இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் கூகுள்
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் கூகுள்
வி
ரல் நுனியில் தகவல்களை வசப்படுத்தியதில் கூகுளுக்குப் பெரும் பங்குண்டு. நாகப்பட்டினத்தின் சந்தனக்கூடு உரூஸாகட்டும், நாஸா அனுப்பும் புதிய ராக்கெட்டாகட்டும் அனைத்து விவரங்களும் உடனுக்குடன் அளிப்பதில் கூகுளுக்கு நிகர் வேறெதுவுமில்லை.
புதிய ஊர்களுக்கு, புதிய இடங்களுக்கு எவரது உதவியும் இல்லாமலேயே போய்ச் சேருவதை சாத்தியமாக்கியுள்ளது கூகுள் மேப். இப்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேக வரைபடத்தை (மேப்) உருவாக்கியுள்ளது கூகுள்.
இந்தியாவில் உள்ள அனைத்து சாலைகளுக்குமான வழிகளை இந்த வரைபடம் காட்டுகிறது. இத்துடன் குரல்வழி உதவியையும் அளிக்கிறது.
ஏற்கெனவே கூகுள் மேப் பயன்பாட்டில் உள்ளது. இதில் காரில் பயணம் செய்தால் எவ்வளவு நேரமாகும், எவ்வளவு தூரம் உள்ளது, ரயில் அல்லது பஸ்ஸில் பயணித்தால் ஆகும் கால அளவையும், நடந்து சென்றால் எவ்வளவு நேரமாகும் என்பதையும் காட்டும். இத்துடன் இப்போது இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு உதவும் வகையிலான வழிகாட்டும் வரைபடமும் உள்ளது.
இந்தியாவில் இரு சக்கர வாகனங்கள் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகம். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இருசக்கர வாகனங்கள் புழக்கத்தில் உள்ளதும் இந்தியாவில்தான். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையிலான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. அவை அனைத்தையும் நிறைவு செய்யும் வகையில் பிரத்யேகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு துணைத் தலைவர் செசார் சென்குப்தா தெரிவித்தார்.
இந்த வரைபடத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குறுக்கு வழிகளும் காட்டப்படுகிறது. அத்துடன் கார், பஸ் உள்ளிட்ட வாகன நெரிசல் இல்லாத வழிகளும் காட்டப்படுவது சிறப்பம்சமாகும். அத்துடன் எந்தெந்த பகுதிகளில் வாகன நெரிசல் இருக்கிறது என்ற விவரமும் இதில் இடம்பெறுகிறது.
மேலும் இந்திய சாலைகளில் உள்ளூரில் பரிச்சயமான முக்கியமான அடையாளங்களும் இதில் உள்ளன. குறிப்பிட்ட இடத்தை இரு சக்கர வாகனத்தில் சென்றடைய எவ்வளவு நேரமாகும் என்ற விவரமும் இதில் இடம்பெற்றிருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.
இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒவ்வொரு முறையும் தங்கள் செல்போனை பார்த்து வழியை அறிந்து செல்வதைவிட இதில் உள்ள குரல்வழி வழிகாட்டுதலின் மூலம் தொடர்ந்து பயணித்து இலக்கை குறித்த நேரத்தில் சென்றடைய முடியும்.
புதிய இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் செல்வோர், அன்றாடம் அலுவல் பணியாக பல்வேறு இடங்களுக்குச் செல்வோருக்கு இந்த கூகுள் வரைபடம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
Comments
Post a Comment