யுனிடெக் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி: 17 ஆயிரம் பேருக்கு வீடு தருவது யார்?
யுனிடெக் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி: 17 ஆயிரம் பேருக்கு வீடு தருவது யார்?
சமீபகால செய்திகளில் அடிபடும் ஒரே பெயர் யுனிடெக். ரியல் எஸ்டேட் துறையில் பங்குச் சந்தையில் பட்டியலிட்ட இரண்டாவது மிகப் பெரிய நிறுவனம். ``ரியால்டி மொகல்’’, ``பவர் பிராண்ட்’’, ``சூப்பர் பிராண்ட்’’ என்று பிரபலமான அடைமொழிகளோடு அழைக்கப்பட்டதும் இந்நிறுவனம்தான்.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி, அதனால் நிறுவன உரிமையாளர்கள் சிறை சென்ற அவலம், வீடு கிடைக்குமா என்ற பரிதவிப்பில் முதலீட்டாளர்கள் என தொடர்ந்து செய்திகளில் கவனம் ஈர்க்கும் இந்நிறுவனத்தின் வீழ்ச்சிக்கான பின்னணி வித்தியாசமானது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2007-ம் ஆண்டில் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் சந்திரா உரையாற்றுகிறார். டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டுமே செயல்படும் யுனிடெக் நிறுவனம் இந்தியா முழுவதும் கட்டுமான பணிகளில் ஈடுபடப் போவதாகக் குறிப்பிட்டார்.
2007-ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரமேஷ் சந்திரா அவரது இரண்டு மகன்கள் சஞ்சய் சந்திரா, அஜய் சந்திரா குடும்பம் இணைந்துவிட்டது. இக்குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 30 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. நிறுவனத்தின் மதிப்பு ரூ. 1.43 லட்சம் கோடியாக இருந்தது. 2007-08-ம் நிதி ஆண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 1,669 கோடி. வருமானம் ரூ. 4,280 கோடி. நிறுவனம் வசம் உபரியாக ரூ. 3,275 கோடி கையிருப்பில் இருந்தது.
2008-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை உச்சத்தில் இருந்தபோது இந்நிறுவனத்தின் ஒரு பங்கு ரூ.525 என்ற விலையில் வர்த்தகமானது. அப்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.85,236 கோடி.
45 ஆண்டுக்கால பின்னணி
யுனிடெக் நிறுவனம் அதிரடியாக தொடங்கப்பட்ட நிறுவனம் அல்ல. ஐஐடி முன்னாள் மாணவரான ரமேஷ் சந்திரா தனது நண்பர்கள் டாக்டர் எஸ்.பி ஸ்ரீவாஸ்தவா, டாக்டர் பி.கே. மொகந்தி, டாக்டர் ரமேஷ் கபூர், டாக்டர் பாஹ்ரி ஆகியோருடன் சேர்ந்து 1972-ம் ஆண்டு இந்நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் யுனிடெட் டெக்னிக்கல் கன்சல்டன்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மண்வள ஆராய்ச்சியை மட்டுமே மேற்கொண்டது. 1974-ல் இந்நிறுவனம் இன்ஜினீயரிங் ஒப்பந்தங்களை நிறைவேற்றத் தொடங்கியது.
அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 1986-ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் நுழைந்தது. 2000-வது ஆண்டிலிருந்து முழு மூச்சாக ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தியது.
2007-ம் ஆண்டிலிருந்து எல்லாமே திட்டமிட்ட திசையில்தான் யுனிடெக் நிறுவனத்தில் நடந்தது. ரமேஷ் சந்திராவின் மூத்த மகன் சஞ்சய் சந்திரா நிறுவனத்தின் கட்டுமான பணிகள் உள்ளிட்டவற்றை கவனித்துக் கொள்ள இளையமகன் அஜய் சந்திரா நிதி சார்ந்த விஷயங்களை கவனித்துக் கொண்டார்.
வீழ்ச்சி ஆரம்பம்
2009-ம் ஆண்டிலிருந்து நிறுவனத்துக்கு இறங்குமுகம் ஆரம்பமானது. ரியல் எஸ்டேட் துறையில் தேக்க நிலை நிலவியபோது இந்நிறுவனம் நாடு முழுவதும் 14 ஆயிரம் ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தியது. இதற்கு 150 கோடி டாலரை நிறுவன பங்கு வெளியீடு மூலம் திரட்டியது. இது தவிர முதலீட்டாளர்களிடமிருந்து 100 கோடி டாலரை நிறுவனம் திரட்டியது. ஆனால் இவை நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லவில்லை.
ஆசை…
ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்தி வந்த இந்நிறுவனத்துக்கு தொலைத் தொடர்புத் துறையில் ஈடுபடலாம் என்ற ஆசை ஏற்பட்டது.
