கூகுள் பதில் சொல்ல விரும்பாத கேள்வி..

கூகுள் பதில் சொல்ல விரும்பாத கேள்வி..

கூகுள் ஒவ்வொரு நொடியும் உலகம் முழுவதும் 40 ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்கிறது. ஒரு நாளைக்கு 350 கோடி பதில்கள். ஓராண்டுக்கு ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி பதில்களை தருகிறது. ஆனால் கூகுள் நிறுவனத்திடம் ஒரே ஒரு கேள்வியை கேட்டால் மட்டும் பதில் அளிக்க மாட்டார்கள். அது... கூகுள் நிறுவனம் ஏகபோக வர்த்தகத்துக்கு துணை போகிறதா? என்ற கேள்விதான்.
அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளாக ஏகபோக வர்த்தகத்துக்கு எதிரான பல ஆய்வுகளை மேற்கொண்டவர் பேரி லின். நியூ அமெரிக்கா பவுன்டேஷன் என்ற ஆய்வு அமைப்பின் உறுப்பினர். கூகுள், பேஸ்புக், அமேஸான் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து பல ஆய்வுகளை செய்தவர். இவற்றின் அபார வளர்ச்சியும் பலமும் மற்ற நிறுவனங்களை வளர விடாமல் தடுப்பதாக கருத்துக் கொண்டவர். இந்த கருத்தே இவருடைய வேலைக்கு வேட்டு வைத்துவிட்டது.
கடந்த வாரம் இவரும் இவருடைய சகாக்களும் நியூ அமெரிக்கா ஆய்வு அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தனது இந்த வெளியேற்றத்துக்கு காரணம் கூகுள்தான் என அடித்துக் கூறுகிறார் லின். நியூ அமெரிக்கா அறக்கட்டளைக்கு கடந்த 1999 முதல் இதுவரை 2.10 கோடி டாலர் நன்கொடை அளித்திருக்கிறது கூகுள். இந்த அமைப்பின் கவுரவத் தலைவராகவும் இருந்திருக்கிறார் கூகுள் தலைவர் எரிக் ஸ்மித். இதுபோக, இங்குள்ள கருத்தரங்கு மையத்தின் பெயரே எரிக் ஸ்மித் ஐடியாஸ் லேப். கூகுள் செலவில் உருவான மையம் இது.
``நான் கடந்த 15 ஆண்டுகளாக நியூ அமெரிக்கா அமைப்பில் இருக்கிறேன். கடந்த ஆண்டுதான் பிரச்சினை ஆரம்பமானது. கடந்த ஜூன் மாதம் கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 242 கோடி யூரோ அபராதம் விதித்தது. விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் இந்த அபராதம். இதை வரவேற்று கருத்துத் தெரிவித்தேன். ஐரோப்பிய யூனியனை பின்பற்றி அமெரிக்காவும் விதிமுறைகளை மீறும் மிகப் பெரிய நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். இந்தக் கருத்துதான் எனக்கு ஆபத்தாகி விட்டது'' என்கிறார் லின்.
``கூகுள் நிறுவனத்துடன் நமது உறவை பலப்படுத்தும் விதத்தில் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் இந்த நேரத்தில், இதுபோன்ற கருத்துகள் தேவைதானா... இது நமக்கு வரும் நன்கொடைகளை பாதிக்காதா...'' என நியூ அமெரிக்காவின் தலைமை அதிகாரி ஆனி மேரி ஸ்லாட்டர் லின்னுக்கு மெயில் அனுப்பியிருந்தார். அதோடு, இப்படி எல்லாம் கருத்து தெரிவிப்பது தொடர்ந்தால் எங்களுடைய அத்தனை தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வோம் என கூகுள் மிரட்டியுள்ளது.
ஸ்லாட்டர் அனுப்பியிருந்த மெயில் செய்தியாக நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானது. மறு வாரமே லின்னும் அவரது குழுவினரும் நியூ அமெரிக்கா அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
``பல துறையிலும் சிறந்த அறிஞர்களைக் கொண்ட அமைப்புதான் நியூ அமெரிக்கா. இங்கு யாரும் தைரியமாக தங்கள் கருத்துகளைக் கூறும் சுதந்திரம் இருந்தது. அதனால்தான் இந்த அமைப்பின் பல கருத்துகளில் நம்பகத்தன்மை இருந்தது. ஆனால், நிலைமை இப்போது மாறிவிட்டது. பெரிய அளவில் நன்கொடை அளிக்கும் நிறுவனங்கள், தாங்கள் என்ன விரும்புகிறமோ அதைத்தான் மற்றவர்களும் பேச வேண்டும் என நினைக்க ஆரம்பித்துவிட்டன.
