நோக்கத்தைச் சிதைக்கக் கூடாது
நோக்கத்தைச் சிதைக்கக் கூடாது..
வ
றுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்காக மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணை ந்து பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் இதன் கீழ் பயன்பெறுகின்றனர். இதை முறைப்படுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் பொது விநியோக திட்டத்தின் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியது. குறிப்பாக ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து உணவு வழங்கல் பயனை பெற முடியாது என கூறியது. இதன் பிறகு ஜூன், செப்டம்பர் என அறிவிக்கப்பட்டு, இறுதியாக டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்தது.
இந்த நிலையில் பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பது குறித்து நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆதார் அவசியமா என்பது குறித்து நீதிமன்றம் இறுதி முடிவு எட்டாத நிலையில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் இதை தீவிரமாக கடைபிடிக்கத் தொடங்கின.
மத்திய அரசின் அறிவிப்பை மிகத் தீவிரமாக கடைபிடித்த மாநிலங்களில் ஜார்கண்ட் மாநிலமும் ஒன்று. ஏப்ரல் மாதம் 5-ம் தேதி முதல் ஆதாரை இணைக்காத ரேஷன் கார்டுகளுக்கு உணவுப் பொருள் வழங்க வேண்டாம் என மார்ச் மாதம் 27 தேதி அரசாணை வெளியிட்டுள்ளது ஜார்கண்ட். இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கவில்லை என அங்கு 11.6 லட்சம் ரேஷன் கார்டுகள் பொது விநியோகத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 100 % ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டுவிட்டன என்றும் அறிவித்தது.
ஆனால் இந்த ஆதார் இணைப்பை மிகக் கறாராக முன்னெடுப்பது தவறான முன்னுதாரணம் என்பதை இந்த மாத தொடக்கத்தில், அம்மாநிலத்தில் நடந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. அம்மாநிலத்தின் சிம்டெகா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பதால் உணவுப் பொருள் மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் அவர்களுக்கு சரியான உணவுப் பொருள் கிடைக்காததால் பட்டினி கிடந்த அக்குடும்பத்தின் 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
சரியான பயனாளிகளை அடையாளம் காண்பது என்கிற பெயரில் அரசின் பயன்களை உரியவர்களுக்கு உரிய நேரத்தில் சேர்ப்பதில் ஏற்பட்ட தாமதம்தான் இதற்கு காரணம் என இந்தியா முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான தொழில்நுட்ப கோளாறுகளால்தான் அவர்களுக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு உள்ளூர் வழங்கல் அதிகாரிகள் உடனடியாக மாற்று தீர்வு கண்டிருக்க வேண்டும்.
ஆதார் எண்ணை இணைப்பதில் பல தொழில்நுட்ப கோளாறுகளும் உள்ளன. அதனால் இதன் காரணமாக யாரொருவருக்கும் உணவு பொருட்கள் மறுக்கப்படக்கூடாது என்கிறார் ஆதார் ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே.
இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு பின்னர் ஆதார் எண்ணை இதுவரை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு அதைக் காரணமாக வைத்து உணவுப் பொருட்கள் மறுக்கக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தவிர அடுத்த ஆண்டு மார் 31-ம் தேதி வரை ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளதுடன், அதுவரையில் அரசின் பயன்கள் இதைக் காரணமாகக் காட்டி யாரொருவருக்கும் மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
சரியான பயனளிகளுக்கு அரசின் சலுகைகள் சேர வேண்டும் என்பதுதான் ஆதார் இணைப்பதற்கான நோக்கம். திட்டங்களை சரியாக செயல்படுத்தும் முனைப்பு இருக்கலாம். ஆனால் நோக்கத்தை சிதைப்பதாக செயல்கள் இருக்கக்கூடாது என்பதை அரசும் அதிகாரிகளும் உணர வேண்டும்.
Comments
Post a Comment