`முதலில் வருவோருக்கு முன்னுரிமை’, என்ற அடிப்படையில் 2ஜி லைசென்ஸை பெற்றதுதான் இந்நிறுவனத்துக்கு வினையானது. ரூ. 1,650 கோடிக்கு பெற்ற லைசென்ஸை ரூ. 6 ஆயிரம் கோடிக்கு டெலிநார் நிறுவனத்துக்கு விற்றது பிரச்சினையை பெரிதாக்கியது.
2009-ம் ஆண்டில் நார்வேயைச் சேர்ந்த டெலிநார் குழுமத்துடன் இணைந்து யுனிநார் என்ற பெயரில் (யுனிடெக் + டெலிநார்) செல்போன் சேவையை தொடங்கியது.
நாடு முழுவதும் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வெடித்தபோது, அதில் சம்பந்தப்பட்ட சஞ்சய் சந்திரா கைது செய்யப்பட்டார். இதனால் யுனிநார் இயக்குநர் குழுவிலிருந்து அவர் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி அவரை வெளியேற்றியது. இதையடுத்து நிறுவனம் டெலிநார் கைவசமானது. இருப்பினும் அப்போது இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 22 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டன. பிறகு இந்தியாவில் தனது செயல்பாடுகளை முற்றிலுமாக முடித்துக்கொண்டு டெலிநார் நிறுவனம் வெளியேறியது வேறு கதை.
ரியல் எஸ்டேட் துறையில் இருந்த அனுபவம் தொலைத் தொடர்புத் துறையில் இல்லாதது இந்நிறுவனத்தை அதல பாதாளத்துக்கு தள்ளியது.
ஒரு பக்கம் 2-ஜி வழக்கிற்காக ஜெயில் சென்று ஜாமினில் திரும்பிய சஞ்சய் சந்திராவுக்கு போறாத காலம் முதலீட்டாளர்கள் ரூபத்தில் வந்தது. தங்களுக்கு வீடு கட்டித்தரவில்லை என்று முதலீட்டாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நிதி மோசடி வழக்கில் சஞ்சய் சந்திரா மற்றும் அவரது சகோதரர் அஜய் சந்திரா ஆகியோர் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டனர்.
முதலீட்டாளர்கள் நலன் கருதி டெல்லி உயர் நீதிமன்றம் மட்டுமின்றி உச்ச நீதிமன்றமும் சகோதரர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. நிதி நிர்வாகத்தை ஒருவரும் கட்டுமானப் பணியை ஒருவரும் கவனித்து வந்த வரை பிரச்சினையில்லை. அனுபவம் இல்லாத புதிய துறையில் கால் பதித்து இப்போது சகோதரர்கள் இருவருமே ஜெயிலில் வாடுகின்றனர்.
தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,726 கோடிதான். ஒரு பங்கின் விலை ரூ. 6.20 என்ற அளவுக்கு சரிந்துவிட்டது. ஃபோர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற சந்திரா குடும்பம் இப்போது திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
கோடீஸ்வர குடும்பம் திவாலாகலாம். ஆனால் தங்களின் ஆயுள்காலம் முழுவதும் சேமித்த தொகையாவது திரும்பக் கிடைக்குமா என்ற வேதனையில் உழல்கின்றனர் 17 ஆயிரம் முதலீட்டாளர்கள். இவர்களுக்கு கட்டித் தர வேண்டிய வீட்டின் மதிப்பு ரூ. 7,800 கோடி.
நிறுவன செயல்பாடுகள் முழுவதையும் அரசே ஏற்கலாம் என்று தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) கடந்த வாரம் உத்தரவிட்டது. அரசு எடுத்துக்கொள்ளும் என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. நிறுவன பங்கு விலை உயர்ந்தது. ஆனால் தீர்ப்பாய உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து அந்த எதிர்பார்ப்பையும் நிராசையாக்கிவிட்டது.
வீட்டைக் கட்டிப்பார், அப்போதுதான் வீடு கட்டுவது எவ்வளவு கடினம் என்பது புரியும் என்பார்கள். யுனிடெக் நிறுவனத்தில் வீடுகள் வாங்க பணம் செலுத்தியவர்களை கேட்டுப் பாருங்கள், வீடு கட்டுவது மட்டும் கஷ்டமல்ல, அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதும் சிரமம்தான் என்பார்கள்.
சத்யம் வழியில்…
இதற்கு முன்பு சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தில் நிதி மோசடி நிகழ்ந்தபோது அந்நிறுவனத்தை அரசு ஏற்றது. பின்னர் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சிலகாலம் அதை நடத்தி பின்னர் அது மஹிந்திரா டெக் வசம் ஒப்படைக்கப்பட்டு தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் யுனிடெக் நிறுவனத்தை அரசு கையகப்படுத்தினால் இதுபோன்று நிகழும் என்று நிச்சயமாக உறுதியளிக்க முடியாது. ஏனெனில் தகவல் தொழில்நுட்பத் துறை வேறு. ரியல் எஸ்டேட் துறை வேறு. நலிவடைந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களை அரசு எடுத்து நடத்தும் என்ற போக்கு உருவானால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும் என்று இத்துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Comments
Post a Comment