கூகுள் நிறுவனத்தின் கோபத்துக்கு காரணம் இருக்கிறது. சமீப காலமாக, எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் ஓப்பன் மார்க்கெட் கருத்து பலம் பெற்று வருகிறது. அதோடு, கூகுள் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் நிறுவனத்துக்கு எதிரான இதுபோன்ற நிபுணர்களின் கருத்துக்கள் வெளிவராமல் தடுப்பதற்காகவே என்னை வெளியேற்றி இருக்கிறார்கள்'' என்கிறார் லின்.
ஆனால் இதை கூகுளும் நியூ அமெரிக்கா பவுன்டேஷனும் மறுத்துள்ளன. ``லின் வெளியேற்றத்துக்கு நாங்கள் காரணமல்ல.. எங்களுக்கு எதிரான கருத்துகளை லின் வெளியிட்ட பிறகும், இந்த ஆண்டு நாங்கள் கொடுத்த நன்கொடையைக் கொஞ்சம் கூட குறைக்கவில்லை'' எனக் கூறியுள்ளது கூகுள்.
``கடந்த 1999-ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, அமெரிக்கா முழுவதும் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூடப்பட்டன. அதற்கான காரணத்தை ஆராய முற்பட்ட போதுதான், அமெரிக்காவின் அத்தனை கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கும் தேவையான செமி கண்டக்டர்கள் தைவானில் இருந்துதான் இறக்குமதியாவது தெரிந்தது. நில நடுக்கத்தால், மின்சாரம் இல்லாமல் போக, தைவானில் செமி கண்டக்டர் உற்பத்தி அடியோடு நின்றுபோயிருக்கிறது. அது இல்லாமல் எப்படி கம்ப்யூட்டர் உற்பத்தி செய்ய முடியும். அத்தனை நிறுவனங்களும் ஒரே இடத்தில், ஒரு சில நிறுவனங்களிடம் இருந்தே செமி கண்டக்டர்களை வாங்குவது தெரிய வந்தது. தயாரிப்புச் செலவு குறைவு, விலை மலிவு என்பதற்காக, இவ்வாறு உற்பத்தியை ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தன நிறுவனங்கள். இதற்குப் பிறகுதான் இதில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்'' என்கிறார் லின்.
``அமெரிக்காவின் வளர்ச்சிக்குக் காரணமே ஏகபோக வர்த்தக தடுப்புச் சட்டம்தான். யாரும் எந்த வேலையும் பார்க்கலாம், சிறிய நிறுவனத்தை தொடங்கலாம், அதற்குத் தேவையான தகவல்களைப் பெறலாம். இதற்கான சுதந்திரத்தை உறுதி செய்வதே ஏகபோக வர்த்தக தடுப்புச் சட்டம்தான். அதிகாரமும் பணமும் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே இருப்பதை தடுப்பதுதான் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமே. ஆனால் உலகம் முழுவதுமே இது மாறி வருகிறது. இதனால் புதிதாக ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தனித்தனியாக இருந்த மருத்துவமனைகள், மிகப் பெரிய குழுமத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. விமான போக்குவரத்தின் ஏறக்குறைய 80 சதவீதம் 4 விமான நிறுவனங்களின் கையில் இருக்கிறது. இதனால் சந்தையில் போட்டி குறைந்து, இந்த நிறுவனங்கள் வைத்ததுதான் விலை என்ற நிலை உருவாகியுள்ளது. அதோடு நாம் எப்படி வேலை பார்க்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதோடு, நாம் என்ன பேச வேண்டும், நினைக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானிக்க விரும்புகின்றன. இதற்கு எதிராக நடந்தால் வேலை போய் விடும். அதற்கு நான்தான் சமீபத்திய உதாரணம் என்கிறார் லின்.
(இந்தக் கட்டுரைக்கான தரவுகள் அனைத்தும் கூகுள் தேடுதளத்தில் இருந்தே பெறப்பட்டன.)

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்