றூம் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும். தற்போது வரை ஆன்லைனில் கடன் பத்திரங்களை வாங்க முடியாது. கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது வங்கி கணக்கு விவரங்கள், பான் எண் விவரங்கள், ஆதார் எண், காசோலை ஆகியவை அளிக்க வேண்டும். ரொக்கப்பணம், காசோலை, டிடி ஆகியவற்றை கொடுத்து முதலீடு செய்ய முடியும்.
Comments
Post a Comment