ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் தங்கம் வாங்க பான் கார்டு கட்டாயமில்லை சிறு, குறுந்தொழில் துறையினருக்கு சலுகை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு
ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் தங்கம் வாங்க பான் கார்டு கட்டாயமில்லை சிறு, குறுந்தொழில் துறையினருக்கு சலுகை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிப்பு
டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பங்கேற்ற மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார்.
புதுடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
ஆண்டுக்கு ரூ.1.5 கோடி வருமானம் ஈட்டும் சிறு, குறுந் தொழில் பிரிவினர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரித் தாக்கல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது அனைத்து நிறுவனங்களும் மாதந்தோறும் வரித்தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.
மேலும் தொகுப்பு முறை திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம் உள்ள வர்த்தகர்கள் இனி 1 சதவீதம் வரி செலுத்தினால் போதும். உற்பத்திப் பிரிவில் உள்ளவர்கள் 2 சதவீத வரி செலுத்தினால் போதுமானது. இதேபோல உணவு விடுதியின் ஆண்டு வருமானம் ரூ. 1 கோடி வரை இருந்தால் அவை 5 சதவீத வரி செலுத்தினால் போதும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
இத்தகைய வரம்புக்குள் வரும் வர்த்தகர்கள், சிறு, குறு தொழில் துறையினர், உணவு விடுதி நடத்துவோர் உள்ளீட்டு வரி (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) சலுகையை பெற முடியாது. அதேபோல இத்தகைய பிரிவினருடன் வர்த்தகம் புரிவோரும் உள்ளீட்டு வரிச் சலுகை பெற இயலாது.
இதேபோல உணவகங்களில் விதிக்கப்படும் வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க கொள்கை அளவில் கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது. பெட்ரோலியம் சார்ந்த பொருள்கள் ஜிஎஸ்டி வரம்பிற்கு வெளியே உள்ள தற்போதைய நிலையே தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு (ஜாப் ஒர்க்) விதிக்கப்பட்ட வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல டீசல் இன்ஜின் மீதான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 27 பொருள்கள் மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக இந்தக் கூட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காக்ரா சப்பாத்தி, ஐசிடிஎஸ் ஃபுட் பேக்கேஜஸ், பிராண்டு அல்லாத உப்பு, பிராண்டு அல்லாத ஆயுர்வேத மருந்துகள், கையால் தயாரிக்கப்படும் நூலிழை ஆகியவற்றுக்கு வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கு இ-வாலட் உருவாக்கப்படும். இவர்களுக்கான ஏற்றுமதி சலுகை தொகை இந்த இ-வாலட்டில் சேர்க்கப்படும். இந்த இ-வாலட் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்பாட்டுக்கு வரும். ஏற்றுமதியாளர்களுக்கான வரியை திரும்ப அளிக்கும் பணி அக்டோபர் 10-ல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்தலாம் என்ற வசதியும் அளிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.
ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையில் தங்கம் வாங்குவோர் பான் (நிரந்தர கணக்கு எண்) அட்டை அவசியம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி முறை தளர்த்தப்பட்டுள்ளது. கைவினைப் பொருள்கள் மீதான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment